'எனது பேச்சு சலிப்பாக இருக்கிறதா?' பாடகியை கிண்டல் செய்த பிரதமர் மோடி
|தனது பேச்சை தொடர்ந்து கேட்பதால் மக்கள் சலிப்படைந்துள்ளனர் என்று பிரதமர் மோடி கிண்டலாக குறிப்பிட்டார்.
புதுடெல்லி,
டெல்லியில் உள்ள பாரத் மண்டபத்தில் முதல் முறையாக 'தேசிய படைப்பாளிகள் விருதுகள்' வழங்கும் விழா இன்று நடைபெற்றது. இந்த விழாவில் பிரதமர் மோடி கலந்து கொண்டு சிறந்த படைப்பாளிகளுக்கான விருதுகளை வழங்கி கவுரவித்தார்.
அந்த வகையில் பீகார் மாநிலத்தைச் சேர்ந்த 23 வயதான பாடகியும், யூ-டியூபருமான மைதிலி தாக்கூர் என்ற பெண்ணுக்கு இந்த ஆண்டுக்கான 'கலாச்சார தூதுவர்' என்ற விருது வழங்கப்பட்டது. இந்த விருதை வழங்கும்போது, "எப்போதும் எனது பேச்சை தொடர்ந்து கேட்பதால் மக்கள் சலிப்படைந்துள்ளனர். நீங்கள் ஒரு பாடல் பாடுகிறீர்களா?" என்று மைதிலி தாக்கூரிடம் பிரதமர் மோடி கேட்டார்.
இதற்கு மைதிலி, "சரி, பாடுகிறேன்" என்று பதிலளித்தார். இதைக் கேட்ட பிரதமர் மோடி, "அப்படியானால் எனது பேச்சு மக்களுக்கு சலிப்பை ஏற்படுத்துகிறது என்று ஒத்துக்கொள்கிறீர்களா?" என்று கிண்டலாக கேட்டார். இதையடுத்து மைதிலி, "இல்லை, நான் அவ்வாறு கூறவில்லை. மக்களுக்காக பாடுகிறேன் என்றேன்" என்று தெரிவித்தார். தொடர்ந்து அவர் பாடிய பாடலையும் பிரதமர் மோடி ரசித்து கேட்டார். இந்த வீடியோ காட்சி சமூக வலைதளங்களில் தற்போது வைரலாகி வருகிறது.