< Back
தேசிய செய்திகள்
உணவு பொருட்களின் விலை உயர்வு தற்காலிகமானது: மத்திய அரசு விளக்கம்
தேசிய செய்திகள்

உணவு பொருட்களின் விலை உயர்வு தற்காலிகமானது: மத்திய அரசு விளக்கம்

தினத்தந்தி
|
23 Aug 2023 4:38 AM IST

உணவு பொருட்களின் விலை உயர்வு தற்காலிகமானதுதான். வரத்து அதிகரித்தவுடன் விலை குறையும் என்று மத்திய அரசு கூறியுள்ளது.

புதுடெல்லி,

கடந்த ஜூலை மாதத்தில், சில்லரை விலை பணவீக்கம், 7.44 சதவீதமாக இருந்தது. கடந்த 15 மாதங்களில் இதுதான் மிகவும் அதிகம். குறிப்பிட்ட உணவு பொருட்களின் விலை உயர்வுதான், பணவீக்கம் அதிகரிக்க காரணம் ஆகும்.

இந்நிலையில், மத்திய நிதி அமைச்சகம், ஜூலை மாதத்துக்கான மாதாந்திர பொருளாதார ஆய்வறிக்கையை வெளியிட்டது. அதில் கூறப்பட்டு இருப்பதாவது:-

தானியங்கள், பருப்புவகைகள், காய்கறிகள் ஆகியவற்றின் விலை, கடந்த ஜூலை மாதத்தில் இரட்டை இலக்க உயர்வை சந்தித்துள்ளது. உள்நாட்டு உற்பத்தியில் ஏற்பட்ட பாதிப்பு, பணவீக்கத்தை அதிகரித்தது.

தக்காளி, துவரம் பருப்பு

கர்நாடக மாநிலம் கோலாரில் தக்காளியில் ஏற்பட்ட வெள்ளை பூச்சி தாக்குதலால், தக்காளியின் உள்நாட்டு வரத்து பாதிக்கப்பட்டது. வடமாநிலங்களில் பருவமழை முன்கூட்டியே தொடங்கியது. இந்த காரணங்களால் தக்காளி விலை கணிசமாக உயர்ந்தது.

'காரிப்' பருவத்தில் உற்பத்தி குறைந்ததால், துவரம் பருப்பின் விலையும் கடுமையாக உயர்ந்தது. தக்காளி, பச்சை மிளகாய், இஞ்சி, பூண்டு ஆகியவற்றின் விலை 50 சதவீதம் உயர்ந்தது. இதுவே பணவீக்க உயர்வுக்கு காரணம்.

தற்காலிகமானது

அதே சமயத்தில், விலை உயர்வை கட்டுப்படுத்த மத்திய அரசு நடவடிக்கை எடுத்து வருகிறது.

புதிய தக்காளி வரத்து, இம்மாத இறுதியிலோ அல்லது அடுத்த மாத தொடக்கத்திலோ வரத்தொடங்கும். அதன்பிறகு தக்காளி விலை குறையும். எனவே, உணவு பொருட்களின் விலை உயர்வு தற்காலிகமானதுதான்.

இருப்பினும், உலக அளவில் நிச்சயமற்ற நிலை காணப்படுவதாலும், உள்நாட்டு வரத்து பாதிக்கப்பட்டு இருப்பதாலும் வருகிற மாதங்களில் பணவீக்கம் அதிகரிக்கலாம். எனவே, மத்திய அரசும், ரிசர்வ் வங்கியும் கூடுதல் விழிப்புடன் இருக்க வேண்டும்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

மேலும் செய்திகள்