ஜனாதிபதி தேர்தல்: நாடாளுமன்ற வளாகத்தில் வாக்களித்தார் பிரதமர் மோடி
|டெல்லி நாடாளுமன்ற வளாகத்தில் ஜனாதிபதி தேர்தலுக்கான வாக்குப்பதிவை பிரதமர் மோடி உள்ளிட்ட தலைவர்கள் செலுத்தினர்.
புதுடெல்லி,
ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் பதவிக்காலம் வருகிற 24-ந்தேதியுடன் நிறைவடைகிறது. இதையடுத்து புதிய ஜனாதிபதியை தேர்ந்தெடுப்பதற்காக நடத்தப்படும் தேர்தலுக்கான வாக்குப்பதிவு இன்று (திங்கட்கிழமை) நடக்கிறது.
அதன்படி தேசிய ஜனநாயக கூட்டணி (பா.ஜ.க கூட்டணி) வேட்பாளராக திரவுபதி முர்முவும், எதிர்க்கட்சி சார்பில் யஷ்வந்த் சின்காவும் வேட்பாளர்களாக களத்தில் உள்ளனர். நாடு முழுவதும் உள்ள எம்.பி, எம்.எல்.ஏ.க்கள் வாக்குசீட்டு முறையில் புதிய ஜனாதிபதியை தேர்வு செய்ய உள்ளனர்.
எம்.எல்.ஏ.க்கள் ஓட்டு போடுவதற்காக அந்தந்த மாநிலங்களில் உள்ள தலைமை செயலகத்தில் வாக்குப்பதிவுக்கு ஏற்பாடு செய்யப்பட்டு உள்ளது. நாடு முழுவதும் உள்ள 543 மக்களவை எம்.பி.க்களும், 233 மாநிலங்களவை எம்.பி.க்களும் டெல்லியில் உள்ள நாடாளுமன்றத்தில் வாக்களிக்க ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.
இந்நிலையில் டெல்லி நாடாளுமன்ற வளாகத்தில் ஜனாதிபதி தேர்தலுக்கான வாக்குபதிவினை பிரதமர் மோடி செலுத்தினார். அவரைத்தொடர்ந்து மத்திய மந்திரிகள், நாடாளுமன்ற உறுப்பினர்களும் தங்களது வாக்கினை பதிவு செய்தனர்.