ஜனாதிபதி உரை: காங்கிரஸ் அவை தலைவர்கள் பங்கேற்கவில்லை; விமானங்கள் காலதாமதம் என விளக்கம்
|நாடாளுமன்றத்தில் நடைபெறும் ஜனாதிபதி உரையில் காங்கிரஸ் கட்சியின் இரு அவை தலைவர்களும் இன்று பங்கேற்கவில்லை.
புதுடெல்லி,
நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடர் இன்று தொடங்குகிறது. இந்த ஆண்டின் முதல் கூட்டத்தொடரில் இரு அவைகளின் கூட்டு கூட்டத்தில் காலை 11 மணிக்கு ஜனாதிபதி முர்மு உரையாற்றுகிறார்.
நாடாளுமன்ற மைய மண்டபத்தில் நடைபெறும் இந்த கூட்டத்தில் ஜனாதிபதி திரவுபதி முர்மு உரை ஆற்றுகிறார். கடந்த ஆண்டு ஜூலை மாதம் 25-ந்தேதி ஜனாதிபதி பதவி ஏற்று கொண்ட பின்னர், நாடாளுமன்ற கூட்டு கூட்டத்தில் ஜனாதிபதி முர்மு உரை ஆற்றுவது இதுவே முதல் முறை ஆகும். பழைய நாடாளுமன்ற கட்டிடத்தில் இது நடைபெறும் என்று சபாநாயகர் ஓம் பிர்லா அறிவித்துள்ளார்.
முதல் நாளில், 2022-23 முழு நிதி ஆண்டுக்கான பொருளாதார ஆய்வறிக்கையை நிதி மந்திரி நிர்மலா சீதாராமன் தாக்கல் செய்கிறார். அதனால், இக்கூட்டத்தொடர் முக்கியத்துவம் பெறுகிறது.
நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடரை முன்னிட்டு அவையை தொய்வின்றி நடத்தும் நோக்கில், அனைத்து கட்சி கூட்டம் நேற்று காலை நாடாளுமன்ற இல்ல வளாகத்தில் நடந்தது.
இந்த கூட்டத்தில், அவையின் துணை தலைவரான ராஜ்நாத் சிங், நாடாளுமன்ற விவகார மந்திரி பிரகலாத் ஜோஷி, அவை தலைவர் பியூஷ் கோயல், நாடாளுமன்ற விவகார துறை இணை மந்திரி ராம் மேக்வால் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
தி.மு.க. தலைவர் டி.ஆர். பாலு, திரிணாமுல் காங்கிரஸ் தலைவர்களான சுதீப் பந்தோபாத்யாய், சுகேந்து சேகர், டி.ஆர்.எஸ். தலைவர்களான கேசவ ராவ், நாம நாகேஸ்வர ராவ் உள்ளிட்டோரும் கலந்து கொண்டனர்.
எனினும், கூட்டத்தில் காங்கிரஸ் தலைவர்கள் பங்கேற்கவில்லை. இதுபற்றி அரசு கூறும்போது, பாரத் ஜோடோ யாத்திரையில் மல்லிகார்ஜூன கார்கே மற்றும் ஆதிர் ரஞ்சன் சவுத்ரி உள்ளிட்டோர் கலந்து கொண்டுள்ளனர். அதனால், அவர்கள் வரஇயலவில்லை என கூறியுள்ளது.
இந்நிலையில், நாடாளுமன்றத்தில் இன்று நடைபெற கூடிய ஜனாதிபதி உரையில், காங்கிரஸ் கட்சியின் இரு அவை தலைவர்களும் இன்று பங்கேற்கவில்லை.
இதுபற்றி அக்கட்சியின் மூத்த தலைவர் ஜெய்ராம் ரமேஷ் கூறும்போது, ஸ்ரீநகர் விமான நிலையத்தில், தெளிவற்ற வானிலையால் விமானங்கள் காலதாமதமுடன் இயக்கப்பட்டு வருகின்றன.
அதனால், நாடாளுமன்ற மேலவையின் எதிர்க்கட்சி தலைவர் மல்லிகார்ஜூன கார்கே மற்றும் கட்சியின் பல எம்.பி.க்களால், இன்று காலை 11 மணியளவில் நடைபெறும் ஜனாதிபதி உரையில் பங்கேற்க முடியாது என தெரிவித்து உள்ளார்.
இதேபோன்று மக்களவைக்கான காங்கிரஸ் கட்சியின் தலைவர் ஆதிர் ரஞ்சன் சவுத்ரி செய்தியாளர்களிடம் இன்று கூறும்போது, ஸ்ரீநகரில் கடும் பனியால் தெளிவற்ற வானிலை காணப்படுகிறது.
அதனால், நான் ஸ்ரீநகர் விமான நிலையத்தில் சிக்கி கொண்டு வெளியேற முடியாமல் இருக்கிறேன். நாடாளுமன்றத்தில் நடைபெறும் ஜனாதிபதி உரையை நான் தவற விட கூடும். அதனால், எனது ஆழ்ந்த வருத்தங்களை தெரிவித்து கொள்கிறேன். இந்த விசயங்களை சபாநாயகரிடமும் தொடர்பு கொண்டு தெரிவிப்பேன் என கூறியுள்ளார்.