< Back
தேசிய செய்திகள்
மைசூரு தசரா விழாவை தொடங்கி வைத்து ஜனாதிபதி முர்மு பெருமிதம்; நாட்டின் பெருமையை பிரதிபலிக்கிறது
தேசிய செய்திகள்

மைசூரு தசரா விழாவை தொடங்கி வைத்து ஜனாதிபதி முர்மு பெருமிதம்; 'நாட்டின் பெருமையை பிரதிபலிக்கிறது'

தினத்தந்தி
|
27 Sept 2022 2:23 AM IST

பக்தி, ஆன்மிகத்திற்கு பெயர் பெற்றது கர்நாடகம் என்று தசரா விழாவை தொடங்கி வைத்த பிறகு ஜனாதிபதி திரவுபதி முர்மு கூறினார்.

மைசூரு:

தசரா விழா

மைசூரு தசரா விழா உலக புகழ் பெற்றது. 400 ஆண்டுகளுக்கும் மேலாக கொண்டாடப்படும் பாரம்பரிய விழாவாகவும், கர்நாடகத்தின் அடையாளமாகவும் இந்த விழா கருதப்படுகிறது. தசரா விழாவுக்கு என்று பல்வேறு வரலாறுகள், சிறப்புகள் உள்ளன. முன்னொரு காலத்தில் மகிஷாசூரன் எனும் அரசன் கொடுங்கோல் ஆட்சி புரிந்ததாகவும், அந்த மன்னனிடம் இருந்து மக்கள் தங்களை காப்பாற்றும்படி காவல் தெய்வமான சாமுண்டீஸ்வரியிடம் முறையிட்டதாகவும் கூறப்படுகிறது.

அதன்பேரில் கொடுங்கோல் ஆட்சி மன்னனான மகிஷாசூரனிடம் இருந்து மக்களை காக்க வேண்டி சாமுண்டீஸ்வரி அம்மன் அவதாரம் மேற்கொண்டு விஜயதசமி அன்று அவனை வதம் செய்தார். சாமுண்டீஸ்வரி அம்மனின் அந்த வெற்றியையே ஒவ்வொரு ஆண்டும் தசரா விழாவாக மக்கள் கொண்டாடி வருவதாக சொல்லப்படுகிறது.

யது வம்சம்

14-ம் நூற்றாண்டில் விஜயநகர மன்னர்கள் 'மகாநவமி' என்ற பெயரில் தசரா விழாவை கொண்டாடியதாகவும், பின்னர் 1610-ம் ஆண்டு முதல் 'யது' வம்சத்தினரால் தசரா விழா கொண்டாடப்பட்டு வருவதாகவும் வரலாறு கூறுகிறது. முதலில் ஸ்ரீரங்கப்பட்டணாவை தலைமையிடமாக கொண்டு தசரா விழா கொண்டாடப்பட்டது. பின்னர் காலப்போக்கில் மைசூருவை தலைமையிடமாக கொண்டு தசரா விழாவை கொண்டாடி வருகிறார்கள்.

மன்னர்கள் ஆட்சி முடிவுக்கு வந்தபிறகு, கர்நாடகத்தை ஆண்ட அப்போதைய முதல்-மந்திரி தேவராஜ் அர்ஸ் மூலம் தசரா விழா அரசு விழாவாக கொண்டாடப்பட்டது. அன்று முதல் இன்று வரை தசரா விழா அரசு விழாவாக கொண்டாடப்பட்டு வருகிறது. இதுவரையில் 412 முறை தசரா விழா நடந்துள்ளது. தற்போது தொடங்கி உள்ள தசரா விழா 413-ம் ஆண்டு தசரா விழா ஆகும்.

எளிமையாக நடந்தது

கொரோனா காரணமாக கடந்த 2 ஆண்டுகளாக மிகவும் எளிமையாக கொண்டாடப்பட்ட தசரா விழா இம்முறை முன்புபோல் வெகுவிமரிசையாக கொண்டாடப்படும் என்று முதல்-மந்திரி அறிவித்தார். மேலும் தசரா விழாவை ஜனாதிபதி திரவுபதி முர்மு தொடங்கி வைப்பார் என்றும் அறிவிக்கப்பட்டது. அதன்படி நேற்று தசரா விழாவை தொடங்கி வைப்பதற்காக ஜனாதிபதி திரவுபதி முர்மு டெல்லியில் இருந்து தனி விமானம் மூலம் சரியாக 9 மணிக்கு மைசூரு மண்டகள்ளி விமான நிலையத்தை வந்தடைந்தார். அப்போது அவரை முதல்-மந்திரி பசவராஜ் பொம்மை, கவர்னர் தாவர்சந்த் கெலாட் உள்ளிட்டோர் வரவேற்றனர்.

பின்னர் அவர் அங்கிருந்து காரில் சாமுண்டி மலையில் உள்ள சாமுண்டீஸ்வரி கோவிலுக்கு அழைத்துச் செல்லப்பட்டார். அங்கு அவருக்கு மாவட்ட நிர்வாகம் மற்றும் கோவில் நிர்வாகத்தால் சிறப்பான வரவேற்பு அளிக்கப்பட்டது. பின்னர் அவர் கோவிலில் அம்மனுக்கு சிறப்பு பூஜைகள் செய்து சாமி தரிசனம் செய்தார்.

மலர்கள் தூவி...

அதையடுத்து அவர் கோவில் வளாகத்தில் சாமுண்டீஸ்வரி அம்மன் வீற்றிருக்கும் வெள்ளித்தேர் பகுதிக்கு அழைத்துச் செல்லப்பட்டார். மலர்களால் அலங்கரிக்கப்பட்ட வெள்ளித்தேரில் சாமுண்டீஸ்வரி அம்மன் வீற்றிருக்க விருச்சிக லக்கனத்தில் சரியாக காலை 10.05 மணிக்கு அம்மன் மீது மலர்களை தூவுவதன் மூலம் இந்த ஆண்டு தசரா விழாவை ஜனாதிபதி திரவுபதி முர்மு தொடங்கி வைத்தார். பின்னர் குத்து விளக்கையும் ஏற்றி வைத்தார்.

பின்னர் அவர் விழா மேடைக்கு சென்றார். அவருடன் முதல்-மந்திரி பசவராஜ் பொம்மை, கவர்னர் தாவர்சந்த் கெலாட் உள்ளிட்டோரும் சென்றனர். மேடையில் வைத்து ஜனாதிபதி திரவுபதி முர்முவுக்கு முதல்-மந்திரி பசவராஜ் பொம்மை மைசூரு தலைப்பாகை அணிவித்து, நினைவு பரிசாக வெள்ளி சாமுண்டீஸ்வரி அம்மன் சிலையை வழங்கினார். அதையடுத்து விழாவில் ஜனாதிபதி திரவுபதி முர்மு பேசினார். அப்போது முதலில் 'சாமுண்டீஸ்வரிக்கு என் மனப்பூர்வ நமஸ்காரம், எல்லா சகோதர, சகோதரிகளுக்கும் என் இதயப்பூர்வ வணக்கம்' என்று கன்னடத்தில் தனது பேச்சை தொடங்கிய அவர் பின்னர் ஆங்கிலத்தில் பேசினார். அப்போது அவர் கூறியதாவது:-

பெருமை அளிக்கிறது

என்னை தசரா விழாவை தொடங்கி வைக்க அழைத்தமைக்கு நன்றி. இது எனக்கு மிகவும் மகிழ்ச்சியும், பெருமையும் அளிக்கிறது. மைசூரு தசரா விழா நாட்டின் பெருமையை பிரதிபலிக்கிறது. சரித்திரம் மற்றும் வரலாற்று சிறப்புமிக்க விழாவை தொடங்கி வைத்தது எனக்கு மகிழ்ச்சி அளிக்கிறது. இவ்விழா இந்திய கலாசாரத்தி மைல்கல்.

மைசூரு பல்வேறு கலாசாரம், வளர்ச்சிக்கு பெயர் பெற்றது. தாய் சாமுண்டீஸ்வரி அம்மனின் அருள், ஆசி எல்லோருக்கும் கிடைக்கட்டும். இந்த விழா பரம்பரை, பரம்பரையாக கொண்டாடப்பட்டு வருவது ஒரு அதிசயம். ரிஷி முனிவர்கள் சாமுண்டீஸ்வரி அம்மனை வேண்டிய காலம்போய், தற்போது சாதாரண மக்களும் அம்மனை தரிசிக்க வாய்ப்பு கிடைத்துள்ளது.

பசவண்ணர் போராடினார்

கர்நாடகத்தில் சங்கராச்சாரியார் சிருங்கேரியில் மடம் ஒன்றை உருவாக்கினார். பசவண்ணர், ராணி அப்பக்கா தேவி, ஒனகே ஒபவவ்வா, கித்தூர் ராணி சென்னம்மா போன்றோரை கர்நாடகம் கண்டுள்ளது. பக்தி, ஆன்மிக சுதந்திரத்திற்கு பெயர் பெற்றது கர்நாடகம். சாதி, மதம் ஒழிப்புக்காக அனைத்து சாதியினரையும் ஒருங்கிணைத்து பசவண்ணர் போராடினார். இப்படி பல்வேறு சிறப்புமிக்க கர்நாடகத்திற்கு நான் வந்திருப்பது எனக்கு பெருமை அளிக்கிறது. அனைவருக்கும் என் தசரா, நவராத்திரி விழா வாழ்த்துக்கள்.

இவ்வாறு அவர் கூறினார்.

அதைத்தொடர்ந்து விழாவில் முதல்-மந்திரி பசவராஜ் பொம்மை பேசினார். அப்போது அவர் கூறியதாவது:-

மகிழ்ச்சி அளிக்கிறது

உலக புகழ் பெற்ற மைசூரு தசரா விழா இன்று(நேற்று) ஜனாதிபதி திரவுபதி முர்முவால் தொடங்கி வைக்கப்பட்டு உள்ளது. நமது அழைப்புக்கு மதிப்பளித்து அவர் நேரில் வந்து இந்த விழாவை தொடங்கி வைத்தது மகிழ்ச்சி அளிக்கிறது. திரவுபதி முதன்முதலாக கர்நாடகத்திற்கு வந்துள்ளார். ஜனாதிபதி ஒருவர் தசரா விழாவை தொடங்கி வைப்பது இதுவே முதல் முறை.

நாட்டில் நல்லது நடக்க வேண்டும், எல்லோரும் சந்தோஷமாக இருக்க வேண்டும் என்று நான் சாமுண்டீஸ்வரி அம்மனிடம் பிரார்த்தனை செய்துள்ளேன். இந்த ஆண்டு தசரா விழா மிகவும் ஆடம்பரமாகவும், பிரமாண்டமாகவும், வரலாறு காணாத வகையில் கொண்டாடுகிறோம். இதற்கு ஒத்துழைப்பு தந்த அனைவருக்கும் நன்றி.

இவ்வாறு அவர் கூறினார்.

தாய் சாமுண்டீஸ்வரி...

அதைத்தொடர்ந்து விழாவில் பேசிய கவர்னர் தாவர்சந்த் கெலாட் முதலில் கன்னடத்தில் தனது உரையை தொடங்கினார். பின்னர் அவர் பேசியதாவது:-

அனைவருக்கும் தசரா நல்வாழ்த்துக்கள். இந்த ஆண்டு எந்தவித தொந்தரவும் இல்லாமல் விழாவை அமைதியாகவும், வெகு விமரிசையாகவும் கொண்டாடுவோம். 2 ஆண்டுகளுக்கு பிறகு தசரா விழா சிறப்பாக நடக்கிறது. வரலாற்றில் தசரா விழாவுக்கு எப்போதும் முதல் இடம் உண்டு. தாய் சாமுண்டீஸ்வரி அனைவருக்கும் நல்லது செய்யட்டும்.

இவ்வாறு அவர் கூறினார்.

கலந்து கொண்டவர்கள்

விழாவில் மாவட்ட பொறுப்பு மந்திரி எஸ்.டி.சோமசேகர், கன்னட கலாசார துறை மந்திரி சுனில்குமார், மத்திய மந்திரிகள் பிரகலாத் ஜோஷி, ஷோபா, மாவட்ட கலெக்டர் பகாதி கவுதம், மந்திரி சசிகலா ஜோலே மற்றும் எம்.எல்.ஏ.க்கள், பொதுமக்கள் கலந்து கொண்டனர். ஜனாதிபதி வருகையையொட்டி மைசூருவில் சுமார் 4 ஆயிரத்திற்கும் மேற்பட்ட போலீசார் குவிக்கப்பட்டு பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டு இருந்தது.

பட்டுப்புடவை பரிசு

சாமுண்டி மலைக்கு வந்த ஜனாதிபதி திரவுபதி முர்முவுக்கு மைசூரு-சாம்ராஜ்நகர் மாவட்டங்களில் உள்ள ஆதிவாசி மக்கள் தங்கள் கலாசார உடையில் நடனம் ஆடி உற்சாக வரவேற்பு அளித்தனர். பின்னர் மகிஷாசூரன் சிலை அமைந்திருக்கும் இடத்தில் இருந்து, சாமுண்டீஸ்வரி அம்மன் கோவில் வரை அவர்கள் ஜனாதிபதியை மேளதாளங்களுடன் நடனம் ஆடியபடி ஊர்வலமாக அழைத்துச் சென்றனர். மேலும் ஆதிவாசி பெண்கள் ஜனாதிபதிக்கு பட்டுப்புடவை ஒன்றையும் பரிசாக வழங்கினர்.

விசேஷ அலங்காரங்களில் அம்மன்

தசரா விழா தொடங்கியதையொட்டி சாமுண்டீஸ்வரி அம்மன் கோவிலில் நவராத்திரி விழாவும் தொடங்கியது. நேற்று முதல் சாமுண்டீஸ்வரி கோவிலில் சிறப்பு பூஜைகளும், அபிஷேக ஆராதனைகளும் தொடங்கின. நவராத்திரி 9 நாட்களிலும் இந்த சிறப்பு பூஜைகள் நடைபெறுகின்றன. இந்த 9 நாட்களிலும் அம்மன் வெவ்வேறு விசேஷ அலங்காரங்களில் மக்களுக்கு அருள்பாலிக்க உள்ளார்.

மேலும் செய்திகள்