மணிப்பூர் மக்களை ஜனாதிபதி புறக்கணித்துள்ளார் - காங்கிரஸ் எம்.பி. குற்றச்சாட்டு
|மணிப்பூர் குறித்து பிரதமர் மோடி மவுனமாக இருக்கிறார் என்று காங்கிரஸ் எம்.பி. குற்றம் சாட்டியுள்ளார்.
புதுடெல்லி,
பிரதமர் மோடி தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி அரசின் முதலாவது நாடாளுமன்ற கூட்டத்தொடர் கடந்த 24ம் தேதி தொடங்கியது. இரு அவைகளின் கூட்டுக்கூட்டத்தில் ஜனாதிபதி திரவுபதி முர்மு கடந்த 27ம் தேதி உரை நிகழ்த்தினார்.
இதைத்தொடர்ந்து ஜனாதிபதி உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானம் மக்களவையில் நேற்று விவாதத்துக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது. இந்த விவாதத்தை பா.ஜனதா எம் பி அனுராக் தாகூர் தொடங்கி வைத்தார். விவாதத்தில் காங்கிரஸ் மூத்த தலைவர் ராகுல் காந்தி பங்கேற்று பேசினார். அப்போது பா.ஜனதா மற்றும் ஆர்.எஸ்.எஸ். மீது பரபரப்பு குற்றச்சாட்டை தெரிவித்தார். இதற்கு பிரதமர் மோடி, உள்துறை மந்திரி அமித்ஷா ஆகியோர் ஆவேசமாக பதில் அளித்ததால், நாடாளுமன்றத்தில் விவாதம் அனல் பறந்தது.
இந்த நிலையில், இன்று ஜனாதிபதி உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்தின்மீது மக்களவையில் மணிப்பூர் காங்கிரஸ் எம்.பி. அங்கோம்சா பிமோல் அகோய்ஜம் உரையாற்றியதாவது:-
மணிப்பூர் மக்களை முழுவதுமாக தனது உரையில் ஜனாதிபதி புறக்கணித்துள்ளார். மணிப்பூரில் நடக்கும் அவலங்கள் 1947 பிரிவினைபடி வன்முறைகளுக்குச் சமமானது. மக்கள் படும் துயரங்களை இந்த அவையில் சொல்லக் கூட முடியாது. இவ்வளவு நடந்தும் மணிப்பூர் குறித்து பிரதமர் மோடி வாய் திறக்காமல் மவுனமாக இருக்கிறார். எங்கள் மாநிலம் இந்தியாவுக்கு முக்கியம் இல்லை என்பதுபோல மத்திய அரசு நடந்துகொள்கிறது. வடகிழக்கு மாநிலங்கள் இந்திய வரலாற்று புத்தகங்களில் இருந்து புறம்தள்ளப்படுகிறது. இவ்வாறு அவர் கூறினார்.