உத்தரகாண்ட் பனிச்சரிவில் சிக்கி உயிரிழப்பு: ஜனாதிபதி திரவுபதி முர்மு இரங்கல்
|உத்தரகாண்ட் பனிச்சரிவில் சிக்கி உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு ஜனாதிபதி திரவுபதி முர்மு இரங்கல் தெரிவித்துள்ளார்.
புதுடெல்லி,
உத்தரகாண்ட் மாநிலம் உத்தர்காசி மாவட்டத்தில் நேரு மலையேறுதல் நிறுவனம் என்ற அரசு மலையேறுதல் கல்வி பயிற்சி நிறுவனம் உள்ளது. இந்த பயிற்சி நிறுவனத்தை 34 பயிற்சி மலையேறு வீரர்கள் மற்றும் 7 பயிற்சியாளர்கள் என மொத்தம் 41 உத்தர்காசியில் உள்ள இமயமலையின் திரவுபதி கா கண்டா - 2 சிகரத்தில் இருந்து பயிற்சியை முடித்துக்கொண்டு முகாமிற்கு திரும்பிக்கொண்டிருந்தனர்.
அப்போது, மலைச்சிகரத்தின் 16 ஆயிரம் அடி உயரத்தில் இருந்து முகாமிற்கு திரும்பிக்கொண்டிருந்தபோது திடீரென பனிச்சரிவு ஏற்பட்டது. இந்த பனிச்சரிவில் மலையேற்ற வீரர்கள் அனைவரும் சிக்கிக்கொண்டனர். தகவலறிந்த இந்தோ-தீபெத் எல்லைப்பாதுகாப்பு படையினர், தேசிய, மாநில பேரிடர் மீட்புக்குழுவினர் பனிச்சரிவில் சிக்கியவர்களை மீட்டும் பணியில் களமிறங்கினர்.
மீட்பு பணியின் போது பனிச்சரிவில் சிக்கிய பலர் உயிருடன் மீட்கப்பட்டனர். ஆனால், இந்த பனிச்சரிவில் சிக்கி 10 பேர் உயிரிழந்துள்ளதாகவும், 28 பேர் இன்னும் பனிச்சரிவில் சிக்கியுள்ளதாகவும் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். பனிச்சரிவில் சிக்கிய எஞ்சியோரை மீட்கும் பணியில் தேசிய பேரிடர் மீட்புக்குழுவினர் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர்.
இந்நிலையில் உத்தரகாண்ட் பனிச்சரிவில் சிக்கி உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு ஜனாதிபதி திரவுபதி முர்மு இரங்கல் தெரிவித்துள்ளார்.
இதுதொடர்பாக அவர் தனது டுவிட்டரில், "உத்தரகாண்ட் மாநிலம் உத்தரகாசியில் உள்ள நேரு மலையேறும் பயிற்சி நிறுவனத்தில் பனிச்சரிவு காரணமாக பலர் உயிரிழந்த செய்தி மிகவும் வருத்தமளிக்கிறது. அவரை இழந்து வாடும் குடும்பத்தினர் அனைவருக்கும் எனது ஆழ்ந்த அனுதாபங்கள். நிவாரணம் மற்றும் மீட்பு பணிகளில் முழு வெற்றி கிடைக்க இறைவனை பிரார்த்திக்கிறேன்" என்று அதில் திரவுபதி முர்மு பதிவிட்டுள்ளார்.