< Back
தேசிய செய்திகள்
ஜனாதிபதியின் உரை அரசாங்கம் எழுதிக்கொடுத்த பொய்களால் நிரம்பியுள்ளது - எதிர்கட்சிகள் விமர்சனம்Image Courtesy : PTI
தேசிய செய்திகள்

'ஜனாதிபதியின் உரை அரசாங்கம் எழுதிக்கொடுத்த பொய்களால் நிரம்பியுள்ளது' - எதிர்கட்சிகள் விமர்சனம்

தினத்தந்தி
|
27 Jun 2024 11:25 AM GMT

மக்களவையில் ஜனாதிபதி நிகழ்த்திய உரையானது அரசாங்கம் எழுதிக்கொடுத்த பொய்களால் நிரம்பியுள்ளது என எதிர்கட்சி எம்.பி.க்கள் விமர்சித்துள்ளனர்.

புதுடெல்லி,

நாடாளுமன்றத்தில் இன்று ஜனாதிபதி திரவுபதி முர்மு உரையாற்றினார். அப்போது, இந்தியாவில் கடந்த 1975-ம் ஆண்டு அமல்படுத்தப்பட்ட எமர்ஜென்சி குறித்து பேசிய அவர், 'அது ஒரு இருண்ட அத்தியாயம்' என்றும், 'ஜனநாயகத்தின் மீதான நேரடி தாக்குதல்' என்றும் குறிப்பிட்டார். மேலும் அரசியலமைப்புக்கு எதிரான சக்திகளை எதிர்த்து போராடி இந்த நாடு வெற்றி பெற்றது என்று திரவுபதி முர்மு தெரிவித்தார்.

இந்நிலையில் ஜனாதிபதி நிகழ்த்திய உரையானது அரசாங்கம் எழுதிக்கொடுத்த பொய்களால் நிரம்பியுள்ளது என எதிர்கட்சி எம்.பி.க்கள் விமர்சித்துள்ளனர். இது குறித்து செய்தியாளர்களிடம் பேசிய திரிணாமுல் காங்கிரஸ் எம்.பி. மஹுவா மொய்த்ரா, "பா.ஜ.க. அரசாங்கத்திற்கு, தாங்கள் 303 இடங்களில் இருந்து 240 இடங்களாக குறைந்துவிட்டோம் என்பது இன்னும் புரியவில்லை. தங்களிடம் 303 இடங்கள் இருப்பதாக நினைத்துக் கொண்டு அவர்கள் ஜனாதிபதி உரையை எழுதிக் கொடுத்திருக்கிறார்கள்" என்று விமர்ச்சித்தார்.

சமாஜ்வாடி தலைவர் அகிலேஷ் யாதவ் கூறுகையில், "எமர்ஜென்சி காலத்தில் சிறையில் இருந்தவர்களுக்கு பா.ஜ.க. என்ன செய்தது? சமாஜ்வாடி கட்சி அவர்களுக்கு மரியாதையையும், ஓய்வூதியத்தையும் வழங்கியது. இந்தியாவை 5-வது மிகப்பெரிய பொருளாதாரம் என்கின்றனர். ஆனால் நமது நாட்டில் உள்ள விவசாயிகளுக்கு இதனால் பலன் ஏற்பட்டுள்ளதா? நமது இளைஞர்கள் ஏன் வேலைவாய்ப்பு இல்லாமல் இருக்கின்றனர்? ஒரு சில நபர்களின் வளர்ச்சியை ஒட்டுமொத்த நாட்டின் வளர்ச்சியாக கருத முடியாது" என்று தெரிவித்தார்.

சி.பி.ஐ.(மார்க்சிஸ்ட்-லெனினிஸ்ட்) எம்.பி. சுதாமா பிரசாத் செய்தியாளர்களிடம் பேசுகையில், "தற்போது இருப்பது கூட்டணி அரசு. ஆனால் பா.ஜ.க.வினர் இதை பெரும்பான்மை அரசு என்று கூறி வருகின்றனர். ஜனாதிபதி உரையில் மணிப்பூர் பற்றி பேசியிருக்க வேண்டும். அங்கு பெண்கள் நிர்வாணமாக இழுத்துச் செல்லப்பட்டனர். மக்கள் வீடற்றவர்களாக ஆக்கப்பட்டுள்ளனர். மல்யுத்த வீராங்கனைகளுக்கு இன்னும் நீதி கிடைக்கவில்லை. ஜனாதிபதியின் உரை பொய்களால் நிரம்பியுள்ளது" என்று விமர்சித்தார்.

மேலும் செய்திகள்