ஜார்கண்டில் கர்ப்பிணியை கூட்டு பாலியல் பலாத்காரம் செய்த கும்பல் - 6 பேர் கைது
|ஜார்கண்டில் கர்ப்பிணியை கூட்டு பாலியல் பலாத்காரம் செய்த கும்பலைச் சேர்ந்த 6 பேர் கைது செய்யப்பட்டனர்.
ராஞ்சி,
ஜார்கண்டின் பாலமு மாவட்டத்துக்கு உட்பட்ட பகோரியாவை சேர்ந்த 3 மாத கர்ப்பிணி ஒருவர், தனது கணவரிடம் சண்டை போட்டுவிட்டு பெற்றோரின் வீட்டுக்கு சென்று கொண்டிருந்தார். அவரை சமாதானப்படுத்தும் நோக்கில் கணவரும் மற்றொரு உறவினரும் அவளுக்கு பின்னால் சென்று கொண்டிருந்தனர். அப்போது திடீரென அங்கு வந்த 6 பேர் கொண்ட கும்பல் ஒன்று, கணவர் மற்றும் உறவினரை தாக்கி விட்டு கர்ப்பிணியை கடத்தியது. பின்னர் அருகில் உள்ள கல்குவாரிக்கு கொண்டு சென்று கூட்டு பாலியல் பலாத்காரம் செய்தது.
இதனால் அதிர்ச்சியடைந்த கணவர், தங்களை காப்பாற்றுமாறு கூச்சலிட்டார். இதைக்கேட்டு திரண்டு வந்த அப்பகுதி மக்கள், அந்த கும்பலை சேர்ந்த 2 பேரை விரட்டிப்பிடித்து போலீசில் ஒப்படைத்தனர். பின்னர் அவர்கள் அளித்த தகவலின் பேரில் மீதமுள்ள 4 பேரும் கைது செய்யப்பட்டனர்.இந்த கற்பழிப்பு சம்பவம் ஜார்கண்டில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. இந்த சம்பவம் தொடர்பாக மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு நேரடி விசாரணையில் ஈடுபட்டு உள்ளார்.