கட்டிலில் கட்டி வைத்து தீ வைத்த கணவன்.. வயிற்றில் இரட்டைக் குழந்தைகளுடன் துடிதுடித்து இறந்த மனைவி
|நடந்த சம்பவம் தொடர்பாக விரிவான அறிக்கை தாக்கல் செய்யும்படி பஞ்சாப் காவல்துறையிடம் தேசிய மகளிர் ஆணையம் கேட்டுக்கொண்டுள்ளது.
அமிர்தசரஸ்:
பஞ்சாப் மாநிலம் அமிர்தசரஸ் அருகே உள்ள புல்லேநங்கல் கிராமத்தைச் சேர்ந்தவர் சுக்தேவ். இவரது மனைவி பிங்கி (வயது 23). வயிற்றில் இரட்டைக் குழந்தைகள் வளர்ந்த நிலையில், 6 மாத கர்ப்பமாக இருந்த பிங்கி, கொடூரமாக எரித்துக் கொலை செய்யப்பட்டுள்ளார்.
கணவன்-மனைவிக்கிடையே கருத்து வேறுபாடு காரணமாக தொடர்ந்து சண்டை ஏற்பட்டுள்ளது. நேற்று முன்தினமும் (வெள்ளிக்கிழமை) சண்டை ஏற்பட்டுள்ளது. அப்போது, ஆத்திரமடைந்த சுக்தேவ், கர்ப்பிணி என்றும் பாராமல் மனைவியை கட்டிலோடு சேர்த்து கட்டி வைத்து ஈவு இரக்கமின்றி தீ வைத்துள்ளார். இதில் உடல் கருகிய பிங்கி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். இந்த சம்பவத்தைத் தொடர்ந்து தப்பி ஓடி தலைமறைவான சுக்தேவை போலீசார் நேற்று கைது செய்துள்ளனர்.
மேலும் இந்த கொலை தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். நடந்த சம்பவம் தொடர்பாக விரிவான அறிக்கை தாக்கல் செய்யும்படி பஞ்சாப் காவல்துறையிடம் தேசிய மகளிர் ஆணையம் கேட்டுக்கொண்டுள்ளது.
"அமிர்தசரசில் ஒரு நபர் தனது கர்ப்பிணி மனைவியை தீ வைத்து கொடூரமாக எரித்து கொன்ற சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்த கொடூரம் கற்பனை செய்துகூட பார்க்க முடியாத செயல். குற்றவாளியை கைது செய்து மூன்று நாட்களில் அறிக்கை சமர்ப்பிக்குமாறு பஞ்சாப் டி.ஜி.பி.க்கு மகளிர் ஆணைய தலைவர் ரேகா சர்மா கடிதம் எழுதி உள்ளார்" என மகளிர் ஆணையம் தனது எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ளது.