< Back
தேசிய செய்திகள்
அக்னிபத் திட்டம் தொடர்பாக வன்முறை: கர்நாடகத்தில் முன்எச்சரிக்கை நடவடிக்கைகள்-அதிகாரிகளுக்கு உத்தரவு
தேசிய செய்திகள்

அக்னிபத் திட்டம் தொடர்பாக வன்முறை: கர்நாடகத்தில் முன்எச்சரிக்கை நடவடிக்கைகள்-அதிகாரிகளுக்கு உத்தரவு

தினத்தந்தி
|
17 Jun 2022 8:33 PM GMT

அக்னிபத் திட்டம் தொடர்பாக சில மாநிலங்களில் வன்முறை ஏற்பட்டு வரும் நிலையில் கர்நாடகத்தில் முன்எச்சரிக்கை நடவடிக்கைகளை எடுக்கும்படி போலீஸ் அதிகாரிகளுக்கு முதல்-மந்திரி பசவராஜ் பொம்மை உத்தரவிட்டுள்ளார்.

பெங்களூரு

அக்னிபத் திட்டம் தொடர்பாக சில மாநிலங்களில் வன்முறை ஏற்பட்டு வரும் நிலையில் கர்நாடகத்தில் முன்எச்சரிக்கை நடவடிக்கைகளை எடுக்கும்படி போலீஸ் அதிகாரிகளுக்கு முதல்-மந்திரி பசவராஜ் பொம்மை உத்தரவிட்டுள்ளார்.

முதல்-மந்திரி பசவராஜ் பொம்மை டெல்லியில் நேற்று நிருபர்களுக்கு பேட்டி அளிக்கையில் கூறியதாவது:-

ஏராளமான வாய்ப்புகள்

அக்னிபத் திட்டம் தொடர்பாக சில மாநிலங்களில் கலவரம் ஏற்பட்டுள்ளது. இதையொட்டி கர்நாடகத்தில் அத்தகைய வன்முறைகள் ஏற்படாமல் இருக்க தேவையான முன்எச்சரிக்கை நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் என்று உயர் போலீஸ் அதிகாரிகளுக்கு உத்தரவிட்டுள்ளேன். அக்னிபத் திட்டம் சிறப்பானது. 17 முதல் 21 வயது வரை உள்ள இளைஞர்களுக்கு கற்கும் திறன் அதிகமாக இருக்கும்.

அவர்களுக்கு 4 ஆண்டுகள் ராணுவ பயிற்சி கிடைக்கும்போது, அவர்களுக்கு வெளியில் ஏராளமான வேலை வாய்ப்புகள் கிடைக்கும். நல்ல நோக்கத்துடன் இந்த திட்டம் கொண்டு வரப்பட்டுள்ளது. ஒரு பெரிய இளம் சமூகத்திற்கு நல்ல பயிற்சி கிடைக்கும். ஜல்சக்தித்துறை மந்திரி கஜேந்திரசிங் ஷெகாவத்தை நேரில் சந்தித்து பேசினேன். மேகதாது குறித்து பேசினேன். இந்த திட்டத்திற்கு காவிரி மேலாண்மை ஆணைய கூட்டத்தில் விரைவாக அனுமதி வழங்குமாறு கேட்டேன். பத்ரா மேலணை திட்டத்தை தேசிய திட்டமாக அறிவிக்குமாறு வலியுறுத்தினேன்.

ஜி.எஸ்.டி. கவுன்சில் கூட்டம்

சுப்ரீம் கோர்ட்டில் மீண்டும் ஒரு முறை அலமட்டி அணையின் உயரத்தை அதிகரிப்பது தொடர்பாக முறையிடுவது குறித்து ஆலோசித்தேன். நான் முன் வைத்த விஷயங்களில் சாதகமாக முடிவு எடுப்பதாக மத்திய மந்திரி உறுதியளித்தார்.

ஜி.எஸ்.டி. மந்திரிகள் குழு கூட்டம் நடைபெற்றது. இதில் பல்வேறு விஷயங்கள் குறித்து விவாதித்தோம். வருகிற 27-ந் தேதி ஜி.எஸ்.டி. கவுன்சில் கூட்டம் நடக்கிறது. அதில் எனது தலைமையிலான குழுவின் இடைக்கால அறிக்கை தாக்கல் செய்யப்படும்.

இவ்வாறு பசவராஜ் பொம்மை கூறினார்.

மேலும் செய்திகள்