பெண் சீடர் கற்பழிப்பு வழக்கில் சாமியார் ஆசரம் பாபு 'குற்றவாளி'- தண்டனை விவரம் இன்று அறிவிப்பு
|குஜராத் மாநிலத்தை சேர்ந்த பிரபல சாமியார் ஆசரம் பாபு. இவர் தன்னைத்தானே கடவுள் என்று அழைத்துக்கொள்பவர்.
காந்திநகர்,
குஜராத் மாநிலத்தை சேர்ந்த பிரபல சாமியார் ஆசரம் பாபு. இவர் தன்னைத்தானே கடவுள் என்று அழைத்துக்கொள்பவர். இவருக்கு பல இடங்களில் ஆசிரமங்கள் உள்ளன. குஜராத் மாநிலம் ஆமதாபாத் புறநகரில் உள்ள ஆசிரமத்தில், சூரத் நகரை சேர்ந்த ஒரு பெண், சீடராக இருந்தார்.
அவர் ஆசிரமத்திலேயே தங்கி இருந்தார். கடந்த 2001-ம் ஆண்டு முதல் 2006-ம் ஆண்டுவரை சாமியார் ஆசரம் பாபு, தன்னை பல தடவை பாலியல் பலாத்காரம் செய்ததாக கடந்த 2013-ம் ஆண்டு அப்பெண், போலீசில் புகார் செய்தார்.
அதன்பேரில், ஆசரம் பாபு, அவருடைய மனைவி உள்பட 8 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டது. விசாரணையின்போது ஒருவர் இறந்து விட்டார். மீதி 7 பேர் மீதும், குஜராத் மாநிலம் காந்திநகரில் உள்ள செசன்சு கோர்ட்டில் வழக்கு விசாரணை நடந்து வந்தது.
இவ்வழக்கில் நீதிபதி டி.கே.சோனி நேற்று தீர்ப்பு அளித்தார். சாமியார் ஆசரம் பாபு மீதான கற்பழிப்பு, சட்டவிரோதமாக அடைத்து வைத்தல் உள்ளிட்ட குற்றச்சாட்டுகள் நிரூபிக்கப்பட்டதாகவும், அவர் குற்றவாளி என்றும் அறிவித்தார்.
சாமியாரின் மனைவி உள்ளிட்ட 6 பேரையும் நீதிபதி விடுதலை செய்தார். ஆசரம் பாபுவுக்கான தண்டனை விவரம் இன்று (செவ்வாய்க்கிழமை) அறிவிக்கப்படும் என்று நீதிபதி கூறினார். ஆசரம் பாபு, மற்றொரு கற்பழிப்பு வழக்கில் தற்போது ராஜஸ்தான் மாநிலம் ஜோத்பூரில் உள்ள சிறையில் இருக்கிறார்.