மாநில டி.ஜி.பி. பொறுப்பை ஒப்படைத்து விட்டு சி.பி.ஐ. இயக்குனராக விரைவில் பதவி ஏற்பேன்; பிரவீன் சூட் தகவல்
|மாநில போலீஸ் டி.ஜி.பி. பொறுப்பை ஒப்படைத்து விட்டு கூடிய விரைவில் சி.பி.ஐ. இயக்குனராக பதவி ஏற்பேன் என்று பிரவீன் சூட் தெரிவித்துள்ளார்.
பெங்களூரு, மே.18-
மாநில போலீஸ் டி.ஜி.பி. பொறுப்பை ஒப்படைத்து விட்டு கூடிய விரைவில் சி.பி.ஐ. இயக்குனராக பதவி ஏற்பேன் என்று பிரவீன் சூட் தெரிவித்துள்ளார்.
சி.பி.ஐ. இயக்குனர்
கர்நாடக மாநில போலீஸ் டி.ஜி.பி.யாக இருந்து வருபவர் பிரவீன் சூட். இவர் பணியில் இருந்து ஓய்வு பெறுவதற்கு இன்னும் 2 ஆண்டுகள் வரை உள்ளது. அதுவரை மாநில டி.ஜி.பி.யாக இருப்பார் என்று எதிர்பார்க்கப்பட்டது. இந்த நிலையில், கடந்த 6-ந் தேதி சி.பி.ஐ. இயக்குனராக பிரவீன் சூட்டை நியமித்து மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது. கர்நாடகத்தில் காங்கிரஸ் ஆட்சிக்கு வந்துள்ளதாலும், டி.கே.சிவக்குமார் மீது சி.பி.ஐ.யில் வழக்கு உள்ளதாலும், அவருக்கு எதிரான நடவடிக்கைகளை எடுக்க பிரவீன் சூட் இயக்குனராக நியமிக்கப்பட்டுள்ளதாக தகவல் பரவியது.
இந்த நிலையில், கர்நாடக மாநில போலீஸ் டி.ஜி.பி. பிரவீன் சூட் நேற்று 3 டுவிட்டர் பதிவுகளை வெளியிட்டுள்ளார். அதில் அவர் கூறி இருப்பதாவது:-
கூடிய விரைவில் பதவி ஏற்பேன்
நான் கூடிய விரைவில் மாநில டி.ஜி.பி. பொறுப்பை ஒப்படைக்க உள்ளேன். கடந்த 2020-ம் ஆண்டு பிப்ரவரி மாதம் மாநில டி.ஜி.பி.யாக பொறுப்பு ஏற்றேன். டி.ஜி.பி. கர்நாடகம் என்ற டுவிட்டர் பக்கத்தை 1.6 லட்சம் பேர் பின் தொடருகிறார்கள். எனக்கு மதிப்பளித்த அனைவருக்கும் நன்றி தெரிவித்து கொள்கிறேன். டி.ஜி.பி. கர்நாடகம் என்ற டுவிட்டர் பக்கத்தில் நான் செய்யும் கடைசி பதிவு இதுவாகும்.
இனிமேல் எனது சொந்த டுவிட்டர் கணக்கை தொடர உள்ளேன். டி.ஜி.பி. பொறுப்பை ஒப்படைத்து விட்டு கூடிய விரைவில் சி.பி.ஐ. இயக்குனராக பதவி ஏற்பேன். உங்களது அன்புக்கு நன்றி.
இவ்வாறு அவர் கூறியுள்ளார்.