3,500 கி.மீ., 18 மாதங்கள்: நாளை பாத யாத்திரை தொடங்கும் தேர்தல் வியூக நிபுணர் பிரசாந்த் கிஷோர்
|தேர்தல் வியூக நிபுணர் பிரசாந்த் கிஷோர் நாளை பாத யாத்திரை தொடங்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
பாட்னா,
தேர்தல் வியூக நிபுணர் பிரசாந்த் கிஷோர். இவர், தேர்தலில் பல்வேறு கட்சிகளுக்கு பிரசார வியூகங்களை அமைத்துகொடுத்து தேர்தலில் வெற்றிக்கு முக்கிய பங்காற்றியுள்ளார். குறிப்பாக, 2014 நாடாளுமன்ற தேர்தலில் பாஜக வெற்றி, 2021 மேற்குவங்காள தேர்தலில் திரிணாமுல் காங்கிரஸ் வெற்றிக்கு தேர்தல் வியூக நிபுணர் பிரசாந்த் கிஷோரின் நிறுவனம் முக்கிய பங்காற்றியுள்ளது.
இதனிடையே, பீகார் முதல்-மந்திரி நித்திஷ் குமாரின் கட்சியான ஐக்கிய ஜனதா தளத்தில் முக்கிய பொறுப்பில் இருந்த பிரசாந்த் கிஷோர் பின்னர் அக்கட்சியில் இருந்து நீக்கப்பட்டார். இதையடுத்து, அவர் தேர்தல் வியூக நிபுணராக தொடர்ந்து செயல்பட்டு வந்த கிஷோர் பின்னர் தேர்தல் வியூக நிபுணர் வேலையை விட்டுவிட்டு மக்களை சந்திக்க உள்ளதாக கூறி வந்தார்.
இந்நிலையில், பிரசாந்த் கிஷோர் பாதயாத்திரை செல்ல உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. காந்தி ஜெயந்தியான நாளை (அக்.2) பீகார் மாநிலம் மேற்கு சாம்பரன் மாவட்டத்தில் தொடங்க உள்ள இந்த பாத யாத்திரை 3 ஆயிரத்து 500 கிலோ மீட்டர் தொலைவை கடக்க உள்ளது.
ஜன் சுராஜ் என்று பெயரிடப்பட்டுள்ள இந்த யாத்திரையுன் போது பல தரப்பு மக்களையும் பிரசாந்த் கிஷோர் சந்திக்க உள்ளார். இந்த பாத யாத்திரை 12 முதல் 18 மாதங்களுக்கு திட்டமிடப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
ராகுல்காந்தி இந்திய ஒற்றுமை யாத்திரை என்ற பெயரில் பாதயாத்திரையில் ஈடுபட்டு வரும் நிலையில் பிரசாந்த் கிஷோர் ஜன் சுராஜ் என்ற பாதயாத்திரை நடத்த உள்ளது அரசியல் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.