பிரதமர் மோடி 3-வது முறையாக ஆட்சி அமைப்பார் - பிரசாந்த் கிஷோர்
|2019-ம் ஆண்டை விட சற்று அதிகமான இடங்கள் பா.ஜனதாவுக்கு கிடைக்கும் என்று அரசியல் ஆலோசகர் பிரசாந்த் கிஷோர் கூறியுள்ளார்.
புதுடெல்லி,
நாடாளுமன்றத்துக்கு 7 கட்டங்களாக தேர்தல் நடத்த முடிவு செய்யப்பட்டு இதுவரை 5 கட்ட வாக்குப்பதிவு முடிந்து விட்டது. 6-வது கட்டமாக 58 தொகுதிகளுக்கு வரும் 25-ம் தேதியும், கடைசி கட்டமாக 57 இடங்களுக்கு ஜூன் 1-ம் தேதியும் வாக்குப்பதிவு நடைபெற இருக்கிறது. ஜூன் 4-ம் தேதி வாக்குகள் எண்ணப்பட்டு அன்றே முடிவுகள் அறிவிக்கப்பட உள்ளன.
பா.ஜனதா தொடர்ந்து 3-வது முறையாக ஆட்சியை கைப்பற்றும் ஆர்வத்தில் இருக்கிறது. மோடியிடம் இருந்து ஆட்சியை பறிக்கும் வேட்கையில் காங்கிரஸ் தலைமையிலான இந்தியா கூட்டணி இருக்கிறது.
இந்தநிலையில், மோடி 3-வது முறையாக ஆட்சி அமைப்பார் என்று பிரபல அரசியல் ஆலோசகர் பிரசாந்த் கிஷோர் கணித்துள்ளார். இது தொடர்பாக ஆங்கில சேனல் ஒன்றுக்கு அளித்த பேட்டியில் அவர் கூறியதாவது:-
பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான பா.ஜனதா மீண்டும் ஆட்சி அமைக்கும். 2019-ம் ஆண்டில் கிடைத்த அதே எண்ணிக்கை அல்லது அதைவிட சற்று அதிகமான எண்ணிக்கையில் ஆட்சிக்கு வரும். பா.ஜனதாவுக்கு சவால் விடும் வகையில் போட்டியாளர்கள் இல்லை. நிலைத்தன்மை சலிப்பை ஏற்படுத்தலாம். எனவே நான் சொல்வது உங்களுக்கு சலிப்பாக தோன்றலாம்.
பா.ஜனதா ஆட்சியில் மக்கள் ஏமாற்றம் அடைந்து இருக்கலாம். ஆனால் பிரதமர் நரேந்திரமோடிக்கு எதிராக பரவலான கோபத்தை நாங்கள் கேள்விபட்டதே இல்லை. மேற்கு மற்றும் வடக்கில் பா.ஜனதாவுக்கு எந்தவிதமான பாதிப்பும் ஏற்பட்டதாக தெரியவில்லை.
இவ்வாறு பிரசாந்த் கிஷோர் கூறியுள்ளார்.