பிரான் பிரதிஷ்டா: பாபரின் காலத்தில் நம் இதயத்தில் ஏற்பட்ட காயத்தை இந்த நிகழ்வு தைத்துள்ளது - அமித் ஷா
|உலகம் முழுவதும் உள்ள ராமர் பக்தர்கள் இந்த தருணத்திற்காக கடந்த 500 ஆண்டுகளாக காத்திருந்ததாக உள்துறை மந்திரி அமித் ஷா தெரிவித்துள்ளார்.
ஆமதாபாத்,
அயோத்தியில் புதிதாகக் கட்டப்பட்ட ராமர் கோவிலின் கும்பாபிஷேகம் சுமார் 500 ஆண்டுகளுக்கு முன்பு முகலாய ஆட்சியாளர் பாபரின் காலத்தில் ஏற்பட்ட ஆழமான காயத்தை தைத்துள்ளதாக மத்திய உள்துறை மந்திரி அமித் ஷா தெரிவித்தார்.
இதுதொடர்பாக ராணிப் பகுதியில் புதிதாக புதுப்பிக்கப்பட்ட ராம்ஜி கோவிலில் நடந்த 'புனஹ் பிரான் பிரதிஷ்டா' விழாவில் கலந்து கொண்டு பேசிய அவர், "பிரதமர் நரேந்திர மோடி அயோத்தியில் உள்ள ராமர் கோவிலில் 'பிரான் பிரதிஷ்டை' செய்ததன் மூலம் குறிப்பிடத்தக்க பணியை செய்தார்.
உலகம் முழுவதும் உள்ள ராமர் பக்தர்கள் இந்த தருணத்திற்காக கடந்த 500 ஆண்டுகளாக காத்திருந்தார்கள். பாபரின் காலத்தில் நம் இதயத்தில் ஏற்பட்ட ஆழமான காயத்தை இந்த நிகழ்வு இப்போது தைத்துள்ளது.
2014-ம் ஆண்டுக்கு முன்னர் இருந்த அரசாங்கங்கள் நாட்டின் கலாசாரம், மதம் மற்றும் மொழிகளுக்கு மதிப்பளிக்க அஞ்சின. அவுரங்கசீப் காசி விஸ்வநாதர் கோவிலை இடித்தார். இத்தனை ஆண்டுகளுக்குப் பிறகு, மோடி அதை மீண்டும் கட்டினார், அங்கு ஒரு வழித்தடத்தை அமைத்தார், பாபர் அயோத்தியில் ராமர் கோவிலை இடித்தார், இப்போது, அங்கு ராமர் கோவில் கட்டப்பட்டு, ஜெய் ஸ்ரீராம் கோஷங்களுக்கு மத்தியில் பிரதமர் மோடி பிரான் பிரதிஷ்டை செய்துள்ளார்" என்று அமித் ஷா கூறினார்