கே.ஆர்.எஸ். அணையை மைசூரு மகாராணி பிரமோதாதேவி பார்வையிட்டார்
|காவிரி விவகாரம் தலைதூக்கியுள்ள நிலையில் கே.ஆர்.எஸ். அணையை மைசூரு மகாராணி பிரமோதாதேவி நேரில் பார்வையிட்டார். அப்போது அணையில் குறைவான நீர் இருப்பதை பார்த்து அவர் கவலை அடைந்தார்.
மண்டியா:
காவிரி விவகாரம் தலைதூக்கியுள்ள நிலையில் கே.ஆர்.எஸ். அணையை மைசூரு மகாராணி பிரமோதாதேவி நேரில் பார்வையிட்டார். அப்போது அணையில் குறைவான நீர் இருப்பதை பார்த்து அவர் கவலை அடைந்தார்.
கிருஷ்ணராஜசாகர் அணை
கர்நாடக மாநிலம் மண்டியா மாவட்டம் ஸ்ரீரங்கப்பட்டணா தாலுகா கண்ணம்பாடி கிராமத்தில் உள்ளது, கிருஷ்ணராஜசாகர் (கே.ஆர்.எஸ்.) அணைக்கட்டு. இந்த அணையில் உள்ள நீர் தான், காவிரி நதிநீர் பங்கீட்டு படி தமிழகத்திற்கு பகிர்ந்து வழங்கப்பட்டு வருகிறது. இதனால் இந்த அணைக்கட்டு கர்நாடகம், தமிழக விவசாயிகளின் ஜீவநாடியாக விளங்கி வருகிறது.
இத்தகைய பெருமைக்குரிய இந்த அணையை மைசூரு மகாராஜா நால்வடி கிருஷ்ணராஜ உடையார் என்பவர் கட்டினார். முதலில் கண்ணம்பாடி அணை என அழைக்கப்பட்ட கே.ஆர்.எஸ். அணைக்கு, அந்த அணையை கட்டிய கிருஷ்ணராஜா பெயரிடப்பட்டது. இந்த அணை கட்டும் பணி கடந்த 1911-ம் ஆண்டு தொடங்கியது. அணையை கட்டும் பணி, கர்நாடகத்தை சேர்ந்த என்ஜினீயர் சர் எம்.விஸ்வேசுவரய்யா தலைமையில் நடந்தது.
நகையை விற்று கட்டப்பட்ட அணை
நிதிச்சுமை உள்ளிட்ட காரணங்களால் அணையை கட்டி முடிக்க 21 ஆண்டுகள் ஆனது. அதாவது 1932-ம் ஆண்டு அணை கட்டி முடிக்கப்பட்டு திறக்கப்பட்டது. இந்த அணையின் கட்டுமான செலவு அப்போது சுமார் ரூ.1 கோடி என கூறப்படுகிறது. இந்த அணையை நால்வடி கிருஷ்ணராஜ உடையார் போதிய நிதி இல்லாததால் தனது மனைவியின் நகைகளை விற்று கட்டியதாக வரலாற்று ஆவணங்கள் கூறுகின்றன.
இந்த நிலையில் இந்த ஆண்டு கர்நாடகத்தில் போதிய மழை பெய்யாத நிலையில் தமிழகம்-கர்நாடகம் இடையே தற்போது காவிரி விவகாரம் தலைதூக்கியுள்ளது. கர்நாடக மக்களுக்கே குடிக்க நீர் இல்லாத நிலையில் தமிழகத்திற்கு தண்ணீர் வழங்க முடியாத நிலை உள்ளது. இருப்பினும் காவிரி மேலாண்மை ஆணையத்தின் உத்தரவுப்படி கடந்த மாதம் முதல் தமிழகத்திற்கு காவிரி நீர் திறந்துவிடப்பட்டு வருகிறது.
பிரமோதாதேவி பார்வையிட்டார்
இதனால் கே.ஆர்.எஸ். அணையின் நீர்மட்டம் கிடுகிடுவென சரிந்து வருகிறது. 100 அடிக்கு கீழ் நீர்மட்டம் சென்றுவிட்டது. இதனால் டிசம்பரில் மண்டியா, மைசூரு, ராமநகர், பெங்களூரு, பெங்களூரு புறநகர் மாவட்டங்களில் குடிநீர் தட்டுப்பாடு ஏற்படும் சூழல் உள்ளது.
இந்த நிலையில் மைசூரு மகாராணி பிரமோதாதேவி நேற்று திடீரென்று மண்டியாவில் உள்ள கே.ஆர்.எஸ். அணைக்கு சென்றார். தனியாக சென்ற அவர் அணையின் மேல்பகுதியில் நடந்து சென்ற படி அணையின் நீர் இருப்பை பார்வையிட்டார்.
கவலை
மேலும் அதிகாரிகளிடம் நீர்வரத்து, நீர் வெளியேற்றப்படும் அளவு பற்றி கேட்டு தெரிந்துகொண்டார். அணையில் 42 டி.எம்.சி. (ஒரு டி.எம்.சி. என்பது 100 கோடி கனஅடி) நீர் சேமித்து வைக்கலாம். ஆனால் நேற்றைய நிலவரப்படி அணையில் 21 டி.எம்.சி. நீர் மட்டுமே உள்ளது. கடந்த ஆண்டு (2022) இதே காலக்கட்டத்தில் 35 டி.எம்.சி. நீர் இருந்தது குறிப்பிடத்தக்கது.
அணையில் நீர் இருப்பு குறைவாக இருந்ததால் மைசூரு மகாராணி பிரமோதாதேவி கவலை தெரிவித்ததாக, அங்கிருந்த அதிகாரிகள் தெரிவித்தனர்.
பின்னர் அங்கிருந்து அவர் புறப்பட்டு மைசூருவுக்கு சென்றார்.