விமான டிக்கெட்டை மீண்டும் ரத்து செய்த பிரஜ்வல் ரேவண்ணா-கைது செய்ய காத்திருந்த போலீசாருக்கு ஏமாற்றம்
|ஜெர்மனியில் இருந்து பெங்களூரு வருவதற்கான விமான டிக்கெட்டை பிரஜ்வல் எம்.பி. மீண்டும் ரத்து செய்தார். இதனால் அவரை கைது செய்ய காத்திருந்த எஸ்.ஐ.டி. போலீசார் ஏமாற்றம் அடைந்துள்ளனர்.
பெங்களூரு,
ஹாசன் நாடாளுமன்ற தொகுதி ஜனதாதளம் (எஸ்) கட்சியின் எம்.பி.யாக இருந்து வருபவர் பிரஜ்வல் ரேவண்ணா. இவர், பெண்களுடன் ஆபாசமாக இருக்கும் வீடியோ காட்சிகள் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தி இருந்தது. இந்த விவகாரம் தொடர்பாக கர்நாடக அரசு உத்தரவின் பேரில் சிறப்பு புலனாய்வு குழு (எஸ்.ஐ.டி.) அமைக்கப்பட்டுள்ளது. அதன்படி, சி.ஐ.டி. போலீஸ் கூடுதல் டி.ஜி.பி. பிஜய்குமார் சிங் தலைமையில் அந்த குழு அமைக்கப்பட்டுள்ளது.
பிரஜ்வல் எம்.பி. மீது 3 பலாத்கார வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளது. இதனால் கடந்த மாதம் (ஏப்ரல்) 27-ந் தேதி பெங்களூருவில் இருந்து ஜெர்மனிக்கு தப்பி சென்று அவர் தலைமறைவாகி விட்டார். அவரை கைது செய்ய போலீசார் தீவிரம் காட்டி வருகிறார்கள். விசாரணைக்கு ஆஜராக கோரி 2 முறை போலீசார் நோட்டீஸ் அனுப்பினார்கள். இதற்கு பிரஜ்வல் சார்பில் ஒரு வாரம் காலஅவகாசம் கேட்கப்பட்டது.
இந்த நிலையில், கடந்த வாரமே ஜெர்மனியில் இருந்து பிரஜ்வல் பெங்களூருவுக்கு வருவதாக இருந்தது. இதையடுத்து, பெங்களூரு கெம்பகவுடா, மங்களூரு விமான நிலையங்களில் முன்எச்சரிக்கையாக சிறப்பு புலனாய்வு குழு போலீசார் சென்று பிரஜ்வலை கைது செய்வதற்கான நடவடிக்கைகளை எடுத்தார்கள். ஆனால் பிரஜ்வல் விமான டிக்கெட்டை ரத்து செய்து விட்டதால், போலீசார் ஏமாற்றம் அடைந்தனர்.
இந்த நிலையில், ஜெர்மனியில் இருந்து நேற்று 12.20 மணி விமானத்தில் புறப்பட்டு, பெங்களூருவுக்கு நள்ளிரவு 1 மணியளவில் பிரஜ்வல் எம்.பி. வருவதற்காக விமான டிக்கெட் முன்பதிவு செய்யப்பட்டு இருந்தது. இதனால் பிரஜ்வல்லை கைது செய்ய விமான நிலையத்திற்கு சிறப்பு புலனாய்வு குழு போலீசார் விரைந்து சென்றார்கள். அவரை கைது செய்வதற்கான நடவடிக்கைகளையும் எடுத்தார்கள்.
ஆனால் அவர் விமான டிக்கெட்டை மீண்டும் ரத்து செய்தார். அப்படி இருந்தும் டிக்கெட்டுக்கான பணத்தை பிரஜ்வல் திரும்ப பெறாமல் இருந்தார். இதனால் ஜெர்மனியில் இருந்து மதியம் 12.20 மணியளவில் புறப்படும் விமானத்தில் பிரஜ்வல் வரலாம் என்று போலீசார் எதிர்பார்த்தனர். இதற்கிடையே ஜெர்மனியில் இருந்து சரியாக 12.20 மணியளவில் அந்த விமானம் புறப்பட்டது. அதில், பயணம் செய்யும் பயணிகளின் விவரங்களை போலீசார் சேகரித்தனர்.
ஆனால் அதில் பிரஜ்வல் எம்.பி.யின் பெயர் இல்லை என்பதும், அவர் விமானத்தில் வரவில்லை என்பதும் உறுதி செய்யப்பட்டது. இதன் காரணமாக பிரஜ்வல்லை கைது செய்ய எதிர்பார்த்து காத்திருந்த சிறப்பு புலனாய்வு குழு போலீசார் மீண்டும் ஏமாற்றம் அடைந்துள்ளனர். நாடாளுமன்ற தேர்தல் ஓட்டு எண்ணிக்கை முடியும் வரை பிரஜ்வல் இந்தியாவுக்கு திரும்ப மாட்டார் என்று கூறப்படுகிறது.