< Back
தேசிய செய்திகள்
ஓரின சேர்க்கை புகார்:  பிரஜ்வல் ரேவண்ணாவின் சகோதரர் சூரஜ் கைது
தேசிய செய்திகள்

ஓரின சேர்க்கை புகார்: பிரஜ்வல் ரேவண்ணாவின் சகோதரர் சூரஜ் கைது

தினத்தந்தி
|
23 Jun 2024 9:54 AM IST

பிரஜ்வல் ரேவண்ணாவை தொடர்ந்து சூரஜ் ரேவண்ணா எம்.எல்.சி. மீது ஜனதாதளம்(எஸ்) கட்சி தொண்டர் ஓரின சேர்க்கை புகார் அளித்தார். இந்த புகார் தொடர்பாக சூரஜ் கைது செய்யப்பட்டுள்ளார்.

ஹாசன்,

கர்நாடக மாநிலம் ஹாசன் மாவட்டம் ஒலேநரசிப்புரா தொகுதி ஜனதாதளம்(எஸ்) எம்.எல்.ஏ.வாக இருப்பவர் எச்.டி.ரேவண்ணா. இவரது மகன்கள் பிரஜ்வல் ரேவண்ணா, சூரஜ் ரேவண்ணா. இவர்களில் பிரஜ்வல் ரேவண்ணா ஹாசன் தொகுதி முன்னாள் எம்.பி. ஆவார். சூரஜ் ரேவண்ணா தற்போது எம்.எல்.சி.யாக உள்ளார். முன்னாள் எம்.பி.யான பிரஜ்வல் ரேவண்ணா, பல பெண்களை பலாத்காரம் செய்து வீடியோ எடுத்ததாக புகார் எழுந்தது.

இதுதொடர்பாக பிரஜ்வல் ரேவண்ணா மீது 3 பலாத்கார வழக்குகள் பதிவாகி உள்ளது.வெளிநாட்டில் பதுங்கி இருந்த பிரஜ்வல் ரேவண்ணாவை கடந்த மாதம் (மே) சிறப்பு புலனாய்வு குழு போலீசார் கைது செய்திருந்தனர். அவரிடம் போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள். இந்த நிலையில் பிரஜ்வல் ரேவண்ணாவை தொடர்ந்து அவரது சகோதரர் சூரஜ் ரேவண்ணா மீது பாலியல் புகார் அளிக்கப்பட்டுள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. அதுபற்றிய விவரம் பின்வருமாறு:-

ஹாசன் மாவட்டம் அரக்கல்கோடு தாலுகா கொல்லங்கி கிராமத்தை சேர்ந்தவர் சேத்தன். இவர் ஜனதாதளம்(எஸ்) தொண்டர் ஆவார். இவர் சூரஜ் ரேவண்ணா எம்.எல்.சி. மீது பரபரப்பு புகாரை தெரிவித்துள்ளார். அதாவது, சூரஜ் ரேவண்ணா தன்னை ஓரின சேர்க்கைக்கு அழைப்பதாகவும், இதுபற்றி வெளியே யாரிடமும் கூறாமல் இருக்க ரூ.5 கோடி கொடுப்பதாகவும் கூறினார். இது ஹாசன் மாவட்ட அரசியலில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இந்த நிலையில், கட்சி தொண்டர் அளித்த புகாரின் பேரில் சூரஜ் ரேவண்ணாவை போலீசார் கைது செய்துள்ளனர். பிரஜ்வல் ரேவண்ணா பாலியல் வழக்கில் சிக்கி உள்ள நிலையில், தற்போது, சூரஜ் ரேவண்ணா கைது செய்யப்பட்டு இருப்பது தேவகவுடா குடும்பத்தினருக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

மேலும் செய்திகள்