தேர்தல் பிரமாண பத்திரத்தில் முறைகேடு: பிரஜ்வல் ரேவண்ணா எம்.பி. தகுதி நீக்கம் - கர்நாடக ஐகோட்டு அதிரடி தீர்ப்பு
|தேர்தல் பிரமாண பத்திரத்தில் முறைகேடு செய்ததாக தொடரப்பட்ட வழக்கில் பிரஜ்வல் ரேவண்ணாவின் எம்.பி. பதவியை தகுதி நீக்கம் செய்து கர்நாடக ஐகோா்ட்டு அதிரடியாக தீர்ப்பு கூறியுள்ளது.
பெங்களூரு:
நாடாளுமன்றத்திற்கு கடைசியாக கடந்த 2019-ம் ஆண்டு தேர்தல் நடைபெற்றது. இதில் கர்நாடக மாநிலம் ஹாசன் தொகுதியில் காங்கிரஸ்-ஜனதா தளம்(எஸ்) கூட்டணி சார்பில் முன்னாள் பிரதமர் தேவேகவுடாவின் பேரனும், முன்னாள் மந்திரி எச்.டி.ரேவண்ணாவின் மகனுமான பிரஜ்வல் ரேவண்ணா போட்டியிட்டார். அவரை எதிர்த்து பா.ஜனதா சார்பில் ஏ.மஞ்சு களம் கண்டார். இதில் சுமார் 1½ லட்சம் ஓட்டுகள் வித்தியாசத்தில் பிரஜ்வல் ரேவண்ணா வெற்றி பெற்றார்.
அவரது வெற்றியை எதிர்த்து ஏ.மஞ்சு கர்நாடக ஐகோர்ட்டில் வழக்கு தொடர்ந்தார். அதில் பிரஜ்வல் ரேவண்ணா தனது தேர்தல் பிரமாண பத்திரத்தில் உண்மை தகவல்களை மறைத்து தவறான தகவல்களை வழங்கியுள்ளதாகவும், இது மக்கள் பிரதிநிதித்துவ சட்டப்படி தவறு என்றும், அதனால் பிரஜ்வல் ரேவண்ணாவின் எம்.பி. பதவியை தகுதி நீக்கம் செய்ய வேண்டும் என்றும் கோரினார்.
அதுபோல் பிரஜ்வல் ரேவண்ணாவுக்கு எதிராக வக்கீல் தேவராஜ் கவுடா என்பவரும் வழக்கு தொடர்ந்தார். அதில் ஒலேநரசிபுராவில் சென்னாம்பிகா கன்வென்ஷன் சென்டரின் மதிப்பு ரூ.5 கோடியாக இருந்தும், அதன் மதிப்பு ரூ.14 லட்சம் என்று பிரமாண பத்திரத்தில் பிரஜ்வல் ரேவண்ணா குறிப்பிட்டுள்ளார் என்றும், பெங்களூருவில் உள்ள கர்நாடக வங்கியில் ரூ.48 லட்சம் டெபாசிட் தொகை இருந்தும் அதை மறைத்து ரூ.5 லட்சம் என்று குறிப்பிட்டுள்ளதாகவும் கூறியிருந்தார்.
இதற்கிடையே ஏ.மஞ்சு தாக்கல் செய்த மனுவை ஐகோர்ட்டு தள்ளுபடி செய்தது. உரிய முறையில் மனுவை தாக்கல் செய்யவில்லை என்று கூறி அந்த மனுவை நீதிபதி ரத்து செய்தார். இதை எதிர்த்து அவர் சுப்ரீம் கோர்ட்டில் மனு தாக்கல் செய்தார். அந்த மனுவை ஏற்று சுப்ரீம் கோர்ட்டு, ஏ.மஞ்சுவின் மனுவை தள்ளுபடி செய்த ஐகோர்ட்டின் உத்தரவை ரத்து செய்து உத்தரவிட்டது. இதையடுத்து ஏ.மஞ்சுவின் மனு விசாரணைக்கு ஏற்றுக் கொள்ளப்பட்டது. நீதிபதி நடராஜ் இந்த வழக்கை விசாரித்தார். முடிவில் பிரஜ்வல் ரேவண்ணாவின் எம்.பி. பதவியை தகுதி நீக்கம் செய்து நீதிபதி உத்தரவிட்டார்.
இந்த தீர்ப்பின் மூலம் பிரஜ்வல் ரேவண்ணா 6 ஆண்டுகளுக்கு தேர்தலில் போட்டியிட முடியாது. இந்த தீர்ப்பை எதிர்த்து சுப்ரீம் கோர்ட்டில் பிரஜ்வல் ரேவண்ணா மனு தாக்கல் செய்ய உள்ளார். அதன் அடிப்படையில் கர்நாடக ஐகோர்ட்டின் தீர்ப்புக்கு இடைக்கால தடை விதிக்கப்பட்டால், அவர் எம்.பி. பதவியில் தொடர முடியும் என்பது குறிப்பிடத்தக்கது.
இந்த வழக்கில் பிரஜ்வல் ரேவண்ணாவுக்கு துணைபோனதாக அவரது தந்தையும், முன்னாள் மந்திரியுமான எச்.டி.ரேவண்ணா, தம்பி சூரஜ் ரேவண்ணா எம்.எல்.சி. ஆகியோருக்கு கர்நாடக ஐகோர்ட்டு நோட்டீசு அனுப்பியுள்ளது. கர்நாடகத்தில் ஜனதா தளம்(எஸ்) கட்சிக்கு மக்களவையில் ஒரே எம்.பி.தான் உள்ளார். அவரது எம்.பி. பதவி பறிக்கப்பட்டுள்ளதால், மக்களவையில் அக்கட்சிக்கு எம்.பி. இல்லாத நிலை ஏற்பட்டுள்ளது. தேவேகவுடா மாநிலங்களவை எம்.பி.யாக உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
வழக்கு தொடர்ந்த ஏ.மஞ்சு தற்போது ஜனதாதளம் (எஸ்) எம்.எல்.ஏ.
தகுதி நீக்கப்பட்ட பிரஜ்வல் ரேவண்ணா எம்.பி. ஜனதாதளம் (எஸ்) கட்சியை சேர்ந்தவர். அவரது தேர்தல் வெற்றியை எதிர்த்து வழக்கு தொடர்ந்த ஏ.மஞ்சு முன்பு பா.ஜனதா கட்சியில் இருந்தார். தற்போது அவர் ஜனதா தளம் (எஸ்) கட்சியில் அரக்கல்கோடு தொகுதி எம்.எல்.ஏ.வாக உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
இதுகுறித்து ஏ.மஞ்சு கூறுகையில், 'நான் நடத்திய சட்ட போராட்டத்திற்கு நீதி கிடைத்துள்ளது. இது எனக்கு மிகுந்த மகிழ்ச்சி ஏற்படுத்தியுள்ளது. நானும், பிரஜ்வல் ரேவண்ணாவும் தற்போது ஒரே கட்சியில் உள்ளோம். நான் ஜனதா தளம்(எஸ்) கட்சியில் சேர்ந்தபோது, இந்த வழக்கு குறித்து தேவேகவுடா, குமாரசாமியிடம் கூறினேன். அதுபற்றி கவலைப்பட வேண்டாம், கட்சியில் சேருங்கள் என்று கூறினர். இந்த தீர்ப்பு கர்நாடக அரசியல்வாதிகளுக்கு ஒரு பாடம் ஆகும். இனி யாரும் பிரமாண பத்திரத்தில் தவறான தகவல்களை அளிக்க மாட்டார்கள்' என்றார்.