நிலவில் 8 மீட்டர் தூரம் வெற்றிகரமாக நகர்ந்த பிரக்யான் ரோவர் - ஆய்வுப்பணிகளை தொடங்கியது..!
|நிலவில் பிரக்யான் ரோவர், ஆய்வுப்பணிகளை தொடங்கியுள்ளதாக இஸ்ரோ அறிவித்துள்ளது.
ஸ்ரீஹரிகோட்டா,
நிலவை ஆராய்வதற்காக இஸ்ரோ சந்திரயான்-3 விண்கலத்தை கடந்த மாதம் அனுப்பியது. தொடர்ந்து வெற்றிகரமாக சந்திரயான் 3 விண்கலம் பயணித்து நிலவின் சுற்றுவட்டப்பாதைக்குள் நுழைந்த நிலையில், விண்கலத்துடன் இணைக்கப்பட்டிருந்த விக்ரம் லேண்டர் நேற்று முன்தினம் நிலவின் தென் துருவத்தில் தரையிறங்கியது.
இதனை தொடர்ந்து லேண்டருக்குள் இருந்த பிரக்யான் ரோவர் வெற்றிகரமாக வெளியே வந்தது. இதைப்போல லேண்டரில் இருந்த இல்சா, ரம்பா, காஸ்டே போன்ற கருவிகள் நேற்று இயக்கி வைக்கப்பட்டன.
இதனிடையே பிரக்யான் ரோவர், விக்ரம் லேண்டரின் சாய்வு தளத்தில் இருந்து வெளியே வந்தபோது, அதன் சூரிய மின் தகடுகள் சூரியனை நோக்கி திரும்பிய வீடியோவை இஸ்ரோ இன்று மாலை வெளியிட்டது.
ரோவர் இயங்குவதற்கு தேவையான மின்சார சக்தியை பெறுவதற்காக சோலார் மின் தகடு சூரியனை நோக்கி திரும்பியது என்றும், சாய்வு தளம் மூலம் லேண்டரில் இருந்து ரோவர் கலன் எளிமையாக நிலவில் இறங்கியதாகவும் இஸ்ரோ தெரிவித்து இருந்தது.
இந்த நிலையில், பிரக்யான் ரோவர் நிலவின் தென் துருவத்தில் 8 மீட்டர் தூரத்திற்கு வெற்றிகரமாக நகர்ந்துள்ளதாகவும், நிலவில் ரோவர் தனது ஆய்வுப்பணிகளை தொடங்கியுள்ளது என்றும் இஸ்ரோ அறிவித்துள்ளது.
மேலும், ரோவர் திட்டமிட்டபடி சிறப்பாக இயங்குவதாகவும், ரோவரில் பொருத்தப்பட்டுள்ள அனைத்து கருவிகளும் சிறப்பாக செயல்பட்டு வருகிறது என்றும் இஸ்ரோ தெரிவித்துள்ளது.