< Back
தேசிய செய்திகள்
டெல்லியில் துப்பாக்கி முனையில் வழிப்பறி சம்பவம்: இரண்டு பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக போலீசார் தகவல்
தேசிய செய்திகள்

டெல்லியில் துப்பாக்கி முனையில் வழிப்பறி சம்பவம்: இரண்டு பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக போலீசார் தகவல்

தினத்தந்தி
|
27 Jun 2023 4:49 AM IST

டெல்லியில் பட்டப்பகலில் சுரங்கப்பாதையில் சென்ற காரை வழிமறித்து துப்பாக்கி முனையில் ரூ.2 லட்சத்தை வழிப்பறி செய்த 4 நபர்களில் 2 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக போலீசார் தெரிவித்துள்ளனர்.

புதுடெல்லி,

டெல்லியின் சாந்தினி சவுக் பகுதியில் இயங்கி வரும் தனியார் நிறுவனத்தை சேர்ந்த டெலிவரி ஏஜென்ட் ஒருவர் குர்கானில் ஒருவரிடம் பணத்தை ஒப்படைப்பதற்காக தனது உதவியாளருடன் வாடகை காரில் புறப்பட்டார்.

இந்த கார் டெல்லி-நொய்டாவை இணைக்கும் பிரகதி மைதான் சுரங்கப்பாதையில் சென்று கொண்டிருந்தபோது ஹெல்மெட் அணிந்த 4 பேர் 2 மோட்டார் சைக்கிள்களில் காரை பின்தொடர்ந்து சென்றனர்.

பின்னர் அவர்கள் சுரங்கப்பாதையின் நடுவழியில் காரை வழிமறித்தனர். அதனை தொடர்ந்து 2 மோட்டார் சைக்கிள்களிலும் பின்னால் அமர்ந்திருந்த 2 பேர் இறங்கி காரின் அருகே சென்றனர்.

பணப்பையை பறித்து சென்றனர்

அவர்களில் ஒருவர் கார் டிரைவரிடம் துப்பாக்கியை காட்டி மிரட்ட மற்றொருவர் காரின் பின்இருக்கையில் அமர்ந்திருந்த டெலிவரி ஏஜென்ட் மற்றும் அவரது உதவியாளரை மிரட்டினார்.

என்ன நடக்கிறது என தெரியாமல் காரில் இருந்தவர்கள் பயத்தில் உறைந்த சமயத்தில் ஹெல்மெட் அணிந்த 2 மர்ம நபர்களில் ஒருவர் காரில் பணம் வைத்திருந்த பையை எடுத்து கொண்டு தயாராக இருந்த மோட்டார் சைக்கிளில் ஏறினார்.

அதை தொடர்ந்து ஹெல்மெட் அணிந்த மற்றொரு மர்ம நபரும் மோட்டார் சைக்கிளில் ஏறினார். பின்னர் அந்த 2 மோட்டார் சைக்கிள்களிலும் மின்னல் வேகத்தில் அங்கிருந்து சென்றன.

பட்டப்பகலில் துணிகரம்

சினிமாவை மிஞ்சும் அளவுக்கு பட்டப்பகலில் அரங்கேற்றப்பட்ட இந்த துணிகர வழிப்பறி சம்பவம் அங்கு பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

இந்த சம்பவத்தில் பணத்தை பறிகொடுத்த டெலிவரி ஏஜென்ட் இது குறித்து போலீசில் புகார் அளித்தார். அவர் தனது புகாரில் மர்ம நபர்கள் பறித்து சென்ற பையில் ரூ.2 லட்சம் இருந்ததாக தெரிவித்திருந்தார். புகாரின் பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து 4 மர்ம நபர்களை வலை வீசி தேடி வந்தனர்.

இந்நிலையில் பிரகதி மைதான் சுரங்கப்பாதை கொள்ளை சம்பவம் தொடர்பாக இரண்டு நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளதாகவும், மற்ற நபர்களை அடையாளம் காணும் பணி நடந்து வருவதாகவும் போலீசார் தெரிவித்துள்ளனர். இதுகுறித்து செய்தியாளர்கள் சந்திப்பில் பேசிய சிறப்பு சிபி (எல்&ஓ) டாக்டர் சாகர் ப்ரீத் ஹூடா, "நாங்கள் 2 குற்றம் சாட்டப்பட்டவர்களைக் கைது செய்துள்ளோம், மீதமுள்ள குற்றவாளிகள் அடையாளம் காணப்பட்டுள்ளனர், அவர்களைக் கைது செய்ய சோதனைகள் நடந்து வருகின்றன" என்று தெரிவித்தார்.

இதனிடையே தலைநகரின் சில பகுதிகளில் டெல்லி போலீசார் இரவு ரோந்து பணியில் ஈடுபட்டனர்.

இதனிடையே சுரங்கப்பாதையில் நடந்த இந்த வழிப்பறி தொடர்பான காட்சிகள் அங்கு பொருத்தப்பட்டுள்ள கண்காணிப்பு கேமராவில் பதிவாகி இருந்தன. அந்த வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலாக பகிரப்பட்டு வருகிறது.


மேலும் செய்திகள்