கர்நாடகத்தில் மின் கட்டணம் திடீர் உயர்வு
|கர்நாடகத்தில் மின் கட்டணம் திடீரென உயர்த்தப்பட்டுள்ளது. ஒரு யூனிட்டுக்கு 31 காசுகள் உயர்த்தப்பட்டு இருக்கிறது. இந்த கட்டண உயர்வு வருகிற 1-ந் தேதி முதல் அமலுக்கு வருவதாகவும், 6 மாதங்கள் மட்டுமே இது அமலில் இருக்கும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
பெங்களூரு
கர்நாடகத்தில் மின் கட்டணம் திடீரென உயர்த்தப்பட்டுள்ளது. ஒரு யூனிட்டுக்கு 31 காசுகள் உயர்த்தப்பட்டு இருக்கிறது. இந்த கட்டண உயர்வு வருகிற 1-ந் தேதி முதல் அமலுக்கு வருவதாகவும், 6 மாதங்கள் மட்டுமே இது அமலில் இருக்கும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மின்கட்டணம்
கர்நாடகத்தில் மின் வினியோக நிறுவனங்கள் மூலம் நுகர்வோருக்கு மின்சாரம் வினியோகம் செய்யப்படுகிறது. மின் பயன்பாட்டிற்கு மாதந்தோறும் கட்டணம் வசூலிக்கப்படுகிறது. மாநிலத்தில் ஆண்டுதோறும் ஏப்ரல் 1-ந் தேதி மின் கட்டணம் மாற்றி அமைக்கப்படுவது வழக்கம். அதன்படி கடந்த ஏப்ரல் மாதம் மின் கட்டணம் உயர்த்தப்பட்டது. சராசரியாக யூனிட் ஒன்றுக்கு 35 பைசா உயர்த்தப்பட்டது. இந்த நிலையில் நிலக்கரி விலை உயர்வு, அனல்மின் நிலையங்கள் பராமரிப்பு செலவு அதிகரிப்பு போன்றவற்றால் மின் வினியோக நிறுவனங்கள் இழப்பை சந்தித்து வருவதாக கூறப்படுகிறது.
இந்த இழப்பை ஈடுகட்டும் பொருட்டு கர்நாடகத்தில் மின் கட்டணம் மீண்டும் உயர்த்தப்பட்டுள்ளது. இந்த கட்டண உயர்வு ஒவ்வொரு மின்வினியோக நிறுவனங்களுக்கும் இடையே வெவ்வேறு அளவில் உயர்த்தப்படுகிறது.
பெங்களூருவில் 31 பைசா
அதாவது பெங்களூரு மின்சார வினியோக நிறுவன(பெஸ்காம்) எல்லை பகுதியில் யூனிட் ஒன்றுக்கு 31 பைசா உயர்த்தப்பட்டுள்ளது.
உப்பள்ளி மின்சார வினியோக நிறுவன(ஹெஸ்காம்) எல்லை பகுதிகளில் 27 பைசாவும், கலபுரகி மின்சார வினியோக நிறுவன(கெஸ்காம்) எல்லை பகுதிகளில் 26 பைசாவும், மங்களூரு மின்சார வினியோக நிறுவன(மெஸ்காம்) எல்லை பகுதிகளில் 21 பைசாவும் உயர்த்த கர்நாடக மின்சார ஒழுங்குமுறை ஆணையம் அனுமதி வழங்கியுள்ளது.
இந்த மின் கட்டண உயர்வு வருகிற 1-ந் தேதி முதல் அமலுக்கு வருகிறது. தற்போது உயர்த்தப்பட்டுள்ள இந்த கட்டணம் 6 மாதங்களுக்கு அதாவது வருகிற டிசம்பர் மாதம் 31-ந் தேதி வரை மட்டும் அமலில் இருக்கும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
நிலக்கரி விலை
இதுகுறித்து கர்நாடக மின்சார ஒழுங்குமுறை ஆணைய தலைவர் ரவிக்குமார் கூறுகையில், ''நிலக்கரி விலை உயர்வு மற்றும் அனல்மின் நிலையங்கள் உற்பத்தி செலவு அதிகரித்து இருப்பதால் தற்காலிகமாக இந்த மின் கட்டணத்தை உயர்த்த அனுமதி அளித்துள்ளோம். இந்த கட்டண உயர்வு 6 மாதங்களுக்கு மட்டுமே அமலில் இருக்கும். அதன்பிறகு இந்த விலை உயர்வு வாபஸ் பெறப்படும். அனைத்து வகையான நுகர்வோருக்கும் ஒரே சீரான அளவில் கட்டணம் உயர்த்தப்பட்டுள்ளது. மின் கொள்முதல் செலவு யூனிட்டுக்கு 29 பைசா வரை அதிகரித்துள்ளது'' என்றார்.
கடந்த ஏப்ரல் மாதம் மின் கட்டணம் உயர்த்தப்பட்டதால், 50 யூனிட் வரை மின்சாரத்தை பயன்படுத்தும் நுகர்வோருக்கு மின் கட்டணம் ரூ.523-ல் இருந்து 545 ஆகவும், 100 யூனிட் வரை பயன்படுத்துவோருக்கு ரூ.990-ல் இருந்து ரூ.1,015 ஆகவும் அதிகரித்தது என்பது குறிப்பிடத்தக்கது.
பொதுமக்கள் அதிர்ச்சி
இந்த திடீர் மின் கட்டண உயர்வால் பொதுமக்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர். இதேபோல் தொழில் நிறுவனங்கள், தொழிற்சாலைகளை நடத்தி வருபவர்களும் அதிர்ச்சி அடைந்துள்ளனர். ஏற்கனவே பெட்ரோல் விலை உயர்வு, மூலப்பொருட்கள் விலை உயர்வால் செய்வதறியாது திகைத்து வரும் தொழில் முனைவோர் தற்போது மின்கட்டண உயர்வால் மேலும் நெருக்கடிக்கு உள்ளாவதாக தெரிவித்துள்ளனர்.