தேர்தலுக்கு பிந்தைய கருத்து கணிப்பு 'கார்பரேட் விளையாட்டு'-சஞ்சய் ராவத் விமர்சனம்
|தேர்தலுக்கு பிந்தைய கருத்து கணிப்பு 'கார்பரேட் விளையாட்டு' என உத்தவ் தாக்கரே கட்சி எம்.பி. சஞ்சய் ராவத் விமர்சித்து உள்ளார்.
மும்பை,
நாடு முழுவதும் 7 கட்டங்களாக நடந்த நாடாளுமன்ற தேர்தல் நேற்று நடந்து முடிந்தது. இதையடுத்து வெளியான தேர்தலுக்கு பிந்தைய கருத்து கணிப்புகள் நாட்டில் 3-வது முறையாக பா.ஜனதா ஆட்சியை பிடிக்கும் என கூறுகின்றன.
இந்தநிலையில் தேர்தலுக்கு பிந்தைய கருத்து கணிப்பு குறித்து உத்தவ் தாக்கரே கட்சி எம்.பி. சஞ்சய் ராவத் கூறியதாவது:- ஊடக நிறுவனங்களின் மீது மிகப்பெரிய அழுத்தம் கொடுக்கப்படுகிறது. தேர்தலுக்கு பிந்தைய கருத்து கணிப்பு என்பது ஒரு 'கார்பரேட் விளையாட்டு' மற்றும் மோசடி. நிறுவனங்கள் தேர்தல் கருத்துகணிப்பை இலவசமாக நடத்தியதா?. நாடாளுமன்ற தேர்தலில் 'இந்தியா' கூட்டணி 295 முதல் 310 இடங்களில் வெற்றி பெறும். இது கருத்து கணிப்பு அல்ல. மக்களின் வாக்குப்பதிவு மூலம் இந்த விவரம் எடுக்கப்பட்டுள்ளது.
மராட்டியத்தில் 'இந்தியா' கூட்டணி 48 தொகுதிகளில் 35 இடங்களில் வெற்றி பெறும். சிவசேனா (உத்தவ் தாக்கரே) கடந்த தேர்தலை போல இந்த முறையும் 18 தொகுதிகளில் வெற்றி பெறும். காங்கிரஸ், தேசியவாத காங்கிரசும் (சரத்பவார்) அதிக இடங்களில் வெற்றி பெறும். பாராமதியில் சுப்ரியா சுலே 1½ லட்சம் வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெறுவார். காங்கிரஸ் சிறந்த பங்களிப்பை காட்டும்.
உத்தரபிரதேசம், பீகார், அரியானா, கர்நாடகாவுடன் சேர்ந்து மராட்டிய நாட்டுக்கான மாற்றத்தை கொடுக்கும். எங்களுக்கு கருத்து கணிப்பு தேவையில்லை. நாங்கள் களத்தில் பணியாற்றினோம். அலை எங்கு வீசுகிறது என்பது தெரியும். 'இந்தியா' கூட்டணி உத்தரபிரசேத்தில் 35 இடங்களிலும், பீகாரில் லாலுபிரசாத் யாதவின் தேசிய ஜனதா தள கட்சி 16 தொகுதிகளிலும் வெற்றி பெறும். இவ்வாறு அவர் கூறினார்.