< Back
தேசிய செய்திகள்
இ-சிகரெட் வைத்திருப்பது குற்றம் - மத்திய அரசு எச்சரிக்கை
தேசிய செய்திகள்

இ-சிகரெட் வைத்திருப்பது குற்றம் - மத்திய அரசு எச்சரிக்கை

தினத்தந்தி
|
3 Oct 2023 3:00 AM IST

எந்த எண்ணிக்கையில் இ-சிகரெட் வைத்திருந்தாலும் அது குற்றம் என்று மத்திய அரசு எச்சரிக்கை விடுத்துள்ளது.

புதுடெல்லி,

மத்திய அரசு கடந்த 2019-ம் ஆண்டு, மின்னணு சிகரெட் தடை சட்டத்தை கொண்டு வந்தது.

அதன்படி, இ-சிகரெட் எனப்படும் மின்னணு சிகரெட்டுகளை உற்பத்தி செய்தல், ஏற்றுமதி, இறக்குமதி செய்தல், விற்பனை, வினியோகம் செய்தல், இருப்பு வைத்தல், விளம்பரம் செய்தல் ஆகியவற்றுக்கு தடை விதிக்கப்பட்டது.

இ-சிகரெட்டின் தனிப்பட்ட பயன்பாட்டுக்கு தடை விதிக்கப்படுவதாக அதில் குறிப்பிடப்படவில்லை.

நோட்டீஸ்

இதற்கிடையே, இ-சிகரெட் தடை சட்டத்தில், சிறைத்தண்டனை, அபராதம் போன்ற கடுமையான விதிமுறைகள் இருப்பதையும் மீறி, இ-சிகரெட் சர்வசாதாரணமாக புழங்குவதாக மத்திய அரசுக்கு புகார்கள் வந்தன. குறிப்பாக, இளைஞர்கள் அதை பயன்படுத்துவது, மத்திய அரசுக்கு கவலை ஏற்படுத்தியது.

இதையடுத்து, இ-சிகரெட் தடையை உறுதியுடன் அமல்படுத்துமாறு அனைத்து மாநில அரசுகளுக்கும் மத்திய அரசு கடிதம் எழுதியது. மேலும், அந்த சிகரெட்டை விற்பனை செய்த 15 இணையதளங்களுக்கு நோட்டீஸ் அனுப்பியது.

மத்திய அரசு விளக்கம்

இந்நிலையில், இ-சிகரெட்டை எந்த வடிவிலும், எந்த எண்ணிக்கையிலும், எந்த முறையிலும் வைத்திருப்பது இ-சிகரெட் தடை சட்டத்தை மீறிய குற்றம் என்று மத்திய சுகாதார அமைச்சகம் தெளிவுபடுத்தி உள்ளது. மத்திய சிவில் விமான போக்குவரத்து அமைச்சகத்துக்கு அனுப்பிய கடிதத்தில் இத்தகவலை தெரிவித்துள்ளது.

இதன்மூலம், ஒரே ஒரு இ-சிகரெட் வைத்திருப்பதும் குற்றம் என்று மத்திய அரசு தெளிவுபடுத்தி உள்ளது.

மேலும், இந்த தடையை மீறுவோர் குறித்து புகார் தெரிவிக்க ஒரு இணையதளத்தையும் சுகாதார அமைச்சகம் தொடங்கி உள்ளது.

மேலும் செய்திகள்