< Back
தேசிய செய்திகள்
ஆபாச வீடியோ வழக்கு; முன்ஜாமீன் கோரி எச்.டி. ரேவண்ணா மனு தாக்கல்
தேசிய செய்திகள்

ஆபாச வீடியோ வழக்கு; முன்ஜாமீன் கோரி எச்.டி. ரேவண்ணா மனு தாக்கல்

தினத்தந்தி
|
2 May 2024 7:11 PM IST

ஆபாச வீடியோ வழக்கில் பெங்களூரு செசன்ஸ் கோர்ட்டில் முன்ஜாமீன் கோரி எச்.டி. ரேவண்ணா மனு தாக்கல் செய்துள்ளார்.

புதுடெல்லி,

முன்னாள் பிரதமர் தேவகவுடாவின் பேரன் மற்றும் கர்நாடக முன்னாள் முதல்-மந்திரி எச்.டி. குமாரசாமியின் சகோதரரான எச்.டி. ரேவண்ணாவின் மகன் பிரஜ்வால் ரேவண்ணா. ஹாசன் தொகுதி எம்.பி.யான அவர், தற்போது நடைபெற்று வரும் மக்களவை தேர்தலில் ஹாசன் தொகுதியில் மீண்டும் போட்டியிட்டுள்ளார்.

இந்நிலையில், பிரஜ்வால் ரேவண்ணாவுக்கு எதிரான பாலியல் குற்றச்சாட்டு கர்நாடக அரசியலில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. இதுபற்றி சிறப்பு விசாரணை குழு அமைக்கப்பட்டது. ஆனால், அதே நாளில் ஜெர்மனியின் பிராங்பர்ட் நகருக்கு பிரஜ்வால் தப்பி சென்று விட்டார்.

இவருக்கு எதிராக ஹாசன் நகர் முழுவதும் பரவி வரும் ஆபாச வீடியோக்களில், பல பெண்களை கட்டாயப்படுத்தி அல்லது அவர்களின் ஒப்புதல் இல்லாமல் காட்சிகள் எடுக்கப்பட்டு உள்ளன என்று குற்றச்சாட்டு எழுந்துள்ளது. பிரஜ்வால் ரேவண்ணா தன்னுடைய மொபைல் போனில் வீடு மற்றும் அலுவலகத்தில் வைத்து, பல வீடியோக்களை பதிவு செய்து பின்னர், அவற்றை லேப்டாப்புக்கு மாற்றியுள்ளார்.

இதுபற்றிய முதல்கட்ட விசாரணையில், 2019-ம் ஆண்டுக்கு பின்னர் பெங்களூரு மற்றும் ஹாசன் நகரில் உள்ள அவர்களுடைய வீட்டில் உள்ள சேமிப்பு கிடங்கில் வைத்து மொபைல் போனில் பல வீடியோக்கள் பதிவு செய்யப்பட்டு உள்ளன என தெரிய வந்துள்ளது.

இதுபோன்று பென் டிரைவில், 2,976 ஆபாச வீடியோக்கள் பதிவாகி உள்ளன என்றும் அவற்றில் பல வீடியோக்கள் சில வினாடிகள் முதல் சில நிமிடங்கள் வரை ஓட கூடியவை என்றும் போலீசார் தெரிவித்தனர்.

இந்நிலையில், ஹாசனில் உள்ள வீட்டில் பணியாற்றிய பெண் ஒருவர் அளித்த புகாரில், ஹோலேநரசிப்பூர் தொகுதியின் எம்.எல்.ஏ.வான எச்.டி. ரேவண்ணா 2019 முதல் 2022 வரையிலான 3 ஆண்டுகளில் பல முறை பாலியல் துன்புறுத்தலில் ஈடுபட்டார் என குற்றச்சாட்டை கூறி மற்றொரு பரபரப்பை ஏற்படுத்தினார்.

தேவகவுடாவின் மூத்த மகனான எச்.டி. ரேவண்ணா, இளைய மகனான எச்.டி. குமாரசாமி தலைமையிலான கூட்டணி அரசின்போது மந்திரியாக இருந்தவர். 2019-ல் வேலைக்கு சேர்ந்த 4-வது மாதத்தில் இருந்து ரேவண்ணா அடிக்கடி தன்னை அவருடைய வீட்டுக்கு கூப்பிட்டார் என புகாரில் தெரிவித்து இருக்கிறார்.

அந்த புகாரில், ரேவண்ணாவின் மனைவி எப்போதெல்லாம் வீட்டில் இல்லையோ, அப்போது அந்த பெண்ணை அழைத்து கொண்டு, சேமிப்பு அறைக்கு சென்று விடுவார். இதன்பின்பு பழங்களை தரும் சாக்கில் பல இடங்களில் தொட்டார். சேலை உள்ளிட்ட ஆடைகளை களைந்து, பாலியல் துன்புறுத்தலில் ஈடுபட்டார் என அந்த பெண் குறிப்பிட்டு உள்ளார்.

இந்த புகாரின் பேரில், 354ஏ, 354டி, 506 மற்றும் 509 ஆகிய பிரிவுகளின் கீழ் போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர். அந்த பெண்ணின் புகாரை தொடர்ந்து அவரிடம் இருந்து வாக்குமூலங்களை பெற்று விட்டோம் என சிறப்பு விசாரணை குழு அதிகாரிகள் கூறினர்.

பிரஜ்வால் ரேவண்ணா தொடர்புடைய ஆபாச வீடியோ விவகாரத்தில் கர்நாடக டி.ஜி.பி.க்கு தேசிய மகளிர் ஆணையம் கடிதம் ஒன்றை எழுதியது. அந்த கடிதத்தில், இந்த சம்பவத்திற்கு கடுமையான கண்டனம் தெரிவிக்கிறோம். இந்த விவகாரத்தில் எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் பற்றி விரிவான அறிக்கை ஒன்றை 3 நாட்களுக்குள் சமர்ப்பிக்க வேண்டும் என்றும் தெரிவித்தது.

இந்நிலையில், ஆபாச வீடியோ வழக்கில் ரேவண்ணாவை இன்று நேரில் ஆஜராகும்படி சிறப்பு விசாரணை குழு தெரிவித்து இருந்தது. ஆனால், அவர் ஆஜராகவில்லை. எனினும், பெங்களூரு செசன்ஸ் கோர்ட்டில் முன்ஜாமீன் கோரி எச்.டி. ரேவண்ணா மனு ஒன்றை தாக்கல் செய்துள்ளார். இந்த மனுவை விரைந்து விசாரிக்க வேண்டும் என்று கோரிக்கை வைத்துள்ளார்.

மேலும் செய்திகள்