பொன்முடி பதவி விவகாரம்; கவர்னருக்கு எதிரான தமிழக அரசின் மனு சுப்ரீம் கோர்ட்டில் நாளை விசாரணை
|தமிழக அரசின் மனு சுப்ரீம் கோர்ட்டில் தலைமை நீதிபதி தலைமையிலான அமர்வில் நாளை விசாரணைக்கு வர உள்ளது.
புதுடெல்லி,
சொத்துக்குவிப்பு வழக்கில் பொன்முடிக்கு சென்னை ஐகோர்ட்டு 3 ஆண்டு சிறை தண்டனையும், ரூ.50 லட்சம் அபராதமும் விதித்தது. இதனால் அவரது பதவி பறிபோனது. இதனிடையே ஐகோர்ட்டின் இந்த தீர்ப்புக்கு சுப்ரீம் கோர்ட்டு தடை விதித்ததால், பொன்முடி மீண்டும் எம்.எல்.ஏ.வாக அறிவிக்கப்பட்டார்.
பொன்முடி மீண்டும் எம்.எல்.ஏ.வாக அறிவிக்கப்பட்டுள்ளதால், அவரை மீண்டும் அமைச்சரவையில் இணைத்துக்கொள்வது தொடர்பாக கவர்னர் ஆர்.என்.ரவிக்கு தமிழக முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் கடிதம் எழுதினார். ஆனால், பொன்முடிக்கு அமைச்சராக பதவிப்பிரமாணம் செய்து வைக்க இயலாது என கவர்னர் ஆர்.என்.ரவி மறுப்பு தெரிவித்தார்.
பொன்முடி மீதான வழக்கு நிலுவையில் உள்ளதால் பதவிப் பிரமாணம் செய்து வைக்க இயலாது என கவர்னர் தெரிவித்தார். இதைத் தொடர்ந்து, பொன்முடியை அமைச்சராக நியமிக்க கவர்னர் ஆர்.என்.ரவிக்கு உத்தரவிடக்கோரி சுப்ரீம் கோர்ட்டில் தமிழக அரசு மனு தாக்கல் செய்தது.
அரசியல் சாசனத்தில் 164(1) பிரிவை கவர்னர் ஆர்.என்.ரவி அப்பட்டமாக மீறுகிறார் என்றும், தமிழ்நாட்டின் மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசுக்கு இணையாக ஆட்சி நடத்த கவர்னர் முயற்சிப்பதாகவும் அந்த மனுவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், இந்த வழக்கை அவசர வழக்காக விசாரிக்க வேண்டும் என தலைமை நீதிபதியிடம் தமிழக அரசு சார்பில் கோரிக்கை வைக்கப்பட்டது. இந்த நிலையில், தமிழக அரசு தாக்கல் செய்த மனுவை சுப்ரீம் கோர்ட்டில் தலைமை நீதிபதி தலைமையிலான அமர்வில் நாளை விசாரணைக்கு வர உள்ளது குறிப்பிடத்தக்கது.