< Back
தேசிய செய்திகள்
பொன் மாணிக்கவேல் விவகாரம்: சி.பி.ஐ. விசாரணைக்கு தடை விதிக்க சுப்ரீம் கோர்ட்டு மறுப்பு
தேசிய செய்திகள்

பொன் மாணிக்கவேல் விவகாரம்: சி.பி.ஐ. விசாரணைக்கு தடை விதிக்க சுப்ரீம் கோர்ட்டு மறுப்பு

தினத்தந்தி
|
3 Jan 2023 4:45 AM IST

சிலை கடத்தல் தடுப்பு பிரிவு சிறப்பு அதிகாரியாக இருந்த பொன் மாணிக்கவேலுக்கு எதிரான சி.பி.ஐ. விசாரணைக்கு தடை விதிக்க சுப்ரீம் கோர்ட்டு மீண்டும் மறுப்பு தெரிவித்துள்ளது.

புதுடெல்லி,

சி.பி.ஐ. விசாரணை நடத்த கோரிய சென்னை ஐகோர்ட்டு உத்தரவுக்கு எதிராக சிலை கடத்தல் தடுப்பு பிரிவு சிறப்பு அதிகாரியாக இருந்த பொன் மாணிக்கவேல் சுப்ரீம் கோர்ட்டில் மேல்முறையீடு மனு தாக்கல் செய்தார். இந்த மனுவை சுப்ரீம் கோர்ட்டு நீதிபதிகள் கிருஷ்ண முராரி, எஸ்.ரவீந்திர பட் ஆகியோர் அடங்கிய அமர்வு விசாரித்து வருகிறது.

பொன் மாணிக்கவேல் மேல்முறையீடு மனு தொடர்பாக 3 வாரங்களுக்குள் பதில் அளிக்க தமிழக அரசுக்கும், சி.பி.ஐ.க்கும், காதர் பாட்ஷாவுக்கும் சுப்ரீம் கோர்ட்டு கடந்த நவம்பர் 24-ந் தேதி உத்தரவிட்டது. மேலும், பொன் மாணிக்கவேலுக்கு எதிரான சி.பி.ஐ. விசாரணைக்கு இடைக்கால தடை விதிக்கவும் சுப்ரீம் கோர்ட்டு மறுத்துவிட்டது.

தடை விதிக்க மறுப்பு

இந்த நிலையில், இந்த மனு தொடர்பான விசாரணை நேற்று மீண்டும் விசாரணைக்கு வந்தது.

பொன் மாணிக்கவேல் சார்பில் ஆஜரான மூத்த வக்கீல் எஸ்.நாகமுத்து, வழக்கின் கடந்து வந்த பாதையை குறிப்பிட்டு, சிலை கடத்தல் வழக்குகளை சென்னை ஐகோர்ட்டு இரு நீதிபதிகள் கொண்ட அமர்வு கண்காணித்து வருகிறது. இருப்பினும், தனி நீதிபதி இந்த விவகாரத்தை தானாக முன் வந்து விசாரித்து மனுதாரருக்கு எதிரான குற்றச்சாட்டுகள் குறித்து சி.பி.ஐ. விசாரணை நடத்த உத்தரவிட்டுள்ளார். நேர்மைக்கு பெயர்போன மனுதாரருக்கு எதிரான சி.பி.ஐ. விசாரணை நடத்த வேண்டும் என்ற சென்னை ஐகோர்ட்டு உத்தரவுக்கு இடைக்கால தடை விதிக்க வேண்டும் என வாதிட்டார்.

அப்போது நீதிபதிகள், சிலை கடத்தல் தடுப்பு பிரிவு சிறப்பு அதிகாரியாக இருந்த பொன் மாணிக்கவேலுக்கு எதிரான சி.பி.ஐ. விசாரணைக்கு தடை விதிக்க மீண்டும் மறுத்தனர். சி.பி.ஐ. விசாரணைக்கு உத்தரவிட்டது சரியா? என்பதை விசாரிப்போம் என்றும் தெரிவித்து, மேலும் விசாரணையை ஜனவரி 16-ந் தேதிக்கு தள்ளிவைத்தனர். இந்த விவகாரத்தில், பொன் மாணிக்கவேலுவின் கீழ் பணிபுரிந்த தமிழ்ச்செல்வன் தாக்கல் செய்த இடையீ்ட்டு மனுவையும் விசாரிப்பதாக தெரிவித்தனர்.

தள்ளுபடி செய்ய வேண்டும்

சி.பி.ஐ. விசாரணை நடத்த கோரிய சென்னை ஐகோர்ட் உத்தரவுக்கு எதிராக பொன் மாணிக்கவேலின் மேல்முறையீடு மனுவை தள்ளுபடி செய்ய வேண்டும் என தமிழக அரசின் சார்பில் தாக்கல் செய்யப்பட்ட பதில் மனுவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

சி.பி.ஐ. சார்பில் தாக்கல் செய்யப்பட்ட பதில் மனுவில், சென்னை ஐகோர்ட்டின் உத்தரவின்படியும், திரட்டப்பட்ட ஆவணங்களின் படியும் மனுதாரர் பொன் மாணிக்கவேலின் நடத்தையை விசாரித்து வருகிறோம். விசாரணை முக்கிய கட்டத்தை எட்டியுள்ளதாலும், வழக்கின் முக்கியத்துவம், தீவிரத்தன்மையை கருதியும், விசாரணை குறித்த விவரங்களை தெரிவிப்பது எதிர்விளைவுகளை ஏற்படுத்தும். எனவே, நீதியின் நலன் கருதி பொருத்தமான உத்தரவை சுப்ரீம் கோர்ட்டு பிறப்பிக்க வேண்டும்.

மேலும் செய்திகள்