< Back
தேசிய செய்திகள்
சட்டசபை தேர்தல் தேதி அறிவிக்கும் முன்பே பணம், பரிசு பொருட்களை வாரி வழங்கும் அரசியல்கட்சி பிரமுகர்கள்; பொதுமக்கள் என்ன சொல்கிறார்கள்?
தேசிய செய்திகள்

சட்டசபை தேர்தல் தேதி அறிவிக்கும் முன்பே பணம், பரிசு பொருட்களை வாரி வழங்கும் அரசியல்கட்சி பிரமுகர்கள்; பொதுமக்கள் என்ன சொல்கிறார்கள்?

தினத்தந்தி
|
25 Feb 2023 8:48 PM GMT

சட்டசபை தேர்தல் தேதி அறிவிக்கும் முன்பே பணம், பரிசு பொருட்களை வாரி வழங்கும் அரசியல்கட்சி பிரமுகர்கள் குறித்து பொதுமக்கள் கருத்து தெரிவித்து இருக்கிறார்கள்.

பெங்களூரு:

5 ஆண்டுகளுக்கு ஒரு முறை ஜனநாயக முறைப்படி தேர்தல் நடத்தப்பட்டு மக்கள் பிரதிநிதிகளான எம்.பி.க்கள், எம்.எல்.ஏ.க்கள் தேர்வு செய்யப்பட்டு வருகிறார்கள்.

பணம், பரிசு பொருட்கள்

மக்கள் தங்களது உரிமையான வாக்குரிமையை செலுத்தி மக்கள் பிரதிநிதிகளை தேர்வு செய்கின்றனர். அதன்படி, கர்நாடகத்தில் ஆளும் பா.ஜனதா கட்சியின் பதவிக்காலம் மே மாதம் 23-ந் தேதியுடன் நிறைவு பெற உள்ளது. இதையடுத்து, கர்நாடக சட்டசபைக்கு தேர்தல் நடத்துவதற்கான ஏற்பாடுகளை தேர்தல் ஆணையம் மேற்கொண்டு வருகிறது.

எந்த நேரத்திலும் கர்நாடகத்தில் சட்டசபை தேர்தலை நடத்துவதற்கான தேதி அறிவிக்கப்பட வாய்ப்புள்ளது. தேர்தல் தேதி அறிவிக்கும் முன்பாகவே கர்நாடகத்தில் தேர்தல் பிரசாரம் சூடுபிடித்துள்ளது. அரசியல் கட்சிகளின் தலைவர்கள் மாநிலம் முழுவதும் தங்களது முதற்கட்ட பிரசாரத்தை முடித்துவிட்டு, 2-வது கட்ட பிரசாரத்திற்கு தயாராகி வருகின்றனர். இந்த நிலையில், தேர்தல் தேதி அறிவிக்கும் முன்பாகவே வாக்காளர்களை தங்கள் பக்கம் இழுக்க பணம், பரிசு பொருட்களை அரசியல் கட்சிகளின் பிரபலங்கள் வாரி இறைக்க தொடங்கி உள்ளனர்.

மக்களுக்கு அசைவ விருந்து

நியாயமான முறையில் தேர்தல் நடத்துவதற்காகவும், வாக்காளர்களுக்கு பணம், பரிசு பொருட்களை வழங்குவதை தடுக்கவும் தேர்தல் ஆணையம் நடவடிக்கை எடுத்து வருகிறது. தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்கள் இவ்வளவு பணம் தான் செலவு செய்ய வேண்டும் என்ற கடுமையான விதிமுறைகளையும் தேர்தல் ஆணையம் அமல்படுத்தி உள்ளது. வழக்கமாக தேர்தல் தேதி அறிவிக்கப்பட்ட பின்பு தான் வாக்காளர்களுக்கு பணம், பரிசு பொருட்களை வேட்பாளர்களும், அரசியல் கட்சிகளும் பட்டுவாடா செய்யும்.

கர்நாடகத்தில் தேர்தல் அறிவிப்பதற்கு பல மாதங்கள் இருக்கும் முன்பாகவே பணம், பரிசு பொருட்கள் வழங்குவது அதிகரித்து வருகிறது. அதாவது ஏதேனும் தலைவர்கள் பிறந்தநாள், திருவிழாக்கள், விளையாட்டுப் போட்டிகள் உள்ளிட்டவற்றை காரணமாக கொண்டு இந்த பரிசு பொருட்கள் வழங்கப்படுகிறது. குறிப்பாக பெண் வாக்காளர்களை கவரும் விதமாக குக்கர்கள், கியாஸ் அடுப்பு, சேலைகள், பரிசு தொகுப்புகள் உள்ளிட்டவை வினியோகிப்பது அதிகரித்துள்ளது. மேலும் தலைவர்கள் பிறந்தநாள் என்று கூறி பொதுமக்களை அழைத்து அசைவ விருந்துடன், சில அரசியல் கட்சிகளின் பிரமுகர்கள் பணத்தையும் வாரி இறைத்து வருகின்றனர்.

செலவுகளை காட்ட வேண்டிய...

எல்லாவற்றுக்கும் மேலாக இளைஞர்களை கவரும் விதமாக தங்களது தொகுதிகளில் உள்ள கிராமங்களில் கிரிக்கெட் உள்ளிட்ட விளையாட்டு போட்டிகளை நடத்தி, பரிசு பொருட்கள் வழங்குவதையும், போட்டிகளை காண வரும் மக்களுக்கு பரிசு பொருட்களை வழங்கியும் மக்களை தங்கள் பக்கம் இழுக்கும் வேலைகளில் அரசியல் பிரமுகர்கள் ஈடுபட்டுள்ளனர்.

இவ்வாறு தேர்தல் தேதி அறிவிக்கும் முன்பாக மக்களை தங்கள் பக்கம் அரசியல் கட்சிகளின் வேட்பாளர்கள் ஈர்த்து கொள்வதுடன், தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமலுக்கு வரும் முன்பாக பணத்தை வாரி இரைப்பதன் மூலம், அதற்கான செலவுகளை தேர்தல் ஆணையத்திடம் காண்பிக்க வேண்டும் என்ற நிலை இல்லாமல் போய் விடுகிறது.

வேடிக்கை பார்க்கும் நிலை

அரசியல் கட்சிகளின் பிரமுகர்கள் பலர் தங்களுக்கு தேர்தலில் போட்டியிட சீட் கிடைக்கும் என்ற ஒரே நம்பிக்கையில் பணத்தை அள்ளி வீசுவது தான் வேடிக்கையான விஷயமாகும். அதே நேரத்தில் தங்களது தொகுதியில் தான் பிரபலமாக இருப்பதையும், பண பலம் இருப்பதையும் கட்சியின் தலைமைக்கு காட்டி, தங்களது சீட்டை உறுதி செய்யும் யுக்தியாகவும் மாற்றி உள்ளனர். இதன்மூலம் தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டதால் தான் அந்தந்த தொகுதிகளில் திருவிழா போல் இருக்கும் என்ற நிலை தற்போது கர்நாடகத்தில் மாறி இருக்கிறது. தற்போதே தேர்தல் திருவிழா களைகட்டி வருகிறது.

இந்த பணம், பரிசு பொருட்கள் வழங்குவதை தடுக்க முடியாமலும், நடத்தை விதிமுறைகள் அமலில் இல்லாததாலும் தேர்தல் ஆணையமும் வேடிக்கை பார்க்க வேண்டிய நிலை காணப்படுகிறது. பணம், பரிசு பொருட்களுக்காக தங்களது உரிமையான வாக்குகளை விற்காமல் ஜனநாயக கடமையை ஆற்ற ஒவ்வொரு வரும் முன்வர வேண்டும் என்பதே தேர்தல் ஆணையத்தின் நோக்கமாகும். இதுபற்றி பொதுமக்கள் தங்களது கருத்துகளை பகிர்ந்து கொண்டுள்ளனர்.

அதுபற்றிய விவரம் வருமாறு:-

மக்கள் ஏமாறக்கூடாது

பெங்களூரு மல்லேசுவரத்தில் வசிக்கும் மேைட நிகழ்ச்சி தொகுப்பாளரான அருள் கோவன் கூறுகையில், "சட்டசபை தேர்தல் தேதி அறிவிக்கும் முன்பாக பணம், பரிசு பொருட்கள் மட்டும் வழங்குவதில்லை. திருப்பதி உள்ளிட்ட கோவில்களுக்கு சுற்றுலா கூட அழைத்து செல்கின்றனர். வாக்காளர்களை பக்தர்களாக மாற்றும் சம்பவங்களும் நடக்கிறது. கிரிக்கெட் உள்ளிட்ட விளையாட்டு போட்டிகள் பெயரில் 18 வயது நிரம்பிய இளைஞர்களை தங்கள் பக்கம் இழுத்து, அரசியலில் ஈடுபட வைக்காமல் பிரசாரத்திற்கு பயன்படுத்துவது வேதனையான விஷயமாகும்.அந்த இளைஞர்கள் அரசியல்வாதிகளின் கைக்கூலியாக மாறி வருகின்றனர். இதுபோன்ற செயல்கள் வன்மையாக கண்டிக்கத்தக்கதாகும். அரசியல் தலைவர்கள் ஆதாயம் தேடிக் கொள்கிறார்கள். மக்கள் ஏமாறக்கூடாது. தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமலில் இல்லாததால், தேர்தல் ஆணையத்தாலும் எதுவும் செய்ய முடியவில்லை" என்றார்.

சிக்கமகளூரு மாவட்டம் தரிகெரே தாலுகா லக்குவள்ளியை சேர்ந்த முன்னாள் கிராம பஞ்சாயத்து உறுப்பினர் அப்துல்ஜாபர் கூறுகையில், "தேர்தல் வந்துவிட்டாலே தினமும் பண்டிகையாகத்தான் காட்சியளிக்கும். வேட்பாளர்கள் யார் எதை கொடுத்தாலும் பாகுபாடு பார்க்காமல் வாக்காளர்கள் அதை வாங்கத்தான் வேண்டிய சூழ்நிலைக்கு அரசியல் கட்சிகள் தள்ளிவிட்டன. சிக்கமகளூரு மாவட்டத்தில் சட்டசபை தேர்தலில் போட்டியிட சீட்டை எதிர்பார்த்து இருக்கும் அரசியல் கட்சி பிரமுகர்கள் மக்களுக்கு கறிவிருந்து வழங்கி வருகிறார்கள். சிலர் பரிசுப்பொருட்களை வழங்கி வருகிறார்கள். இது தவறான நடைமுறை. வாக்காளர்கள் அனைவரும் நாட்டுக்காகவும் மக்களுக்காகவும் கிராமத்திற்காகவும் நல்லது செய்யும் வேட்பாளருக்கு மட்டும் வாக்களிக்க வேண்டும். நாட்டையும் மக்களையும் காப்பாற்றுபவர்களை தேர்வு செய்ய மக்கள் சிந்தித்து ஓட்டுப்போட வேண்டும்" என்றார்.

சிவமொக்கா டவுன் வினோபா நகரை சேர்ந்த சாப்ட்வேர் என்ஜினீயர் கார்த்திக் கூறுகையில், "மே மாதம் நடைபெற உள்ள கர்நாடக சட்டமன்றத் தேர்தலில் கட்சிகளின் சார்பில் போட்டியிட வாய்ப்புள்ள வேட்பாளர்கள் இப்போதே தொகுதி மக்களுக்கு பரிசு பொருட்களை வழங்கி வாக்குகளை சேகரிக்கிறார்கள். இதில் தமிழகம் தான் முன்னோடி. அனைத்துக்கட்சி வேட்பாளர்களும் பணம் அல்லது பரிசுப்பொருட்களாக கொடுத்து தான் வெற்றி பெற வேண்டிய கட்டாயத்தில் இருப்பதாக நம்பத் தொடங்கி விட்டார்கள். மக்களும் அரசியல்வாதிகளிடம் இருந்து இந்த நேரம் தான் வாங்க முடியம் என கருதி பரிசுப்பொருட்களை வாங்குகிறார்கள். இதுதவறான முன்உதாரணம். இந்த ஜனநாயக விரோத செயலை தடுத்து நிறுத்த அரசும், தேர்தல் ஆணையமும் மக்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும். தங்கள் வாக்கு விற்பதற்கு அல்ல! நேர்மையான வேட்பாளருக்கு வாக்களிப்பது எனது கடமை என்ற எண்ணம் ஒவ்வொரு வாக்காளருக்கும் இருக்க வேண்டும். இருந்தால் மட்டுமே நல்ல மக்களாட்சி தத்துவம் பார்க்க முடியும்" என்றார்.

குடிமகனின் கடமை

உடுப்பி மாவட்டம் நிட்டூர் பகுதியை சேர்ந்த கேசவராஜன் கூறுகையில், கர்நாடக சட்டசபைக்கு ஏப்ரல் அல்லது மே மாதம் தேர்தல் நடக்க உள்ளது. பொதுவாக தேர்தல் தேதி அறிவிக்கப்பட்ட பிறகே அரசியல் கட்சியினர் பரிசுப்பொருட்கள், அசைவ விருந்து வைத்து வாக்காளர்களை கவர நடவடிக்கை எடுப்பார்கள். ஆனால் இந்த தடவை தேர்தல் தேதி அறிவிப்புக்கு முன்பே அரசியல் கட்சிகளை சேர்ந்தவர்கள் தங்களது தொகுதியில் விளையாட்டு போட்டிகள், கலை நிகழ்ச்சிகள் உள்ளிட்ட விழாக்கள் நடத்தி, குக்கர், கியாஸ் அடுப்பு, ஹாட்பாக்ஸ் உள்ளிட்ட பரிசு பொருட்களை வழங்கி வருகிறார்கள். அத்துடன் சிலர் பொதுமக்களுக்கு பிரியாணி, அசைவ உணவு விருந்தும் நடத்தி வருகிறார்கள். இதுவும் விதிமீறல் தான். இது கண்டித்தக்கது. இதை தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். இதுபோன்ற பரிசு பொருட்களை பொதுமக்கள் வாங்க கூடாது. பணமோ அல்லது பரிசுப்பொருட்களை வாங்காமல் வாக்களிப்பது தான் ஒவ்வொரு குடிமகனின் கடமை என்றார்.

மைசூரு டவுன் சந்திப்பேட்டையில் மளிகை கடை நடத்தி வரும் சி.குமார் கூறுகையில், "அனைத்து கட்சிகளை சேர்ந்தவர்களும் ஓட்டுக்கு பணம், பரிசுப்பொருட்கள் கொடுத்து வருகிறார்கள். தேர்தல் நேரத்தில் இவ்வாறு கொடுத்துவிட்டு மக்கள் ஏதாவது கோரிக்கைகள் வைத்தால், அப்போது பணம் கேட்கும் நிலை தான் உள்ளது. இதை பொதுமக்கள் புரிந்து, தேர்தல் நேரத்தில் அரசியல்வாதிகள் கொடுக்கும் பணம், பரிசுப்பொருட்களை வாங்குவதை புறக்கணிக்க வேண்டும். இல்லையெனில் 5 ஆண்டுக்கு அவர்களிடம் நாம் அடிமையாக இருக்க வேண்டும்" என்றார்.

தேர்தல் நடத்தும் அதிகாரி கருத்து

மைசூரு மண்டல கமிஷனரும், தேர்தல் நடத்தும் அதிகாரியுமான ஜி.சி. பிரகாஷ் கூறுகையில், "கர்நாடக மாநில சட்டசபைக்கு ஏப்ரல் மாதம் கடைசி அல்லது மே முதல் வாரத்தில் பொதுத் தேர்தல் நடைபெற இருக்கும் வாய்ப்புகள் உள்ளன. அதற்குள்ளேயே அரசியல் கட்சியினர் தங்களது தொகுதி வாக்காளர்களுக்கு பரிசுப்பொருட்கள் விருந்து கொடுத்து வருகிறார்கள். இது தவறான நடைமுறை. பொதுமக்கள் இந்த பணம் மற்றும் பொருட்களுக்கு ஆசைப்படக்கூடாது. தேர்தலில் பணமோ, பரிசுப்பொருளோ வாங்காமல் ஓட்டு போடுவது என்பது மகத்தானது. அது ஒவ்வொரு குடிமகனின் உரிமை. தேர்தல் தேதி அறிவிப்புக்கு முன்பே அரசியல் கட்சியினர் பரிசுப்பொருட்கள், விருந்து நடத்துவதை தடுக்க சட்டத்தில் இடம் இல்லை. தேர்தல் நடத்தை விதிகள் அமலில் இருக்கும் போது தான், வாக்காளர்களுக்கு பணம் அல்லது பரிசுப்பொருட்கள் பட்டுவாடா செய்தால் நடவடிக்கை எடுக்க முடியும்" என்றார்.

தேர்தல் சீர்திருத்தம் அவசியம்

பெங்களூரு மாகடி ரோடு பகுதியில் வசிக்கும் முன்னாள் எம்.எல்.ஏ.வான ெதா.வீ.நன்னன் கூறுகையில், "நாடு முழுவதும் கடந்த 2014-ம் ஆண்டுக்கு பிறகு இருந்தே தேர்தல் நடைமுறைகள் மாறி வருகிறது. காட்சி ரீதியாக மாற்றுவது, நுகர்வு கலாசாரத்தை சுரண்டுவது என்றாகி விட்டது. தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமலுக்கு வரும் முன்பாக மக்களுக்கு பணம், பரிசு பொருட்களை வழங்கி செலவு செய்வது என்பது, விதிமுறை மீறல் இல்லை, சட்டத்திற்கு உட்பட்டு நடப்பதாக கருதுகின்றனர். இதே நிலை இன்னும் 10 ஆண்டுகள் நீடித்தால், அரசியலில் பணக்காரர்கள் மட்டுமே போட்டியிட முடியும் என்ற நிலை உருவாகி, தகுதி படைத்தவர்கள் தேர்தலில் போட்டியிட முடியாத நிலை உருவாகி விடும். இதுபோன்று பணம், பரிசு பொருட்கள் வழங்குவதை தடுக்க தேர்தல் சீர்த்திருத்தங்கள் செய்வது அவசியம். அதாவது தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமலுக்கு வரும் 6 மாதங்களுக்கு முன்பாகவே அரசியல் கட்சிகளின் தலைவர்கள் மக்களுக்கு பணம், பரிசு பொருட்கள் வழங்குவதற்கு தேர்தல் ஆணையம் தடை விதிக்க வேண்டும்" என்றார்.

மேலும் செய்திகள்