மாற்றுத்திறனாளிகளை புண்படுத்தும் வார்த்தைகளை அரசியல் கட்சியினர் பயன்படுத்தக் கூடாது - தேர்தல் ஆணையம்
|ஊமை, குருடன் போன்ற வார்த்தைகளை பயன்படுத்துவதை அரசியல் கட்சினர் தவிர்க்க வேண்டும் என தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.
புதுடெல்லி,
அரசியல் கட்சியினர் பொதுக்கூட்டங்கள், தேர்தல் பிரச்சாரங்கள் மற்றும் பிற நிகழ்ச்சிகளில் மாற்றுத்திறனாளிகளை புண்படுத்தும் வகையிலான வார்த்தைகளை பயன்படுத்துவதை தவிர்க்க வேண்டும் என இந்திய தேர்தல் ஆணையம் அறிவுறுத்தியுள்ளது.
இது தொடர்பாக தேர்தல் ஆணையம் வெளியிட்டுள்ள வழிகாட்டு நெறிமுறையில், மாற்றுத்திறனாளிகளை புண்படுத்தும் வார்த்தைகளை அரசியல் கட்சியினர் பயன்படுத்துவது குறித்து தங்கள் கவனத்திற்கு வந்துள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது. இதனால் மாற்றுத்திறனாளிகளை கொச்சைப்படுத்தும் குறிப்புகள், சொற்களை பயன்படுத்தக் கூடாது என அறிவுறுத்தப்பட்டுள்ளது.
இதன்படி ஊமை, குருடன், செவிடன், நொண்டி போன்ற வார்த்தைகளை பயன்படுத்துவதை அரசியல் கட்சினர் மற்றும் கட்சிகளின் தலைவர்கள் தவிர்க்க வேண்டியது அவசியம் என தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது. மேலும் அறிக்கைகள், கட்டுரைகள் ஆகியவற்றில் இயலாமை, பாலின உணர்திறன், மொழி கண்ணியம் உள்ளிட்டவற்றை மதிக்கும் வகையிலான வார்த்தைகளையே பயன்படுத்துவோம் என்பதை அரசியல் கட்சிகள் தங்கள் இணையதளங்களில் அறிவிக்க வேண்டும் என தேர்தல் ஆணையம் அறிவுறுத்தியுள்ளது.