அமர்நாத் பக்தர் தவறவிட்ட ரூ.80 ஆயிரத்தை ஒப்படைத்த 2 போலீஸ்காரர்கள் - அமித்ஷா பாராட்டு
|காஷ்மீரில் புகழ்பெற்ற அமர்நாத் குகை கோவிலுக்கு கடந்த 1-ந் தேதி முதல் புனித பயணம் நடந்து வருகிறது.
புதுடெல்லி,
காஷ்மீரில் புகழ்பெற்ற அமர்நாத் குகை கோவிலுக்கு கடந்த 1-ந் தேதி முதல் புனித பயணம் நடந்து வருகிறது. இந்த பயணத்துக்கான பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த கூடுதல் சப்-இன்ஸ்பெக்டர் தர்ஷன் குமார் மற்றும் ஏட்டு சத்பால் இருவரும், அந்த பகுதியில் கேட்பாரற்று கிடந்த பை ஒன்றை எடுத்தனர். அதில் ரூ.80 ஆயிரம் மற்றும் பொருட்கள் இருந்தன. அவை அமர்நாத் யாத்திரையில் ஈடுபட்டுள்ள பெண் பக்தர் ஒருவருக்கு சொந்தமானவை என தெரியவந்தது. எனவே அவரை கண்டுபிடித்து ஒப்படைத்து விட்டனர்.
போலீஸ்காரர்களின் இந்த செயலை மத்திய உள்துறை மந்திரி அமித்ஷா பாராட்டி உள்ளார். இது தொடர்பாக அவர் தனது டுவிட்டர் தளத்தில், 'வாழ்க்கையில் நமது மரியாதை மற்றும் நேர்மையான செயல்களில்தான் உண்மையான வீரம் உள்ளது. இந்த கூற்றை காஷ்மீர் போலீஸ் கூடுதல் சப்-இன்ஸ்பெக்டர் தர்ஷன் குமார் மற்றும் ஏட்டு சத்பால் இருவரும் சரியென நிரூபித்துள்ளனர். தாங்கள் கண்டெடுத்த ரூ.80,000, செல்போன் மற்றும் பயண ஆவணங்கள் அடங்கிய பையை அதன் உரிமையாளரான அமர்நாத் யாத்ரீகரை கண்டுபிடித்து ஒப்படைத்து உள்ளனர். நேர்மைக்கு எடுத்துக்காட்டாக இருந்ததற்காக அவர்களை பாராட்டுகிறேன்' என குறிப்பிட்டு உள்ளார்.