மணிப்பூரில் மீண்டும் கலவரம்: போலீஸ் அதிகாரி சுட்டுக்கொலை
|மாநிலத்தில் நீடித்து வரும் வன்முறைச் சம்பவங்களில் இதுவரை 180-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்தனர்.
இம்பால்,
மணிப்பூரின் பள்ளத்தாக்கு மாவட்டங்களில் அதிகம் வசிக்கும் மைதேயி சமூகத்தினருக்கும், மலை மாவட்டங்களில் அதிகம் வாழும் குக்கி பழங்குடியினருக்கும் இடையே கடந்த மே மாதத்தில் இருந்து மோதல் நீடித்து வருகிறது.
மாநில மக்கள்தொகையில் 53 சதவீதம் உள்ள மைதேயி சமூகத்தினர், தங்களுக்கு பழங்குடியின அந்தஸ்து கோரும் நிலையில், அதற்கு குக்கி பழங்குடியினர் எதிர்ப்பு தெரிவிக்கின்றனர். இதுவே மோதலுக்கு முக்கிய காரணமாகும்.
மாநிலத்தில் நீடித்து வரும் வன்முறைச் சம்பவங்களில் இதுவரை 180-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்தனர். நூற்றுக்கணக்கானோர் காயமடைந்துள்ளனர். ஆயிரக்கணக்கான மக்கள், வீடுகளைவிட்டு வெளியேறி அரசின் நிவாரண முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.
இந்தநிலையில், சுராசந்த்பூர் மாவட்டத்தில் பணியிலிருந்த ஆங்கோமாங் என்ற துணை ஆய்வாளர் இன்று பிற்பகல் 1.30 மணியளவில் மர்ம நபர்களால் தலையில் சுட்டுக் கொல்லப்பட்டார். இந்த துப்பாக்கிச் சூட்டில் மேலும் இருவர் காயமடைந்துள்ளனர். முன்னதாக, நேற்று காங்போக்பி மாவட்டத்தில் மர்ம நபர்கள் நடத்திய துப்பாக்கிச்சூட்டில் பழங்குடியினர் 3 பேர் உயிரிழந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.
4 மாதங்களுக்கும் மேலாக நீடித்து வரும் வன்முறையை கட்டுப்படுத்த குக்கி மக்கள் தொடர்ந்து வலியுறுத்தி வருகின்றனர்.