கர்ப்பிணி மனைவியை கொன்ற போலீஸ்காரர் - ஜம்மு காஷ்மீரில் அதிர்ச்சி சம்பவம்
|ஜம்மு காஷ்மீரில் கர்ப்பிணி மனைவியை போலீஸ்காரர் ஒருவர் கொன்ற சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
கதுவா,
ஜம்மு காஷ்மீர், கதுவா மாவட்டத்தில் சிறப்புக் காவல் அதிகாரி ஒருவர் தனது கர்ப்பிணி மனைவியை கொன்ற சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. குற்றம் சாட்டப்பட்ட மோகன் லால் என்பவர் தலைமறைவாக உள்ளதாகவும் கோபமடைந்த கிராமவாசிகள் சிலர் அவரது வீட்டிற்கு தீ வைத்ததாகவும் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
குற்றவாளியை கைது செய்ய தனிப்படை அமைக்கப்பட்டுள்ளதாக கதுவா மூத்த காவல் கண்காணிப்பாளர் ரமேஷ் சந்தர் கோட்வால் தெரிவித்துள்ளார். பில்லவார் பகுதியில் உள்ள தரால்டா கிராமத்தில் இந்த சம்பவம் நடந்துள்ளது.
கதுவா மாவட்டக் காவல் கோட்டத்தில் மோகன் லால் பணியமர்த்தப்பட்டுள்ளார். இவரது மனைவி ஆஷாதேவி (வயது 32). இவர்களுக்கு இரண்டு பெண் குழந்தைகள் உள்ளனர். கடந்த மூன்று நாட்களாக லால் விடுமுறையில் இருந்துள்ளார். இந்த நிலையில் இருவருக்கும் இடையே குடும்ப விஷயங்கள் தொடர்பாக வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது.
வாக்குவாதத்தைத் தொடர்ந்து மோகன் லால், ஆஷாவை கொடூரமாகக் கொன்றுள்ளா். அக்கம்பக்கத்தினர் வருவதற்குள் மோகன் லால் அந்த இடத்தை விட்டு ஓடிவிட்டார். கிளர்ச்சியடைந்த கிராமவாசிகள் சிலர் போலீசார் நிலைமையை கட்டுக்குள் கொண்டுவருவதற்கு முன்பு அவரது வீட்டை எரித்தனர்.
ஆஷா எட்டு மாத கர்ப்பிணியாக இருந்ததாகவும், அவரது வயிற்றில் இருந்த குழந்தை இறந்துவிட்டதாகவும் அதிகாரிகள் தெரிவித்தனர்.