டெல்லியில் ரூ.2,000 கோடி மதிப்புள்ள 900 கிலோ போதைப்பொருட்கள் பறிமுதல் - போலீஸ் அதிரடி
|போதை விருந்துகளில் பயன்படுத்தப்படும் ‘மெபெட்ரோன்’ போதைப்பொருளை போலீசார் பறிமுதல் செய்தனர்.
புதுடெல்லி,
மராட்டிய மாநிலம் புனேவில், போதைப்பொருள் தடுப்புச் சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்து போலீசார் தீவிர தேடுதல் வேட்டை நடத்தினர். இதில் 'மெபெட்ரோன்' எனப்படும் போதைப்பொருளை பறிமுதல் செய்த போலீசார், இது தொடர்பாக 3 பேரை கைது செய்து விசாரணை நடத்தினர்.
அவர்களிடம் இருந்து கிடைத்த தகவலின் அடிப்படையில், தலைநகர் டெல்லியில் உள்ள கோட்லா முபாரக்பூர் பகுதியில் டெல்லி மற்றும் புனே போலீசார் இணைந்து தேடுதல் வேட்டை நடத்தினர். இதில் 300 கிலோ 'மெபெட்ரோன்' (Mephedrone) போதைப்பொருள் பறிமுதல் செய்யப்பட்டதோடு, 2 பேர் கைது செய்யப்பட்டனர்.
இதைத் தொடர்ந்து டெல்லி ஹவுஸ் காஸ் பகுதியில் போலீசார் நடத்திய சோதனையில் 600 கிலோ 'மெபெட்ரோன்' போதைப்பொருள் பறிமுதல் செய்யப்பட்டது. இதன் மூலம் டெல்லியில் மொத்தம் 900 கிலோ போதைப்பொருட்களை போலீசார் பறிமுதல் செய்துள்ளனர். இதன் மதிப்பு சுமார் ரூ.2,000 கோடி என தெரிவிக்கப்பட்டுள்ளது.
மொத்தமாக புனே மற்றும் டெல்லியில் நடத்தப்பட்ட சோதனைகளில் 1,100 கிலோ போதைப்பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டதாகவும், அவற்றின் மதிப்பு சுமார் ரூ.2,500 கோடி என்றும் போலீசார் தெரிவித்துள்ளனர். இதில் போலீசார் பறிமுதல் செய்துள்ள 'மெபெட்ரோன்' என்ற போதைப்பொருள், அதிக அளவில் போதை விருந்துகளில் பயன்படுத்தப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.