< Back
தேசிய செய்திகள்
1 லட்சம் பழைய வழக்குகளில் விசாரணையை முடிக்க 90 நாட்கள் கெடு
தேசிய செய்திகள்

1 லட்சம் பழைய வழக்குகளில் விசாரணையை முடிக்க 90 நாட்கள் கெடு

தினத்தந்தி
|
12 Sept 2023 3:10 AM IST

கர்நாடகத்தில் கடந்த 10 ஆண்டுகளாக கிடப்பில் போடப்பட்ட 1 லட்சம் பழைய வழக்குகளில் விசாரணையை முடிக்க போலீசாருக்கு 90 நாட்கள் கெடு விதித்து மாநில கூடுதல் போலீஸ் டி.ஜி.பி. உமேஷ்குமார் உத்தரவிட்டுள்ளார்.

பெங்களூரு:

கர்நாடகத்தில் கடந்த 10 ஆண்டுகளாக கிடப்பில் போடப்பட்ட 1 லட்சம் பழைய வழக்குகளில் விசாரணையை முடிக்க போலீசாருக்கு 90 நாட்கள் கெடு விதித்து மாநில கூடுதல் போலீஸ் டி.ஜி.பி. உமேஷ்குமார் உத்தரவிட்டுள்ளார்.

90 நாட்கள் கெடு

கர்நாடகத்தில் உள்ள போலீஸ் நிலையங்களில் பதிவாகி 1 லட்சத்து 3 ஆயிரத்திற்கும் மேற்பட்ட வழக்குகள் விசாரணை முடிக்கப்படாமல் நிலுவையில் இருந்து வருகிறது. கடந்த 10 ஆண்டுகளில் பதிவான ஒரு லட்சத்திற்கும் மேற்பட்ட வழக்குகளை முடித்து வைக்க கூடுதல் போலீஸ் டி.ஜி.பி. உமேஷ்குமார் முடிவு செய்துள்ளார்.

இதற்காக போலீசாருக்கு 90 நாட்கள் கெடுவும் விதிக்கப்பட்டுள்ளது. இதையடுத்து, ஒவ்வொரு போலீஸ் நிலையங்களிலும் பதிவான பல ஆண்டுகளாக கிடப்பில் போடப்பட்ட கொலை, கொள்ளை உள்ளிட்ட வழக்குகளை மீண்டும் கையில் எடுத்து விசாரணை நடத்தும் பணிகளில் போலீசார் ஈடுபட்டுள்ளனர்.

ஒரு லட்சம் பழைய வழக்குகள்

இதுகுறித்து கூடுதல் போலீஸ் டி.ஜி.பி. உமேஷ்குமார் நிருபர்களிடம் கூறுகையில், 'மாநிலம் முழுவதும் பல்வேறு போலீஸ் நிலையங்களில் கடந்த 10 ஆண்டுகளில் பதிவான 1 லட்சத்து 3 ஆயிரத்திற்கும் மேற்பட்ட வழக்குகள் என்ன ஆனது என்பது தெரியாமல் உள்ளது. அந்த வழக்குகளில் சம்பந்தப்பட்டவர்களுக்கு நியாயம் கொடுக்க முன்வந்துள்ளோம். இதையடுத்து, அந்த வழக்குகளில் விசாரணையை முடிக்க 90 நாட்கள் கெடு விதிக்கப்பட்டுள்ளது.

சம்பந்தப்பட்ட போலீஸ் சூப்பிரண்டுகள், ஐ.ஜி.க்களுக்கும் உத்தரவிட்டுள்ளேன். வெறும் விசாரணையை மட்டும் முடிக்காமல் குற்றவாளிகளுக்கு கோர்ட்டில் கூடுதல் தண்டனை பெற்றுக் கொடுக்க சரியான ஆவணங்களை திரட்டவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது. ஒவ்வொரு மாதமும் 2 ஆயிரம் வழக்குகளில் விசாரணையை முடிக்க உத்தரவிடப்பட்டுள்ளது' என்றார்.

மேலும் செய்திகள்