< Back
தேசிய செய்திகள்
புனே ரெயில் நிலையத்தில் தூங்கிக்கொண்டிருந்த பயணிகள் மீது தண்ணீர் ஊற்றிய காவலர் - வைரலாகும் வீடியோ
தேசிய செய்திகள்

புனே ரெயில் நிலையத்தில் தூங்கிக்கொண்டிருந்த பயணிகள் மீது தண்ணீர் ஊற்றிய காவலர் - வைரலாகும் வீடியோ

தினத்தந்தி
|
2 July 2023 2:13 AM IST

இணையத்தில் விடியோ வைரலாக பரவிய நிலையில், புனே ரயில் நிலைய கோட்ட மேலாளர் இது குறித்து வருத்தம் தெரிவித்துள்ளார்.

மும்பை,

மராட்டிய மாநிலம் புனேவில் உள்ள ரெயில் நிலையத்தில் ரெயிலுக்காக காத்திருந்த பயணிகள் சிலர் அங்குள்ள நடைபாதையிலேயே தூங்கிக் கொண்டிருந்தனர். அவர்கள் மீது ரெயில்வே காவலர் ஒருவர் தண்ணீர் பாட்டிலில் இருந்து தண்ணீரை ஊற்றியபடி செல்லும் காட்சி இணையத்தில் வேகமாக பரவி வருகிறது.

முகத்தில் தண்ணீர் பட்டதும் தூங்கிக் கொண்டிருந்தவர்கள் பதறியெழுந்து பார்ப்பதும், அந்த காவலர் எதுவும் நடக்காதது போல் கடந்து செல்வதும் அந்த வீடியோவில் பதிவாகியுள்ளது. அருகில் நடந்து சென்று கொண்டிருந்த பயணிகள் சிலர் அந்தக் காவலரின் செயலை அதிர்ச்சியுடன் பார்த்துச் செல்கின்றனர்.

இந்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாக பரவிய நிலையில், சம்பந்தப்பட்ட காவலரை நெட்டிசன்கள் கடுமையாக விமர்சித்து வருகின்றனர். இது மனிதாபிமானமற்ற செயல் என பலர் தங்கள் கருத்துக்களை பதிவிட்டு வருகின்றனர். அதே சமயம் நடைமேடையை ஆக்கிரமித்து பயணிகள் படுத்துறங்கியதால் அவர்களை அப்புறப்படுத்த அந்தக் காவலர் அப்படி நடந்து கொண்டதில் தவறில்லை என்றும் சிலர் ஆதரவாக பதிவிட்டுள்ளனர்.

இந்த நிலையில், இந்த சம்பவம் குறித்து புனே ரயில்வே கோட்ட மேலாளர் இந்து துபே தனது டுவிட்டர் பக்கத்தில் விளக்கம் கொடுத்துள்ளார். அதில், "நடைமேடையில் தூங்குவது நடந்து செல்பவர்களுக்கு இடையூறாக இருக்கும். ஆனால் அதற்காக அந்த சூழலைக் கையாண்ட விதம் நிச்சயமாக சரியானது அல்ல. சம்பந்தப்பட்ட அந்த ஊழியரிடம் பயணிகளை மாண்புடன், மரியாதையுடன், கனிவாக நடத்தும்படி கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது. இந்த சம்பவத்துக்காக வருந்துகிறோம்" என்று தெரிவித்துள்ளார்.



மேலும் செய்திகள்