< Back
தேசிய செய்திகள்
ரேணுகாச்சார்யா சகோதரர் மகன் மர்மசாவு வழக்கில் மடாதிபதி வினய்குருஜி சுவாமியிடம் போலீசார் விசாரணை
தேசிய செய்திகள்

ரேணுகாச்சார்யா சகோதரர் மகன் மர்மசாவு வழக்கில் மடாதிபதி வினய்குருஜி சுவாமியிடம் போலீசார் விசாரணை

தினத்தந்தி
|
8 Nov 2022 3:27 AM IST

ரேணுகாச்சாரியா எம்.எல்.ஏ.வின் சகோதரர் மகன் சந்திரசேகர் மர்ம சாவு வழக்கில் மடாதிபதி வினய்குருஜி சுவாமியிடம் தனிப்படை போலீசார் விசாரணை நடத்தினர்.

சிக்கமகளூரு:

ரேணுகாச்சாரியா எம்.எல்.ஏ.வின் சகோதரர் மகன் சந்திரசேகர் மர்ம சாவு வழக்கில் மடாதிபதி வினய்குருஜி சுவாமியிடம் தனிப்படை போலீசார் விசாரணை நடத்தினர்.

கால்வாயில் பிணமாக மீட்பு

தாவணகெரே மாவட்டம் ஒன்னாளி தொகுதி பா.ஜனதா எம்.எல்.ஏ. ரேணுகாச்சார்யா. இவரது சகோதரர் ரமேசின் மகன் சந்திரசேகர், கடந்த 30-ந் தேதி காரில் வெளியே சென்றவர் வீடு திரும்பவில்லை. குடும்பத்தினர் மற்றும் நண்பர்கள் தேடிப்பார்த்தும் அவர் கிடைக்கவில்லை. இதையடுத்து மர்மநபர்கள் கடத்தி சென்றிருக்கலாம் என்ற சந்தேகத்தில் ஒன்னாளி போலீசில் புகார் அளிக்கப்பட்டது. இந்த புகாரின் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து சந்திரசேகரை தேடி வந்தனர். இதற்காக 5 தனிப்படை அமைக்கப்பட்டது. அவர்கள் அவர் கார் சென்ற பகுதியில் இருந்த ரகசிய கண்காணிப்பு கேமராக்களில் பதிவான காட்சிகளை ஆய்வு செய்தனர்.

அதில் அவர் சிவமொக்கா சென்றுவிட்டு, சிக்கமகளூரு மாவட்டம் கொப்பா தாலுகா கெளரிகத்தே பகுதியில் உள்ள வினய் குருஜி சுவாமியின் மடத்திற்கு சென்று அவரை சந்தித்து பேசியது தெரியவந்தது. இந்த நிலையில் கடந்த 4-ந் தேதி நியாமதி-ஒன்னாளிக்கு இடைப்பட்ட கடதக்கட்டே கிராத்தில் உள்ள துங்கா கால்வாயில் சந்திரசேகரின் கார் கிடந்தது. அந்த காரை கிரேன் மூலம் வெளியே எடுத்தபோது உள்ளே சந்திரசேகர் அழுகிய நிலையில் பிணமாக கிடந்தார். ஆனால் அவர் கார் விபத்தில் சிக்கி உயிரிழந்தாரா, தற்கொலையா அல்லது கடத்தல் கொலையா என்பது தெரியவில்லை. இதனால் அவரது சாவில் மர்மம் சூழ்ந்துள்ளது. இதுதொடர்பாக பல்வேறு கோணங்களில் போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

மடாதிபதியிடம் விசாரணை

இந்த நிலையில் சந்திரசேகர் சென்ற வினய் குருஜியின் மடத்திற்கு தனிப்படை போலீசார் சென்று விசாரணை நடத்தினர். அதாவது வினய்குருஜி, மடத்தில் இருந்த ஊழியர்கள், பக்தர்களிடம் போலீசார் விசாரணை நடத்தினர்.

அப்போது சந்திரசேகர் ஆசீர்வாதம் பெறுவதற்கு மட்டுமே வந்து சென்றது தெரியவந்தது. அங்கிருந்து காரில் வீட்டிற்கு தனியாகத்தான் சென்றதாக கூறப்படுகிறது. இதை வைத்து போலீசார் அடுத்தகட்ட விசாரணையை தொடங்கியுள்ளனர்.

தந்தை பேட்டி

இதற்கிடையே சந்திரேசேகரின் தந்தை ரமேஷ் நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது:-

'எனது மகன் சந்திரசேகரின் உடல் பிரேத பரிசோதனையின்போது அவரது உள்ளாடை இல்லை. மேலும் அவரது மர்ம உறுப்பில் வீக்கம் ஏற்பட்டு ஊசி போட்டதற்கான அடையாளங்கள் உள்ளது. இதுவே எனது மகன் கொலை செய்யப்பட்டதற்கான சாட்சியாகும். இதுபோன்று கொலைக்கு பல்வேறு ஆதாரங்கள் உள்ளது. இதுதொடர்பாக போலீசார் தீவிர விசாரணை நடத்த வேண்டும்' என்றார்.

மேலும் செய்திகள்