< Back
தேசிய செய்திகள்
உ.பி.யில் 2 ஆண்டுகளாக சட்டவிரோதமாக தங்கி இருந்த சீனர் - நாகலாந்து காதலியுடன் கைது...!
தேசிய செய்திகள்

உ.பி.யில் 2 ஆண்டுகளாக சட்டவிரோதமாக தங்கி இருந்த சீனர் - நாகலாந்து காதலியுடன் கைது...!

தினத்தந்தி
|
21 Jun 2022 3:06 PM IST

உத்தரபிரதேசத்தில் 2 ஆண்டுகளாக சட்டவிரோதமாக தங்கி இருந்த சீனரை போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர்.

நொய்டா,

பீகார் மாநிலத்தில் கடந்த 11-ம் தேதி இந்திய-நேபாள எல்லையை சட்டவிரோதமாக கடக்க முயன்ற 2 பேரை போலீசார் கைது செய்தனர். கைது செய்யப்பட்ட நபர்களிடம் நடந்த விசாரணையில் இருவரும் சீனாவை சேர்ந்தவர்கள் என்பது தெரியவந்தது.

இதனை தொடர்ந்து அவர்களிடம் நடத்தப்பட்ட விசாரணையில் உத்தரபிரதேச மாநிலம் கிரேட்டர் நொய்டாவில் மேலும் ஒரு சீனர் சட்டவிரோதமாக வசித்து வந்தது போலீசாருக்கு தெரியவந்தது.

இந்த தகவலை தொடர்ந்து விசாரணையை தீவிரப்படுத்திய போலீசார் கடந்த 13-ம் தேதி அரியானா மாநிலம் குருக்கிராமில் உள்ள ஒரு ஓட்டலில் தங்கி இருந்த பெண் உள்பட 2 பேரை கைது செய்தனர்.

கைது செய்யப்பட்ட நபர்களிடம் நடத்தப்பட்ட விசாரணையில் அந்த பெண் நாகலாந்தை சேர்ந்த பெட்ரிஹுரினொ (வயது 22) என்பதும் மற்றொரு நபர் சீனாவை சேர்ந்த ஜி ஃபி அக் கிலெ (வயது 36) என்பதும் தெரியவந்தது.

பெட்ரிஹுரினொவும் ஜிஃபியும் காதலித்து வந்ததும் அவர்கள் இருவரும் உத்தரபிரதேசத்தின் கிரெட்டர் நொய்டா கடந்த 2020-ம் ஆண்டு முதல் வசித்து வந்ததும் தெரியவந்தது. அதேவேளை, ஜிஃபி விசா உள்பட உரிய ஆவணங்கள் இன்றி சட்டவிரோதமாக வாழ்ந்து வந்ததும் விசாரணையில் கண்டுபிடிக்கப்பட்டது.

இதனை தொடர்ந்து 2 பேரையும் கைது செய்த போலீசார் கோர்ட்டில் ஆஜர்படுத்தினர். அவர்கள் இருவரையும் 3 நாட்கள் காவலில் எடுத்து விசாரிக்க அனுமதிக்கப்பட்டது.

3 நாள் விசாரணைக்கு பின் இருவரும் இன்று கோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட்டு பின்னர் சிறையில் அடைக்கப்பட்டனர்.

மேலும் செய்திகள்