< Back
தேசிய செய்திகள்
முஸ்லிம் தலைவர்களுடன் போலீஸ் கமிஷனர் அமைதி பேச்சுவார்த்தை ; மத நல்லிணக்கத்தை நிலைநாட்ட ஒத்துழைப்பு வழங்க வேண்டுகோள்
தேசிய செய்திகள்

முஸ்லிம் தலைவர்களுடன் போலீஸ் கமிஷனர் அமைதி பேச்சுவார்த்தை ; மத நல்லிணக்கத்தை நிலைநாட்ட ஒத்துழைப்பு வழங்க வேண்டுகோள்

தினத்தந்தி
|
14 Jun 2022 8:54 PM IST

மங்களூருவில் தொடர்ந்து பதற்றம் நீடித்து வரும் நிலையில், முஸ்லிம் தலைவர்களுடன் போலீஸ் கமிஷனர் சசிகுமார் அமைதி பேச்சுவார்த்தை நடத்தினார்.

மங்களூரு;

அமைதி பேச்சுவார்த்தை

கர்நாடக கடலோர மாவட்டமான தட்சிண கன்னடாவில் கடந்த சில மாதங்களாக ஹிஜாப், ஹலால் உள்ளிட்ட பிரச்சினைகளால் மத மோதல் தொடர்பாக பதற்றமான சூழ்நிலை நிலவி வருகிறது. இதனை தடுக்க போலீசார் தீவிர நடவடிக்கை எடுத்து வருகிறார்கள். இந்த நிலையில், நபிகள் நாயகம் குறித்து சர்ச்சை கருத்து தெரிவித்த பா.ஜனதா செய்தி தொடர்பாளராக இருந்த நுபுர் சர்மாவுக்கு எதிராக நாடு முழுவதும் போராட்டம் நடந்து வருகிறது.

சில மாநிலங்களில் போராட்டத்தில் வன்முறை வெடித்துள்ளது. இதேபோல், தட்சிண கன்னடா மாவட்டம் மங்களூருவிலும் நுபுர் சர்மாவை கண்டித்து முஸ்லிம் அமைப்புகள் பெரிய அளவில் போராட்டம் நடத்த உள்ளதாக சமூக வலைத்தளங்களில் வீடியோ ஒன்று வைரலானது.

இந்த நிலையில் மங்களூருவில் தொடர்ந்து பதற்றமான சூழ்நிலை நிலவி வரும் நிலையில், நேற்று முன்தினம் மாநகர போலீஸ் கமிஷனர் சசிகுமார், தட்சிண கன்னடா மாவட்ட முஸ்லிம் தலைவர்களுடன் தனது அலுவலகத்தில் அமைதி பேச்சுவார்த்தை நடத்தினார். இதில் பல்வேறு முஸ்லிம் அமைப்புகளை சேர்ந்த 60 பேர் கலந்துகொண்டனர்.

ஒத்துழைப்பு அளிக்க வேண்டும்

இந்த கூட்டத்தில் போலீஸ் கமிஷனர் சசிகுமார் பேசுகையில் 'நாடு முழுவதும் நடத்தப்படும் போராட்டங்கள் மங்களூருவிலும் நடைபெற வேண்டும் என்று சமூக வலைத்தளங்களில் தகவல் பரவுகின்றன. மத உணர்வுகளையும், மோதல்களையும் தூண்டும் நோக்கத்தில் சிலர் சமூக வலைத்தளங்களில் தவறான தகவல்களை பதிவிடுகிறார்கள். இதனை காவல் துறை கண்காணிக்கிறது. ஏற்கனவே சமூக வலைத்தளங்களில் வதந்தி பரப்பியதாக பலர் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இந்த வதந்திகளுக்கு யாரும் செவிசாய்க்க வேண்டாம்.

நகரில் அமைதி மற்றும் மத நல்லிணக்கத்தை நிலைநாட்ட ஒத்துழைப்பு அளிக்க வேண்டும். பொதுமக்களின் பாதுகாப்பு தான் முக்கியம். நகரில் அசம்பாவித சம்பவங்கள் நடக்காமல் தடுக்க போலீசார் முனைப்புடன் செயல்பட்டு வருகிறார்கள். இதுபோன்ற கூட்டங்கள் அடிக்கடி நடத்தப்படும். போலீஸ் நிலைய அளவிலும், மண்டல அளவிலும் தொடர்ந்து அமைதி பேச்சுவார்த்தை நடத்தப்படும்' என்றார்.

பாராட்டுக்குரியது

முன்னதாக முஸ்லிம் தலைவர்கள் பேசுகையில், 'சமூக வலைத்தளங்களில் வைரலாகும் வீடியோ முற்றிலும் தவறானது. நகரில் போராட்டம் நடத்துவது தொடர்பாக நாங்கள் எந்த முடிவும் எடுக்கவில்லை. மத மோதல்களை தூண்ட சமூக வலைத்தளங்களில் வதந்தி பரப்புகிறார்கள். அவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும். இதுபோன்ற அமைதி பேச்சுவார்த்தை அடிக்கடி நடத்தப்பட வேண்டும்.

சமூகத்தில் சில குழப்பங்கள் ஏற்பட்டுள்ளது. அதனை கட்டுப்படுத்த போலீஸ் கமிஷனர் எடுத்த இந்த முயற்சி பாராட்டுக்குரியது. மங்களூரு நகரில் அமைதி மற்றும் மத நல்லிணக்கத்தை பேணுவதற்கு போலீசாருக்கு எங்களின் முழு ஒத்துழைப்பையும் வழங்குவோம்.

போலீசாரின் உத்தரவுக்கு முஸ்லிம் தலைவர்கள் அனைவரும் கட்டுப்படுவோம்' என்றனர். இந்த கூட்டத்தில், துணை போலீஸ் கமிஷனர்கள் ஹரிராம் சங்கர், தினேஷ்குமார், உதவி போலீஸ் கமிஷனர் கீதா உள்பட பலர் கலந்துகொண்டனர்.

மேலும் செய்திகள்