தசரா ஊர்வலத்தில் ராஜ உடையில் போலீசார், கலைக்குழுவினர்
|மன்னர் காலத்திற்கு பிறகு முதன்முறையாக தசரா ஊர்வலத்தில் ராஜ உடையில் போலீசார், கலைக்குழுவினர் வலம்வர உள்ளனர். இதற்கான ஏற்பாடுகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது.
மைசூரு
மைசூரு தசரா விழா
கர்நாடகத்தில் கொண்டாடப்படும் பண்டிகைகளில் முக்கியமானது, மைசூரு தசரா விழா. இந்த பண்டிகை ஆண்டுதோறும் நவராத்திரி விழாவையொட்டி கொண்டாடப்படுகிறது.
அதுபோல் இந்த ஆண்டு 414-வது தசரா விழா வருகிற 15-ந்தேதி தொடங்கி 24-ந்தேதி வரை 10 நாட்கள் கொண்டாடப்பட உள்ளது.
எப்போதும் வெகுவிமரிசையாக கொண்டாடப்படும் தசரா விழா இந்த ஆண்டு மாநிலத்தில் வறட்சி நிலவுவதால் எளிமையாகவும், அர்த்தமுள்ள வகையிலும் கொண்டாட கர்நாடக அரசு திட்டமிட்டுள்ளது. விழாவின் சிகர நிகழ்ச்சியான ஜம்புசவாரி எனும் தசரா ஊர்வலம் வருகிற 24-ந்தேதி நடைபெறுகிறது.
இதில் மைசூரு காவல் தெய்வம் சாமுண்டீஸ்வரி அம்மன் இருக்கும் தங்க அம்பாரியை சுமந்து செல்லும் அபிமன்யு வீர நடை போட, அதன் பிறகு மற்ற யானைகளும் ராஜநடை போடும். அதைத்தொடர்ந்து குதிரைப்படை, பேண்டு வாத்தியக் குழு என போலீசார், ஆயுதப்படை போலீசாரும் அணிவகுத்து செல்வார்கள்.
அலங்கார ஊர்திகள்
அத்துடன் மாநிலம் முழுவதும் இருந்து பல்வேறு கலைக்குழுவினரும், கலை, கலாசாரம், பண்பாட்டை விளக்கும் அலங்கார ஊர்திகளும் அணிவகுப்பு ஊர்வலமாக மைசூரு அரண்மனையில் இருந்து தீப்பந்தம் விளையாட்டு நடைபெறும் பன்னிமண்டபத்திற்கு செல்லும்.
5 கிலோ மீட்டர் தூரத்திற்கு நடைபெறும் இந்த தசரா ஊர்வலத்தை கர்நாடகம் மட்டுமின்றி, தமிழ்நாடு, ஆந்திரா, தெலுங்கானா மற்றும் வெளிநாடுகளில் இருந்தும் லட்சக்கணக்கான மக்கள் கண்டு ரசிப்பார்கள்.
இந்த ஊர்வலத்தில் கலந்துகொள்ளும் போலீசார் இப்போது காக்கி சீருடையில் பங்கேற்று வருகிறார்கள். தொடக்கத்தில் மைசூரு மன்னர்கள் சார்பில் தசரா விழா கொண்டாடப்பட்டு வந்தது. பின்னர் மன்னர்கள் ஆட்சி முடிந்து நாடு சுதந்திரம் அடைந்தது முதல் மைசூரு தசரா விழாவை கர்நாடக அரசு கொண்டாடி வருகிறது.
போலீசாருக்கு...
மைசூரு மன்னர்கள் காலத்தில் நடந்த தசரா விழாவில், படைத்தளபதிகள், காவலர்கள் ராஜ உடையில் தசரா ஊர்வலத்தில் பங்கேற்பார்கள். ஆனால் அதன் பின்னர் அரசு சார்பில் நடத்தப்பட்டு வரும் இந்த விழாவில் போலீசார், நகர ஆயுதப்படை போலீசார், காக்கி சீருடையிலும், போலீஸ் பேண்டுவாத்திய குழுவினர் வெள்ளை நிற உடையிலும் பங்கேற்று வருகிறார்கள்.
இந்த நிலையில் மைசூரு தசரா விழா ஊர்வலத்தில் மன்னர்கள் காலத்திற்கு பிறகு முதன்முறையாக இந்த ஆண்டு மைசூரு தசரா ஊர்வலத்தில் பங்கேற்கும் போலீசார் அனைவரும் ராஜ உடையில் வலம் வர உள்ளனர். இதற்கான ஏற்பாடுகளை மைசூரு மாவட்ட நிர்வாகமும், மைசூரு தசரா விழா கமிட்டியும் முடிவு செய்துள்ளது.
ராஜ உடைகள் தயார்
மேலும் தசரா ஊர்வலத்தில் பங்கேற்கும் போலீசார் மட்டுமின்றி கலைக்குழுவினரும் மன்னர் காலத்தில் எப்படி ராஜ உடை அணிந்திருப்பார்களோ அதுபோல் உடை அணிந்து செல்ல உள்ளனர்.
இதற்கான ராஜ உடைகள் தயாரிப்பு பணிகள் தீவிரமாக நடைபெற்று வருவதாகவும், 200-க்கும் மேற்பட்டோர் ராஜ உடையில் தசரா ஊர்வலத்தில் பங்கேற்பார்கள் என கூறப்படுகிறது.
அதாவது கிரீன் லான்சர், ரெட் லான்சன், கிரில் மீசை, டைட்டில், தர்பார் ஹுடோக்கள், அரண்மனை காவலர்கள் உடைகள் தயாராகி வருவதாக தகவல் வெளியாகியுள்ளது.
மைசூரு மன்னர் காலத்தில் நடந்த தசரா விழாவை இன்று பலரும் புகைப்படங்களில் தான் பார்த்து இருப்பார்கள். எனவே மன்னர்கள் காலத்தில் நடைபெற்ற தசரா விழா ஊர்வலத்தை போல் இந்த ஆண்டு நடத்த திட்டமிடப்பட்டு இருப்பதாக கூறப்படுகிறது.