விளைநிலத்தில் விஷம் குடித்து மயங்கி கிடந்த வாலிபர் மற்றும் இளம்பெண்; சிகிச்சை பலனின்றி இளைஞர் சாவு
|கொள்ளேகால் அருகே விளைநிலத்தில் விஷம் குடித்து ஒரு வாலிபரும், இளம்பெண்ணும் மயங்கி கிடந்தனர். இதில் வாலிபர் சிகிச்சை பலனின்றி இறந்தார்.
கொள்ளேகால்:
கொள்ளேகால் அருகே விளைநிலத்தில் விஷம் குடித்து ஒரு வாலிபரும், இளம்பெண்ணும் மயங்கி கிடந்தனர். இதில் வாலிபர் சிகிச்சை பலனின்றி இறந்தார். இளம்பெண்ணுக்கு ஆஸ்பத்திரியில் தொடர்ந்து தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
விஷம் குடித்த நிலையில்...
சாம்ராஜ்நகர் மாவட்டம் கொள்ளேகால் தாலுகா லக்கரசனஹபாளையா கிராமம் அருகே உள்ள ஒரு விவசாய தோட்டத்தில் நேற்று முன்தினம் மாலையில் ஒரு வாலிபரும், இளம்பெண்ணும் விஷம் குடித்த நிலையில் மயங்கி கிடந்தனர். அவர்கள் அருகே விவசாயத்திற்கு பயன்படுத்தப்படும் ஒரு பூச்சிக்கொல்லி(விஷம்) மருந்து பாட்டிலும் கிடந்தது. அதைப்பார்த்த கிராம மக்கள் இதுபற்றி கொள்ளேகால் டவுன் போலீசாருக்கு தகவல் அளித்தனர்.
தகவல் அறிந்த போலீசார் விரைந்து வந்து இருவரையும் மீட்டு சிகிச்சைக்காக ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். அவர்களுக்கு கொள்ளேகால் தாலுகா அரசு ஆஸ்பத்திரியில் முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டு மேல்சிகிச்சைக்காக சாம்ராஜ்நகர் மாவட்ட அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைக்கப்பட்டனர். அங்கு அவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
இளைஞர் சாவு
முன்னதாக இதுபற்றி போலீசார் நடத்திய விசாரணையில் விஷம் குடித்து தற்கொலைக்கு முயன்றது கொள்ளேகால் தாலுகா ஹித்தலதொட்டி கிராமத்தைச் சேர்ந்த நாகேந்திரா(வயது 24), அதே கிராமத்தைச் சேர்ந்த அம்ருதா இவாகா(25) என்பது தெரியவந்தது. ஆனால் அவர்கள் காதலர்களா?, எதற்காக அவர்கள் விஷம் குடித்து தற்கொலைக்கு முயன்றனர்? என்பது தெரியவில்லை. இதுபற்றி போலீசார் விசாரித்து வருகிறார்கள்.
இதற்கிடையே நேற்று காலையில் நாகேந்திரா சிகிச்சை பலனின்றி பரிதாபமாக இறந்தார். அம்ருதாவுக்கு தொடர்ந்து தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.