சிறுமிக்கு பாலியல் தொல்லை: கர்நாடக முன்னாள் முதல் மந்திரி எடியூரப்பா மீதான போக்சோ வழக்கு சி.ஐ.டி.க்கு மாற்றம்
|சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக முன்னாள் முதல்-மந்திரி எடியூரப்பா மீது வழக்குப்பதிவு செய்துள்ள சம்பவம் கர்நாடகாவில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
பெங்களூரு,
கர்நாடக மாநிலத்தின் முன்னாள் முதல்-மந்திரி எடியூரப்பா. இவரின் வீட்டிற்கு கடந்த மாதம் 2-ந்தேதி கல்வி தொடர்பாக உதவி கேட்டு 17 வயது சிறுமி ஒருவர் தனது தாயுடன் சென்றுள்ளார். அப்போது அந்த சிறுமியை எடியூரப்பா ஒரு தனி அறைக்கு அழைத்துச்சென்று பாலியல் தொல்லை கொடுத்ததாக காவல் நிலையத்தில் தற்போது புகார் கொடுக்கப்பட்டுள்ளது.
உனக்கு தேவையான உதவிகள் செய்கிறேன் என்றும், இதனை வெளியே சொன்னால் பிரச்சினைகளை சந்திக்க நேரிடும் என்றும் தனது மகளிடம் எடியூரப்பா கூறியதாக சிறுமியின் தாய் புகார் மனுவில் தெரிவித்துள்ளார்.
இந்த புகாரின் அடிப்படையில் பெங்களூரு சதாசிவ நகர் காவல் நிலையத்தில் எடியூரப்பா மீது போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. மேலும், முன்னாள் முதல்-மந்திரி மீது கூறப்பட்டுள்ள குற்றச்சாட்டு உண்மைதானா என்பது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
இந்த பாலியல் குற்றச்சாட்டை எடியூரப்பா மறுத்துள்ளார். மேலும் மக்களவை தேர்தலுக்கு சில வாரங்கள் உள்ள நிலையில், தற்போது என் மீது புகார் அளிக்கப்பட்டுள்ளது. தான், ஆறுதல் கூறி அனுப்பியதை, தவறாக சித்தரித்து வீடியோ வெளியிட்டு பொய் புகார் கொடுத்துள்ளதாக எடியூரப்பா விளக்கம் அளித்துள்ளார்.
இந்நிலையில், எடியூரப்பா மீதான போச்சோ வழக்கு சி.ஐ.டி.க்கு மாற்றப்பட்டுள்ளதாக கர்நாடகா டி.ஜி.பி. அலோக் மோகன் தகவல் தெரிவித்துள்ளார். மேலும் எடியூரப்பா மீது புகார் அளித்துள்ள சிறுமியின் தாய், இதற்கு முன்பு இதேபோன்று 50க்கும் மேற்பட்டோர் மீது புகார் அளித்துள்ளதாக தெரியவந்துள்ளது.
சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக முன்னாள் முதல்-மந்திரி எடியூரப்பா மீது வழக்குப்பதிவு செய்துள்ள சம்பவம் கர்நாடகாவில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.