மத்திய பிரதேச சுற்றுப்பயணம்: மழை காரணமாக பிரதமரின் நிகழ்ச்சிகளில் மாற்றம்
|மழை காரணமாக பிரதமரின் மத்திய பிரதேச சுற்றுப்பயண நிகழ்ச்சிகளில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது.
போபால்,
மத்திய பிரதேசத்தில் பருவமழை பெய்யத் தொடங்கி உள்ளது. பல்வேறு இடங்களில் கனமழை பெய்கிறது. இதற்கிடையே மத்திய பிரதேசத்தில் சுற்றுப்பயணம் செய்ய பிரதமர் மோடி திட்டமிட்டிருந்தார். இன்று (செவ்வாய்க்கிழமை) அங்குள்ள ஷாதோல் பகுதியில் சொந்த கட்சி நிகழ்ச்சியில் கலந்து கொள்ள இருந்தார். அது மழை காரணமாக ரத்து செய்யப்பட்டு உள்ளது.
இதுகுறித்து முதல் மந்திரி சிவராஜ் சிங் சவுகான், ''ஷாதோல் பகுதியில் கனமழை பெய்யும் வாய்ப்பு அதிகமுள்ளது. எனவே பிரதமர் அந்த மாவட்டத்தின் லால்பூர் மற்றும் பக்ரியா பகுதிக்கு வருவது ஒத்திவைக்கப்படுகிறது. அதுகுறித்து விரைவில் அறிவிப்பு வரும்'' என்று வீடியோ பதிவு வெளியிட்டு உள்ளார்.
இன்று காலை சிறப்பு விமானம் மூலம் மத்தியபிரதேசம் வரும் பிரதமர் மோடி, மோதிலால் நேரு ஸ்டேடியத்தில் நடைபெறும் பா.ஜ.க. நிகழ்ச்சியில் பங்கேற்பதுடன், வந்தே பாரத் ரெயிலை கொடியசைத்து தொடங்கி வைக்க இருக்கிறார். இந்த நிகழ்வுகளுக்காக பா.ஜ.க. தலைவர் ஜே.பி. நட்டா நேற்று மாலை மத்தியபிரதேசம் சென்றுவிட்டார்.