சிசோடியா மீது பொய் வழக்குகளை போட்டு, சிறையிலேயே கிடக்க செய்ய பிரதமர் திட்டம்: கெஜ்ரிவால்
|சிசோடியா மீது பல பொய்யான வழக்குகளை போட்டு, அவரை நீண்டகாலம் சிறையிலேயே இருக்கும்படி செய்ய பிரதமர் மோடி திட்டமிட்டு உள்ளார் என கெஜ்ரிவால் தெரிவித்து உள்ளார்.
புதுடெல்லி,
டெல்லி புதிய மதுபான கொள்கை ஊழல் வழக்கில் டெல்லி முன்னாள் துணை முதல்-மந்திரியான மணீஷ் சிசோடியாவிடம், கடந்த பிப்ரவரி 26-ந்தேதி சி.பி.ஐ. அலுவலகத்தில் 8 மணி நேரம் நேரடி விசாரணை நடைபெற்றது. விசாரணை முடிவில், சிசோடியாவை இரவில் சி.பி.ஐ. அதிகாரிகள் கைது செய்தனர்.
அவரை சி.பி.ஐ. காவலில் எடுத்து விசாரிக்க டெல்லி ரோஸ் அவென்யூ சிறப்பு கோர்ட்டு முதலில் மார்ச் 4-ந்தேதி வரை அனுமதி அளித்தும், பின்னர் 2-வது முறையாக மார்ச் 6-ந்தேதி வரை நீட்டித்தும் உத்தரவிட்டது. இந்நிலையில், சிசோடியாவுக்கு 20-ந்தேதி வரை நீதிமன்ற காவல் விதித்து உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. இதனால், அவர் மீண்டும் திகார் சிறைக்கு கொண்டு செல்லப்பட்டார்.
இந்நிலையில், சிசோடியா மற்றும் மற்றவர்கள் மீது சி.பி.ஐ. புதிய எப்.ஐ.ஆர். ஒன்றை இன்று பதிவு செய்து உள்ளது. 2015-ம் ஆண்டு டெல்லி அரசு பீட்பேக் யூனிட் என்ற பெயரில் அமைப்பு ஒன்றை உருவாக்கி தகவலை சேகரித்தது. இந்த தகவல், அமல்படுத்த கூடிய விசயங்களை கொண்டு இருப்பதுடன், அவை அரசுக்கு உதவ கூடும் என்பதற்காக உருவானது.
ஆனால், தகவல் சேகரிப்பதற்கான இந்த அமைப்பால் அரசு கஜானாவுக்கு ரூ.1 கோடி வரை இழப்பு ஏற்பட்டு உள்ளது என சி.பி.ஐ. குற்றச்சாட்டு தெரிவித்து உள்ளது.
இதனை தொடர்ந்து, டெல்லி முதல்-மந்திரி கெஜ்ரிவால் டுவிட்டரில் இன்று வெளியிட்ட செய்தியில், மணீஷ் சிசோடியா மீது பல பொய்யான வழக்குகளை போட்டு, அவரை நீண்டகாலம் சிறையிலேயே இருக்கும்படி செய்ய பிரதமர் மோடி திட்டமிட்டு உள்ளார். நாட்டுக்கு ஏற்பட்டு உள்ள சோகம் என கெஜ்ரிவால் தெரிவித்து உள்ளார்.