பிரச்சாரம் முடிந்த பிறகு கர்நாடக மக்களுக்கு பிரதமர் கடிதம் - தேர்தல் விதிமீறல் என காங்கிரஸ் குற்றச்சாட்டு
|பிரதமர் மோடியின் வேண்டுகோள், தேர்தல் விதிமீறல் என காங்கிரஸ் உள்ளிட்ட கட்சிகள் குற்றம் சாட்டி வருகின்றன.
புதுடெல்லி,
224 தொகுதிகளைக் கொண்ட கர்நாடக சட்டசபைக்கு 10-ந்தேதி(நாளை) சட்டசபை தேர்தல் நடைபெற உள்ளது. அரசியல் கட்சிகள் மேற்கொண்டு வந்த அணல் பறக்கும் தேர்தல் பிரச்சாரங்கள், தேர்தல் நடத்தை விதிகளின்படி நேற்று மாலையுடன் நிறைவு பெற்றன.
இந்நிலையில், பிரதமர் நரேந்திர மோடி இன்று கர்நாடக மக்களுக்கு கடிதம் எழுதினார். அதில், கர்நாடகாவை நாட்டிலேயே முதன்மை மாநிலமாக மாற்றும் பணிக்காக உங்கள் ஆசீர்வாதங்களை எதிர்பார்க்கிறேன் என கேட்டுக்கொண்டார்.
தேர்தலுக்கு முந்தைய நாளில் பிரதமர் மோடியின் இந்த வேண்டுகோள், தேர்தல் விதிமீறல் என காங்கிரஸ் உள்ளிட்ட கட்சிகள் குற்றம் சாட்டி வருகின்றன. இது தேர்தல் நடத்தை விதிகளை அப்பட்டமாக மீறும் செயல் என்று தெரிவித்ததோடு, காங்கிரஸ் கட்சி இந்த விஷயத்தை தேர்தல் ஆணையத்தின் கவனத்திற்கும் கொண்டு சென்றுள்ளது.
அதன்படி காங்கிரஸ் கட்சியின் பொதுச்செயலாளர் (கர்நாடகா பொறுப்பு) ரன்தீப் சுர்ஜேவாலா தலைமை தேர்தல் ஆணையருக்கு கடிதம் அனுப்பி உள்ளார். அதில், தேர்தல் நடத்தை விதிகளை மீறி, பிரதமர் நரேந்திர மோடி கர்நாடக வாக்காளர்களுக்கு வேண்டுகோள் விடுத்ததற்காக, அவர் மீது தேர்தல் ஆணையம் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கூறி உள்ளார். சட்டங்கள் பிரதமருக்கு பொருந்துமா இல்லையா? என்றும் அவர் கேள்வி எழுப்பி உள்ளார்.