ராகுல் பதவி பறிப்பை கண்டித்து காங்கிரசார் போராட்டம்; வயநாட்டில் பிரதமர் மோடி உருவ பொம்மை எரிப்பு
|ராகுல் காந்தியின் எம்.பி. பதவி பறிக்கப்பட்டதைக் கண்டித்து நாடெங்கும் காங்கிரசார் நடத்தும் போராட்டங்கள் தீவிரம் அடைந்து வருகின்றன. வயநாட்டில் பிரதமர் மோடி உருவப்பொம்மை எரிக்கப்பட்டது.
ராகுல் பதவி பறிப்பு
கடந்த நாடாளுமன்றத் தேர்தல் பிரசாரத்தின்போது பிரதமர் மோடியைப் பற்றி அவதூறாகப் பேசியதாக தொடரப்பட்ட வழக்கில், காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்திக்கு குஜராத் கோர்ட்டு 2 ஆண்டு சிறைத்தண்டனை விதித்து 23-ந்தேதி தீர்ப்பு அளித்தது.
அதற்கு அடுத்த நாளில், ராகுல் காந்தியின் எம்.பி. பதவி பறிக்கப்பட்டது. இதை கண்டித்து நாடு முழுவதும் காங்கிரஸ் கட்சியினர் போராட்டங்களை நடத்தி வருகின்றனர். இந்தப் போராட்டங்கள் தீவிரம் அடைந்து வருகின்றன.
வயநாட்டில் பிரதமர் உருவ பொம்மை எரிப்பு
ராகுல் காந்தியின் தொகுதியான கேரள மாநிலம், வயநாட்டில் உள்ள கல்பேட்டாவில் காங்கிரசார் நேற்று கண்டன போராட்டம் நடத்தினர். இதில், சித்திக் எம்.எல்.ஏ. உள்ளிட்ட தலைவர்கள், இளைஞர் மற்றும் மாணவர் அணியினர், காங்கிரஸ் தொண்டர்கள் ஏராளமாக கலந்துகொண்டனர்.
இந்த பேராட்டத்தின்போது, பிரதமர் மோடியின் உருவ பொம்மை எரிக்கப்பட்டது. இந்த போராட்டத்தில் கலந்து கொண்டவர்களை போலீசார் கைது செய்து பஸ்களில் ஏற்றிச்சென்றனர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.
கொச்சி நகரத்தில் காங்கிரஸ் கொடிகளை ஏந்தி வந்து பெண்கள் போராட்டம் நடத்தினர். அவர்கள் ராகுல் காந்தியின் பதவி பறிப்பைக் கண்டித்து கோஷங்களை எழுப்பினர்.
ரெயில் மறியல்
சண்டிகாரில் காங்கிரசார் புதுடெல்லி-சண்டிகார் சதாப்தி ரெயிலை நிறுத்தி மறியல் போராட்டம் நடத்தினர்.
மராட்டிய மாநிலத்தில், மும்பையில் மாநில சட்டசபைக்கு வெளியே காங்கிரஸ் கூட்டணி எம்.எல்.ஏ.க்கள் வாய்களில் ரிப்பனைக் கட்டி நூதன முறையில் போராட்டம் நடத்தினர்.
புனே, நாசிக் உள்ளிட்ட பல நகரங்களில் காங்கிரஸ் தொண்டர்கள் போராட்டம் நடத்தினர். போராட்டத்தில் கலந்துகொண்டவர்கள் பிரதமர் மோடிக்கு எதிராகவும், பா.ஜ.க.வுக்கு எதிராகவும் கோஷங்களை முழங்கினர்.
மத்திய பிரதேசத்தில் குவாலியர் நகரில் பா.ஜ.க. உருவபொம்மை எரிப்பு, சாலை மறியல் போராட்டம் நடந்தது. ரேவாவில் கண்டன ஊர்வலம் நடைபெற்றது.
வாய்ப்பூட்டு போராட்டம்
போபால் நகரில் வாய்களில் துணி கட்டி பூட்டு போட்டு காங்கிரஸ் நடத்திய போராட்டம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
இமாசல பிரதேசத்தில் பல இடங்களில் காங்கிரஸ் கட்சித்தொண்டர்கள், ராகுல் பதவி பறிப்பைக் கண்டிக்கும் வகையில் கோஷங்களை எழுப்பி போராட்டங்களை நடத்தினர்.
சிம்லாவில் நடந்த பேராட்டத்தில் திரளான பெண்கள் வாய்களில் கருப்புத்துணிகளைக் கட்டியவாறு கோஷங்களை எழுப்பி ஆர்ப்பாட்டம் நடத்தினர்.
டெல்லியை அடுத்த குருகிராமில் காங்கிரஸ் தொண்டர்கள் சாலைகளில் டயர்களை கொளுத்திப்போட்டு சாலை மறியலில் ஈடுபட்டதால் பெரும் பரபரப்பு நிலவியது.
கவர்னர் மாளிகை முன்பாக....
மேற்கு வங்காள மாநிலத்தின் தலைநகர் கொல்கத்தாவில், கவர்னர் மாளிகை முன்பாக இளைஞர் காங்கிரசார் கைகளில் பதாகைகளை ஏந்தி வந்து கோஷங்களைப் போட்டு போராட்டம் நடத்தினர்.
அவர்களை போலீசார் கைது செய்து வாகனங்களில் ஏற்றிச்சென்றனர். அந்த மாநிலத்தில் முர்சிதாபாத், பர்தாமன் பர்பா, பர்தாமன் பாஸ்சிம், ஜல்பாய்குரி உள்ளிட்ட பல இடங்களிலும் ராகுல் காந்தி பதவி பறிப்பைக் கண்டித்து போராட்டங்கள் நடைபெற்றன.
அசாமில் தடுப்புவேலிகள் தகர்ப்பு
அசாமில் கவுகாத்தியில் எம்.எல்.ஏ.க்கள் விடுதி அருகே இருந்து கவர்னர் மாளிகை நோக்கி காங்கிரஸ் தலைவர்கள், எம்.எல்.ஏ.க்கள் அணிவகுத்தனர். அவர்கள் ராகுல் பதவி பறிப்பைக் கண்டித்து முழக்கங்களை எழுப்பினர். ஆனால் அவர்களை தலைமைச்செயலகம் அருகே போலீசார் தடுத்து நிறுத்தினர். இருப்பினும் அவர்கள் தடுப்பு வேலிகளைத் தகர்த்தெறிந்து முன்னேறிச்செல்ல முற்பட்டனர்.
அதைத் தொடர்ந்து எதிர்க்கட்சித் தலைவர் தேவபிரதா சைக்கியா, துணைத்தலைவர் ராக்கிபுல் உசேன் உள்ளிட்டவர்களை போலீசார் கைது செய்து பஸ்சில் ஏற்றிச்சென்றனர்.