< Back
தேசிய செய்திகள்
மாநிலங்களின் தேவைக்கு ஏற்ப கிராமப்புற சாலை திட்ட விதிகளில் மாற்றம் வேண்டும்- ராகுல் காந்தி
தேசிய செய்திகள்

மாநிலங்களின் தேவைக்கு ஏற்ப கிராமப்புற சாலை திட்ட விதிகளில் மாற்றம் வேண்டும்- ராகுல் காந்தி

தினத்தந்தி
|
3 July 2022 10:20 PM IST

மாநிலங்களின் தேவை, சூழல்களுக்கு ஏற்ப பிரதம மந்திரி கிராமப்புற சாலை திட்ட விதிகளில் நெகிழ்வுத்தன்மை வேண்டும் என்று ராகுல் காந்தி வலியுறுத்தினார்.

மலப்புரத்தில் ராகுல் காந்தி...

காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர் ராகுல் காந்தி, கேரள மாநிலத்தில் 3 நாள் சுற்றுப்பயணம் மேற்கொண்டிருந்தார். கடைசி நாளான நேற்று அவர் மலப்புரம் மாவட்டம், நிலம்பூரில் பிரதம மந்திரி கிராம சாலைத்திட்டத்தின் கீழ் (பிஎம்ஜிஎஸ்ஒய்) அமைக்கப்பட்டுள்ள சாலையை திறந்து வைத்தார்.

மேலும், மழை வெள்ளத்தில் வீட்டினை இழந்த பெண்ணுக்கு, மாநில அரசின் வாழ்வுத்திட்டத்தின் கீழ் வீடு மறுக்கப்பட்ட சூழலில், கேரள மாநில காங்கிரஸ் கட்சி சார்பில் கட்டித்தரப்பட்டுள்ள வீட்டை ராகுல் காந்தி ஒப்படைத்தார்.

விதிகளில் நெகிழ்வுத்தன்மை...

இந்த நிகழ்ச்சியில் பேசும்போது ராகுல் காந்தி கூறியதாவது:-

பிரதம மந்திரி கிராமப்புற சாலைத்திட்டத்தின் விதிமுறைகள், ஒவ்வொரு மாநிலத்தின் தனிப்பட்ட தேவைகள், சூழ்நிலைகளுக்கு ஏற்ற நெகிழ்வுத்தன்மையுடன் அமைய வேண்டும்.

எனவே இந்த விதிமுறைகளை மாற்றியமைக்கக் கோரி, மத்திய சாலை போக்குவரத்து மந்திரி நிதின் கட்காரிக்கு கடிதம் எழுதி உள்ளேன். இதைப் பரிசீலித்து நல்ல முடிவு எடுப்பார்கள் என்று நான் நம்புகிறேன். இந்த திட்டத்தின்கீழ் பராமரிக்கவும், மேம்படுத்தவும் கோரி 11 சாலைகளின் பட்டியலை நான் அளித்துள்ளேன்.

காங்கிரஸ் ஆதரவால் வீடு மறுப்பு

வெள்ளத்தில் வீடு இழந்து தவிக்கிற பெண், மாநில அரசின் வாழ்வுத்திட்டத்தின் கீழ் வீடு பெறுவதற்கு தகுதி வாய்ந்தவர் ஆவார். ஆனாலும், அவரது அரசியல் சித்தாந்தமும், ஆதரவும் காங்கிரசுக்கு ஆதரவாக அமைந்ததால் அது மறுக்கப்பட்டுள்ளது.

இவ்வாறு அவர் கூறினார்.

மலப்புரத்தின் வாந்தூர் பகுதியில் அவசர சிகிச்சை ஆம்புலன்சுகளையும் அவர் தொடங்கி வைத்தார். தொடர்ந்து பல்வேறு நிகழ்ச்சிகளில் ராகுல் காந்தி கலந்து கொண்டார்.

இந்தியாவின் வெற்றி...

மலப்புரம் மாவட்டத்தில், சந்தோஷ் டிராபி கால்பந்து போட்டியில் வெற்றி பெற்றவர்களை கவுரவித்து, வீரர்களுக்கு ஜெர்சி (சீருடை) வழங்கும் விழாவில் ராகுல் காந்தி கலந்து கொண்டு பேசினார்.

அப்போது அவர், "கால்பந்தாகட்டும், கிரிக்கெட்டாகட்டும், வெற்றி பெறுவதற்கு அணியின் அனைத்து வீரர்களும் ஒன்றிணைந்து ஒரு குழுவாக விளையாட வேண்டும். இந்தியாவும் ஒரு அணிதான். அதன் வெற்றி, அதன் அனைத்து மக்கள், அனைத்து மதங்கள், அனைத்து மொழிகள், அனைத்து மாநிலங்கள், அனைத்து சமூகங்கள் ஒன்றிணைவதின் அடிப்படையில்தான் அமைகிறது" என கூறினார்.

மேலும் செய்திகள்