பணி ஒதுக்க ஆன்லைனில் லஞ்சம் வாங்கியதாக புகார்; பி.எம்.டி.சி. அதிகாரிகள் 10 பேர் பணி இடைநீக்கம்
|பணி ஒதுக்க ஆன்லைனில் லஞ்சம் வாங்கிய புகாரில் பி.எம்.டி.சி. அதிகாரிகள் 10 பேர் பணி இடைநீக்கம் செய்யப்பட்டுள்ளனர். மேலும் கட்டுப்பாட்டு அலுவலர்கள் இருவர் இடமாற்றம் செய்யப்பட்டனர்.
பெங்களூரு:
பணி ஒதுக்க லஞ்சம்
பெங்களூரு மாநகர போக்குவரத்து கழகம் (பி.எம்.டி.சி.) சார்பில் பெங்களூருவில் மாநகர பஸ்கள் இயக்கப்பட்டு வருகிறது. சுமார் 7 ஆயிரம் பஸ்கள் இயக்கப்பட்டு வருகிறது. இங்கு பணியாளர்கள், டிரைவர், கண்டக்டர்கள் என 15 ஆயிரம் ேபர் பணியாற்றி வருகிறார்கள். இந்த நிலையில் பெங்களூரு மாநகர போக்குவரத்து கழக கோட்ட கட்டுப்பாட்டு அதிகாரிகளாக ஜெகதீஷ், சந்திரசேகர் ஆகியோர் பணியாற்றி வருகிறார்கள்.
நடத்துனர்கள், டிரைவர்களுக்கு பணி ஒதுக்குவது அவர்களின் வேலை ஆகும். இந்த நிலையில் நடத்துனர்கள், டிரைவர்களிடம் லஞ்சம் வாங்கி கொண்டு அவர்களுக்கு அந்த அதிகாரிகள் பணி ஒதுக்கீடு செய்து வந்துள்ளனர். அந்த லஞ்ச பணத்தை கூகுள் பே, போன்பே போன்ற செல்போன் செயலிகள் மூலம் அவர்கள் பெற்று வந்துள்ளனர். அதாவது ரூ.500 முதல் ரூ.2,500 வரை அவர்கள் இருவரும் ஊழியர்களிடம் இருந்து பணி ஒதுக்கீடு செய்து வந்துள்ளனர்.
ஊழியர் தற்கொலை
இந்த நிலையில் பி.எம்.டி.சி. ஊழியரான ஒலே பசப்பா என்பவர் தனக்கு விருப்பமான வழித்தடத்தில் பணி கேட்டுள்ளார். ஆனால் அதற்கு அதிகாரிகள் இருவரும் மறுத்துள்ளனர். மேலும் லஞ்சம் கொடுத்தால் பணி ஒதுக்குவதாக கூறியதாக தெரிகிறது.
இதனால் பாதிக்கப்பட்ட அவர், இந்த லஞ்ச விவகாரம் குறித்து கடிதம் எழுதி வைத்துவிட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார். அந்த புகார் பற்றி பி.எம்.டி.சி. நிர்வாக இயக்குனர் சத்தியவதி உத்தரவின் பேரில் அதிகாரிகள் குழுவினர் விசாரணை நடத்தினர். இதில் அவர்கள் மீதான புகார் உறுதியானதாக சொல்லப்படுகிறது. இந்த லஞ்ச பணம் அங்கு பணியாற்றும் 90-க்கும் மேற்பட்ட அதிகாரிகளுக்கு பகிர்ந்து அளிக்கப்பட்டு உள்ளதும் தெரியவந்தது.
10 அதிகாரிகள் இடைநீக்கம்
இதையடுத்து பி.எம்.டி.சி.யில் பணியாற்றி வந்த ரமேஷ், முகமது ரபி, சந்தன், இப்ராகிம் சபியுல்லா, கோவர்தன், சரவணா உள்பட 10 அதிகாரிகளை பணி இடைநீக்கம் செய்து பி.எம்.டி.சி. நிர்வாக இயக்குனர் அதிரடி உத்தரவிட்டுள்ளார். மேலும் லஞ்ச புகாரில் சிக்கிய கட்டுப்பாட்டு அதிகாரி ஜெகதீஷ் ராமநகர் அரசு போக்குவரத்து கழக பிரிவுக்கும், மற்றொரு அதிகாரி சந்திரசேகர் கலபுரகி அரசு போக்குவரத்து கழக பிரிவுக்கும் அதிரடியாக இடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.
இந்த புகார் குறித்து விசாரணை நடைபெற்று வருகிறது. இந்த விவகாரம் பெரும் பரபரப்பையும், அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது.