2019-ம் ஆண்டு முதல் பிரதமர் 21 வெளிநாட்டுப் பயணங்கள் மேற்கொண்டுள்ளார் - ரூ.22.76 கோடி செலவு
|2019-ம் ஆண்டு முதல் பிரதமர் மோடி 21 வெளிநாட்டுப் பயணங்களை மேற்கொண்டுள்ளதாகவும் இதற்காக ரூ.22.76 கோடி ரூபாய் செலவிடப்பட்டுள்ளது என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
புதுடெல்லி,
கடந்த 2019-ம் ஆண்டு முதல் பிரதமர் நரேந்திர மோடி 21 வெளிநாட்டுப் பயணங்களை மேற்கொண்டுள்ளதாகவும் இதற்காக ரூ.22.76 கோடி செலவிடப்பட்டுள்ளதாகவும் மத்திய அரசு தெரிவித்துள்ளது. இது தொடர்பாக வெளியுறவுத்துறை இணை மந்திரி வி. முரளீதரன் மாநிலங்களவையில் எழுத்துப்பூர்வமாக அளித்த பதிலில் கூறியிருப்பதாவது:-
2019-ம் ஆண்டு முதல் பிரதமர் நரேந்திர மோடி 21 வெளிநாட்டு பயணங்களை மேற்கொண்டுள்ளார். இந்த பயணங்களுக்காக ரூ.22,76,76,934 செலவிடப்பட்டுள்ளது. கடந்த 2019 முதல், பிரதமர் ஜப்பானுக்கு மூன்று முறையும், அமெரிக்கா மற்றும் ஐக்கிய அரபு அமீரகத்திற்கு இரண்டு முறையும் சென்றுள்ளார்.
முன்னாள் ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் கடந்த 2019-ம் ஆண்டு முதல் 7 வெளிநாட்டு பயணங்களை மேற்கொண்டுள்ளார். தற்போதைய ஜனாதிபதி திரவுபதி முர்மு கடந்த ஆண்டு செப்டம்பரில் இங்கிலாந்துக்கு பயணம் மேற்கொண்டார். ஜனாதிபதியின் வெளிநாட்டு பயணங்களுக்காக ரூ.6,24,31,424 ரூபாய் செலவிடப்பட்டுள்ளது.
கடந்த 2019-ம் ஆண்டு முதல் மத்திய வெளியுறவுத்துறை மந்திரி ஜெய்சங்கர் 86 வெளிநாட்டு பயணங்களை மேற்கொண்டுள்ளார். இதற்காக ரூ.20,87,01,475 ரூபாய் செலவாகியுள்ளது.
இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.