உ.பி. ரெயில் விபத்துக்கு பிரதமரும், ரெயில்வே மந்திரியும் பொறுப்பேற்க வேண்டும் - காங்கிரஸ்
|ரெயில் போக்குவரத்தில் பாதுகாப்பை உறுதி செய்ய வேண்டுமென மல்லிகார்ஜுன கார்கே கோரிக்கை விடுத்துள்ளார்.
புதுடெல்லி,
சண்டிகரில் இருந்து அசாமின் திப்ரூகர் செல்லும் சண்டிகர்- திப்ரூகர் எக்ஸ்பிரஸ் ரெயில் இன்று பிற்பகல் 2 மணியளவில் உத்தரப்பிரதேசத்தின் கோண்டா மாவட்டத்தில் உள்ள மோதிகஞ்ச் ஜிலாகி என்ற இடத்தில் தடம் புரண்டது. இந்த விபத்தில் 4 பயணிகள் உயிரிழந்துள்ளனர். 60 பயணிகள் காயம் அடைந்துள்ளனர். மீட்பு பணிகள் தொடர்ந்து நடைபெற்று வருகிறது.
இந்த நிலையில், இந்த ரெயில் விபத்துக்கு பிரதமர் மோடியும், ரெயில்வே மந்திரி அஸ்வினி வைஷ்ணவும் பொறுப்பேற்க வேண்டும் என காங்கிரஸ் தெரிவித்துள்ளது. இது தொடர்பாக காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே கூறுகையில்,
உத்தரபிரதேசத்தில் சண்டிகர்-திப்ரரூகர் எக்ஸ்பிரஸ் ரெயில் தடம் புரண்டது, மோடி அரசு எப்படி செயல்படுகிறது என்பதற்கு மற்றொரு உதாரணம். இறந்தவர்களின் குடும்பங்களுக்கு எங்கள் ஆழ்ந்த இரங்கல்கள்
ஒரு மாதத்திற்கு முன்பு, சீல்டா-அகர்தலா கஞ்சன்ஜங்கா எக்ஸ்பிரஸ் மீது சரக்கு ரயில் மோதியதில் 11 பேர் உயிரிழந்தனர். இதற்கு தானியங்கி சிக்னல் செயல்பாட்டின் தோல்வி, செயல்பாடுகளை நிர்வகிப்பதில் உள்ள குறைபாடுகள் மற்றும் வாக்கி-டாக்கி போன்ற முக்கியமான பாதுகாப்பு உபகரணங்கள் கிடைக்காதது ஆகியவையே காரணம் என விசாரணை அறிக்கையில் தெரியவந்துள்ளது.
பிரதமர் நரேந்திர மோடியும், ரெயில்வே மந்திரியும் தங்களது சுயவிளம்பரத்தை விட்டுவிட்டு ரெயில்வே துறையில் உள்ள பெரும் குளறுபடிகளுக்கு நேரடிப் பொறுப்பேற்க வேண்டும். ரெயில் போக்குவரத்தில் பாதுகாப்பை உறுதி செய்வதற்கும் விபத்துகளைத் தடுப்பதற்கும் இந்தியா முழுவதும் உள்ள அனைத்து வழித்தடங்களிலும் கவாச் அமைப்பை (தானியங்கி ரெயில் பாதுகாப்பு அமைப்பு) விரைவாக நிறுவப்பட வேண்டும் என்பதே எனது கட்சியின் ஒரே கோரிக்கை."
இவ்வாறு அவர் கூறியுள்ளார்.